Tuesday, November 27, 2012

தர்மம்

உங்களில் ஒருவர் பேரிச்சம்     பழத்தின் ஒரு துண்டையாவது (தர்மம்) செய்து நரக நெருப்பிலிருந்து பாதுகாத்து     கொள்ள முடியுமாயின் அதை அவர் செய்து கொள்ளட்டும் என்று நபி     அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அதியீஇப்னு ஹாதம்(ரலி)நூல்கள்: புகாரி,   முஸ்லிம்
   
    ஒவ்வொரு முஸ்லிம் மீதும்     தர்மம் செய்வது அவசியமாகிறது என்று நபி     அவர்கள் குறிப்பிட நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே ஒருவர் (தர்மம் செய்ய     எப்பொருளையும்) காணவில்லையாயின் என்று வினவ அவர் தன் கரங்களால் உழைத்து அதில்     தானும் பலன் அடைந்து மேலும் தர்மம் செய்யட்டும்” என்று நபி     அவர்கள் கூறினார்கள். நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே ஒருவர் (தர்மம் செய்ய     எப்பொருளையும்) காணவில்லையாயின் என்று வினவ ”அவர் தன் கரங்களால் உழைத்து     அதில் தானும் பலன் அடைந்து மேலும் தர்மம் செய்யட்டும்” என்று நபி அவர்கள் கூறினார்கள். நபித்தோழாகள் ‘அவர் அதற்கும் இயலாவிடின் என்று வினவ அவர்     நன்மையை (பிறருக்கு) ஏவட்டும் என்று நபி     அவர்கள் கூறினார்கள். நபித்தோழர்கள் அம்மனிதர் அதற்கும் இயலாவிடின் என்று வினவ     ”அவர் (பிறருக்கு) தீமை செய்வதை விட்டு தவிர்த்து கொள்ளட்டும். அதுவே     தர்மமாகும் என்று நபி     அவர்கள் விளக்கமளித்தார்கள். அறிவிப்பவர்: அபூமூஸா அல்அஷ்அரி(ரலி)நூல்கள்:     புகாரி, முஸ்லிம், நஸயீ
   
    நபி     அவர்கள் என்னிடம் கூறினார்கள். ”நான் உமக்கு நன்மையானவற்றின் வாயில்களை     அறிவிக்கட்டுமா? நோன்பு கேடயமாகும் மேலும் தண்ணீர் நெருப்பை அணைப்பது போல தான     தர்மம் பாவத்தை அழித்துவிடும் என்று நபி     அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: முஅத் இப்னு ஜபல்(ரலி)நூல்கள்: திர்மிதி,     நஸயீ, அஹ்மத்
   
    உங்களில் யார் இன்று நோன்பு     நோற்றிருக்கிறார் என்று நபி     அவர்கள் குறிப்பிட அதற்கு அபூபக்ர்(ரலி) அவர்கள் நான் என்று கூறினார்கள்.    உங்களில் யார் இன்று ஜனாஸாவைப் பின் தொடர்ந்திருக்கிறார் என்று நபி     அவர்கள் குறிப்பிட அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் நான் என்று கூறினார்கள்.     உங்களில் யார் இன்று மிஸ்கீனுக்கு உணவு அளித்திருக்கின்றார் என்று நபி     அவர்கள் குறிப்பிட அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் நான் என்று கூறினார்கள்     உங்களில் யார் இன்று நோயாளியை சந்தித்தார் என்று நபி     அவர்கள் குறிப்பிட அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் நான் என்று கூறினார்கள்     இவையனைத்தும் ஒரு மனிதர் விஷயத்தில் ஒன்றுபட்டிருக்குமானால் அவர்     சொர்க்கத்தில் புகுவார் என்று நபி     அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: முஸ்லிம், நஸயி
   
    தர்மம் செல்வத்தைக் குறைத்து     விடுவதில்லை மன்னிப்பதன் மூலம் அல்லாஹ் மதிப்பை உயர்த்தாமாலிருப்பதில்லை.     அல்லாஹ்வுக்காக யாரேனும் பணிவுடன் நடந்தால் அவரை அல்லாஹ்     உயர்த்தாமலிருப்பதில்லை. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: முஸ்லிம்,     திர்மிதி
   
    ஒரு மனிதன் இறந்துவிட்டால்     மூன்று செயல்களைத்தவிர மற்றவை அவனை விட்டு அறுந்துவிடுகின்றன. நிலையான தர்மம்     ,பிறருக்கு பயன்தரக்கூடிய கல்வி, தன் தந்தைக்காக பிரார்த்திக்கும் நற்பிள்ளை.     அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி, திர்மிதி
   
    விபசாரியான ஒரு பெண் ஒரு     கிணற்றின் விளிம்பில் தன் நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டிருந்த ஒரு நாயைக்     கடந்து சென்றாள் அந்த நாயை தாகம் சாகடிக்கவிருந்தது. அதைக்கண்ட அப்பெண் உடனே     தன் காலுறையைக் கழற்றி அதைத் தன் முந்தானையில் கட்டி கிணற்று நீரை இறைத்து    அதற்கு கொடுத்தாள் ஆகவே அது பிழைத்து கொண்டது. அவள் ஒர் உயிருக்குக் காட்டிய     இந்த கருணையின் காரணத்தினால் அவளுக்கு பாவமன்னிப்பு வழங்கப்பட்டது.     அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்
   
    ஒருவர் நபி     அவர்களிடம் வந்து; அல்லாஹ்வின் தூதரே! அதிக நன்மையுள்ள தர்மம் எது?     எனக்கேட்டார் ”நீர் ஆரோக்கிய முள்ளவராகவும் பொருள் தேவை உடையவராகவும்     வருமையைப் பயப்படுபவராகவும், செல்வத்தில் ஆசை உள்ளவராகவும் இருக்கும் நிலையில்     தர்மம் செய்வதே அதிக நன்மையுள்ளதாகும். எனவே (தர்மம் செய்வதை) உயிர் தொண்டைக்     குழியை நெருங்கும் வரை தாமதப்படுத்த வேண்டாம். அந்நிலையில் இன்னாருக்கு இவ்வளவு     ‘இன்னாருக்கு இவ்வளவு’ என்று கூறுவதிலும் அர்த்தமில்லை. ஏனெனில் அப்போது உமது  பொருட்களை மற்றவர்களுக்கென்று ஆகிவிட்டிருக்குமே! என நபி     அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்
   
    தர்மத்தில் சிறந்தது எது?     என்று மக்கள் நபி     அவர்களிடம் கேட்டதற்கு குறைந்த செல்வமே உள்ளவர் அதிலிருந்து தர்மம் செய்வது     நீங்கள் உங்கள் தர்மத்தை உங்கள் வீட்டாரிலிருந்து தொடங்குங்கள் என்று நபி     அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்கள்: அபூதாவூத், அஹ்மத்
   
    உபரியான தான தர்மங்களை அது     செல்வமாகவோ அல்லது தானிய வர்க்கமாகவோ அல்லது அசைவற்ற பொருளாகவோ இருந்தால்     முதலில் மனைவி, மக்கள் உறவினர், அண்டைவீட்டார் என ஆரம்பித்து தான தர்மம் செய்ய     ஆரம்பிப்பீராக! என்று நபி     அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்
   
    ஒரு மனிதர் நபி     அவர்களிடம் ”என் தாயார் திடீரென இறந்துவிட்டார். அவர் (மரணமடையும் முன்புபே)     முடிந்திருந்தால் தர்மம் செய்யச் சொல்லியிருந்திருப்பார் என்று நான்     கருதுகிறேன். அவர் சார்பாக நான் தர்மம் செய்யலாமா? என்று கேட்டார். நபி     அவர்கள் ”ஆம்” சார்பாக தர்மம் செய்” என்று கூறினார்கள். அறிவிப்பவர்:     ஆயிஷா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், முஅத்தா

சொர்க்த்தில் துணைகள்!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்தஹு !!
இன்ஷா அல்லாஹ் ,வாழுவோம் சத்திய கொள்கையில், மரணிப்போம் சத்திய கொள்கையிலேயே —

“சொர்க்கத்தில் தூய்மையான துணைகள் உள்ளனர்” என்று திருக்குர்ஆன் பல்வேறு இடங்களில் கூறுகின்றது. சில இடங்களில் பெண்துணைகள் உள்ளனர் என்றும் கூறப்படுகின்றது. 
அப்படியானால் நல்லறம் செய்த பெண்களுக்கு ஆண்துணைகள் இல்லையா? என்ற கேள்வி எழும்.
 இதற்குரிய விடையை அறிவதற்கு அரபு மொழியின் ஓர் இலக்கண விதியை அறிந்து கொள்ள வேண்டும்.
தமிழ் மொழி உள்ளிட்ட பல மொழிகளில் படர்க்கையில் ஒருமையாகக் கூறும் போது மட்டுமே ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனிச் சொல்லமைப்பு உள்ளது. தமிழில் அவன் என்பது ஆணையும், அவள் என்பது பெண்ணையும் குறிக்கும்.

படர்க்கைப் பன்மையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவாக “அவர்கள்’ எனக் கூறுகிறோம்.
அரபு மொழியில் படர்க்கைப் பன்மையிலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி சொல்லமைப்பு உள்ளது.
அது போல் முன்னிலையில் பேசும் போது தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் “நீ’ “நீங்கள்’ என்று கூறுகிறோம். இது ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொதுவானது.

ஆனால் அரபு மொழியில் முன்னிலையாகப் பேசுவதற்கு இரு பாலருக்கும் தனித்தனி சொல்லமைப்பு உள்ளது.
தமிழ் மொழியில் தொழுங்கள் என்று கூறினால் ஆண்கள், பெண்கள் ஆகிய இரு பாலரையும் நோக்கிப் பேசுகிறது என்று புரிந்து கொள்வோம்.
ஆனால் அரபி மொழியில் இப்படி இரு பாலரையும் குறிக்க தனிச் சொல்லமைப்பு இல்லை.


“ஸல்லூ’ என்று அரபு மொழியில் கூறினால் “தொழுங்கள்’ என்று பொதுவாகப் பொருள் செய்ய முடியாது. ஆண்களை நோக்கித் தொழச் சொல்லும் போது மட்டுமே இவ்வாறு கூறமுடியும்.
பெண்களை நோக்கி “தொழுங்கள்’ என்று கூறுவதாக இருந்தால் “ஸல்லீன’ எனக் கூற வேண்டும்.


அரபு மொழியில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவாகக் கட்டளை இடுவதாக இருந்தால் “ஆண்களே தொழுங்கள்! பெண்களே தொழுங்கள்” என்று இரு தடவை கூற வேண்டும்.

திருக்குர்ஆனில் உள்ள அனைத்துமே ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானது என்பதால் அனைத்துக் கட்டளைகளையும் இப்படி இரண்டிரண்டு தடவை கூற வேண்டும்
இரண்டு தடவை கூறினால் தற்போது உள்ள குர்ஆன் போல் இரு மடங்காக ஆகி விடும். மேலும் அரபு அல்லாத மொழியில் மாற்றம் செய்யும் போது இந்த நடை வெறுப்பை ஏற்படுத்தி விடும்.


சுருக்கமாகவும் இருக்க வேண்டும்; எந்த மொழியில் மொழி பெயர்த்தாலும் அந்த மொழியில் இருந்து அன்னியப்பட்டு விடாமலும் இருக்க வேண்டும்; ஆண்களையும் பெண்களையும் உள்ளடக்கும் வகையிலும் இருக்க வேண்டும் என்பதற்காகத் திருக்குர்ஆன் ஒரு மாற்று வழியைத் தேர்வு செய்துள்ளது.
அதாவது அனைத்துக் கட்டளைகளையும், அறிவுரைகளையும் ஆண்களைக் குறிக்கும் வகையில் பேசிவிட்டு, “ஆண்களுக்குச் சொன்ன அனைத்தும் பெண்களுக்கும் உள்ளன’ என்று ஒன்றிரண்டு வசனங்களில் மட்டும் கூறுவது தான் அந்த வழிமுறை.

நபிகள் நாயகம் (ஸல்) காலத்திலேயே பெண்கள் இது பற்றி நபியவர்களிடம் கேட்டனர். “ஆண்களைப் பற்றித் தானே திருக்குர்ஆன் கூறுகிறது. பெண்களைப் பற்றிக் கூறுவது இல்லையே ஏன்?” என்று உம்மு ஸலமா (ரலி) கேட்ட போது, திருக்குர்ஆனின் 33:35 வசனம் அருளப்பட்டது. (நூல்: அஹ்மத் 25363)

இவ்வசனத்தில் (33:35) ஆண்கள், பெண்கள் அனைவருக்கும் சமமான தக்க பரிசுகள் உண்டு எனக் கூறப்படுகிறது. அதாவது ஆண்களுக்குக் கூறப்படும் அனைத்தும் பெண்களுக்கும் உண்டு என்ற கருத்தில் இவ்வசனம் அமைந்துள்ளது.

4:124 வசனத்தில் நல்லறம் செய்த ஆணோ, பெண்ணோ அணுவளவும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள் எனக் கூறப்படுகிறது.
இதே போன்ற கருத்தில் திருக்குர்ஆனின் 3:195, 4:124, 16:97, 40:40 ஆகிய வசனங்களும் அமைந்துள்ளன.


ஆண்களும், பெண்களும் இறைவனுக்கு அஞ்சி நல்லறங்கள் செய்திருக்கும் போது, ஆண்களுக்கு மட்டும் கூடுதல் பரிசுகள் வழங்குவது அநீதியாகும்.
மறுமையில் பரிசு வழங்கும் போது “அனைவரும் அதில் திருப்தி அடைவார்கள்’ என்று அல்லாஹ் கூறுகின்றான். அனைவரும் என்பதில் ஆண்களைப் போலவே பெண்களும் அடங்குவார்கள் என்பதில் ஐயமில்லை.
(பார்க்க: திருக்குர்ஆன் 5:119; 9:100; 22:59; 58:22; 88:9; 98:8)

எனவே அல்லாஹ், ஆண்களுக்கு மட்டும் துணைவிகளைக் கொடுத்து விட்டு, பெண்களுக்குத் துணை இல்லாமல் விடமாட்டான்.
இவ்வுலகில் ஒரு பெண்ணுக்கு யார் கணவராக இருந்தாரோ அவரே சொர்க்கத்தில் கணவராக அமைவார் என்பது கட்டாயமில்லை. இதற்கு ஏற்கத்தக்க எந்தச் சான்றும் இல்லை.


கணவன் கெட்டவனாகவும், மனைவி நல்லவளாகவும் இருக்கும் போது என்ன நிலை? இரண்டு கணவர்களுக்கு வாழ்க்கைப்பட்டு இரு கணவர்களும் நல்லவர்களாக இருந்தால் அவள் யாருடன் சேர்க்கப்படுவாள்? என்றெல்லாம் பல கேள்விகளும் இக்கூற்றினால் எழும்.
“இங்கிருந்த துணையை விடச் சிறந்த துணையைக் கொடு” என்று இறந்தவருக்காகப் பிரார்த்திக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழி காட்டியுள்ளனர் (நூற்கள்: முஸ்லிம் 1525, அஹ்மது 25417).
ஆண்கள், பெண்கள் என்ற வித்தியாசமின்றி இந்தப் பிரார்த்தனை செய்வது நபி வழியாகும்.


இங்கிருப்பதை விடச் சிறந்த துணை மறுமையில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் உண்டு என்பதை இதிலிருந்து அறியலாம்.
எத்தனையோ கட்டளைகள் ஆண்களை மட்டும் குறிக்கும் வகையில் இருந்தாலும் அக்கட்டளைகள் பெண்களையும் குறிக்கும் என்று மேற்கண்ட வசனங்களைச் சான்றாகக் கொண்டு அறிந்து கொள்கிறோம்.

அது போல் தான் சொர்க்கத்தில் கிடைக்கும் ஜோடிகள் குறித்தும் ஆண் பாலாகக் கூறப்பட்டுள்ளது. அது பெண் பாலுக்கும் பொருந்தும் என்று அதே வசனங்களைச் சான்றாகக் கொண்டு முடிவு செய்வதே ஏற்புடையதும், இறைவனின் நீதிக்கு உகந்ததுமாகும்.


(இக்குறிப்புக்குரிய வசனங்கள்: 2:25, 3:15, 4:57, 36:56, 37:48, 38:52, 44:54, 52:20, 55:56, 55:70, 56:22, 56:35, 78:33)

Thursday, October 13, 2011

தொழுகையை ‘களா’வாக ஆக்க முடியுமா?

இன்று பலரும் சர்வ சாதாரணமாகத் தொழுகைகளை அதற்குரிய நேரத்தில் தொழாமல் “களா’வாக ஆக்கிக் கொண்டி ருக்கின்றனர். ஒரு சில காரணங்களுக்காக தவிர வேறு எந்தக் காரணத்துக்காகவும் தொழுகையை “களா’வாக, ஆக்க முடியாது. அப்படி ஒரு நிலமை இஸ்லாத்தில் அறவே கிடையாது.

தூங்குபவன் விழிக்கும் வரையிலும், பைத்தியக்காரன், பைத்தியம் தெளியும் வரையிலும், சிறுவன் பருவமடையும் வரையிலும் (செய்கின்ற செயல்களுக்காக) விசாரிக்கப்பட மாட்டார்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரழி) நூல்கள்: அபூதாவூது, திர்மிதீ, அஹ்மத், நஸாயீ, இப்னுமாஜா, ஹாகிம்.

கடந்த காலங்களில் விடுபட்ட தொழுகைகளை எப்படி “களா’ செய்வது என்று கேட்டிருக்கின்றீர்கள். இது பற்றி விரிவாகவும் விளக்க மாகவும் சொல்ல வேண்டும்.

“களா’வாக ஆக்குவதையும், களா தொழுகையையும் அனுமதிப்பவர்கள் அதற்கு நேரடியான குர்ஆன் வசனத்தையோ, ஹதீஸையோ எடுத்துக் கூறவில்லை. மாறாக அவர்கள் நோன்பு பற்றி அல்லாஹ் கூறுகின்ற வசனத்திலிருந்து தான் களா தொழுகையை நியாயப்படுத்துகின்றனர்.

“பயணிகளாகவோ, நோயுற்றவர்களாகவோ நீங்கள் இருந்தால் அந்த நோன்பை வேறு நாட்களில் நோற்கலாம்” என்று அல்லாஹ் திருகுர்ஆனின் 2:185 வசனத்தில் குறிப்பிடுகிறான்.

ரமழானில் மட்டுமே நோற்க வேண்டிய நோன்பை, அந்த மாதத்தில் வைக்காதவர்கள் வேறு நாட்களில் நோற்கும்படி அல்லாஹ் அனுமதிக்கிறான். அதுபோல உரிய நேரத்தில் தொழப்படாத தொழுகைகளை வேறு நேரத்தில் தொழுது கொள்ளலாம் என்பது அவர்களின் வாதம்.

இந்த வாதம் எந்த விதத்திலும் சரியானதல்ல. நோன்பை வேறு மாதங்களில் நோற்கலாம் என்று கூறிய அல்லாஹ் தொழுகையை வேறு நேரத்தில் தொழலாம் என்று கூறுகின்றானா? என்றால் இல்லை. ஒரு இடத்திலும் கூறவில்லை.

மாறாக அல்லாஹ் பின் வருமாறு குறிப்பிடுகிறான்:

”மூமின்கள் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாக தொழுகை உள்ளது”. (அல்குர்ஆன் 4:103)

தொழுகையை அதற்கென குறிக்கப்பட்ட நேரத்தில் தான் தொழுதாக வேண்டும் என்று அல்லாஹ் தெளிவாகக் கூறிவிட்டதால் நோன்புடன் தொழுகையை ஒப்பிட முடியாது.

இன்னொரு வேறுபாட்டையும் நாம் காண்போம்.
“”மாதவிடாய்க் காலங்களில் நாங்கள் விட்டு விட்ட நோன்புகளை “”களா” செய்யும்படி நாங்கள் கட்டளை இடப்பட்டிருந்தோம். ஆனால் அதே காலங்களில் விடுபட்ட தொழுகைகளை “”களா” செய்யும்படி நாங்கள் ஏவப்படவில்லை”. அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரழி) நூல்: முஸ்லிம்.

“”களா” விஷயத்தில் நோன்பும், தொழுகையும் வெவ்வேறானவை என்பதை இந்த ஹதீஸ் நமக்கு உணர்த்துகின்றது. நமது இஷ்டத்திற்கு காலம் கடத்திவிட்டு நாம் விரும்புகின்ற எந்த நேரத்திலாவது அதை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்ற நிலை இஸ்லாத்தில் அறவே கிடையாது.

இன்னொரு வேறுபாட்டைக் காண்போம்.
நோன்பு என்பது எல்லா மாந்தருக்கும் ஒரே மாதிரியாக செய்ய வேண்டிய கடமை.மாற்று முறை எதுவும் கிடையாது. அதனால் அதை நிறைவேற்ற இயலாத நோயாளிகளாக நோன்பை நோயுற்ற நாட்களில் நோற்க இயலாது போகலாம்.

ஆனால் தொழுகையைப் பொறுத்த வரை அந்த நிலமை இல்லை. நின்று தொழ முடியவில்லை என்று காரணம் கூறி காலதாமதப் படுத்த முடியாது.

“எனக்கு ஏற்பட்ட நோயின் காரணமாக (என்னால் தொழ முடியாமலிருப்பதைப் பற்றி) நபி(ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன் “”நின்று தொழு” அதற்கு இயலாவிட்டால் உட்கார்ந்து தொழு. அதற்கும் இயலாவிட்டால் படுத்துத் தொழு!” என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: இம்ரான் இப்னு ஹுஸைன்(ரழி) நூல்கள்: புகாரி, அபூதாவூது, அஹ்மத், இப்னுமாஜா, திர்மிதீ, நஸாயீ.

எனவே இயலாமையைக் காரணம் கூறி தொழுகையை களாவாக ஆக்க முடியாது. பயணத்திலிருப்பவன் பட்டினியாகப் பயணம் மேற்கொள்ள முடியாது என்பதால் நோன் புக்குச் சலுகை அளிக்கப்பட்டது. ஆனால் தொழுகையைப் பொறுத்து அந்த அனுமதி கிடையாது.

நான்கு ரகாஅத் தொழுகைகளை இரண்டு ரகஅத்களாக குறைத்துக் கொள்ளத்தான் அனுமதிக்கின்றான் அல்லாஹ். (அல்குர்ஆன் 4:101)

ஆக நோன்புக்கு இருப்பது போன்ற “களா’ என்பது தொழுகைக்குக் கிடையாது என்பதை நாம் தெளிவாக உணரலாம். மனித வாழ்வில் ஏற்படுகின்ற எந்தப் பிரச்சனைக்காகவும் தொழுகையைப் பிற்படுத்த முடியாது. போர்க்களத்தில் கூட ஒரு பிரிவினர் போர் செய்யும் போது, இன்னொரு பிரிவினர் தொழ வேண்டும். பின்னர் இவர்கள் போர் செய்யும் போது அவர்கள் தொழ வேண்டும் என்பதைத் திருகுர்ஆனின் 4:102 வசனம் குறிப்பிடுகின்றது. “களா’ செய்ய அனுமதி இருக்குமானால் இந்த இக்கட்டான கட்டத்தில் களா செய்ய இஸ்லாம் அனுமதித்திருக்கும். ஆனால் இந்தக் கட்டத்திலும் “களா’வை அல்லாஹ் அனுமதிக்கவில்லை.

பிரயாணம் செய்து கொண்டிருக்கும்போது, ஓர் இடத்தில் நின்று தொழுதால் எதிரிகளால் ஏதேனும் ஆபத்து வந்து விடுமென்று அஞ்சினால் அப்போதும் தொழுகையைக் களாவாக ஆக்க முடியாது. மாறாக நடந்து கொண்டோ, வாகனத்தில் பயணம் செய்து கொண்டோ தொழுதாக வேண்டும் என்பதை திருகுர்ஆனின் 2:239 வசனம் குறிப்பிடுகின்றது.

ஒளூ செய்வதற்குத் தண்ணீரைப் பயன்படுத்த இயலவில்லை என்றும் காரணம் கூறி களாவாக்க முடியாது. ஏனெனில் தண்ணீர் கிடைக்காதவர்கள் “தயம்மம்’ செய்து தொழும்படி திருகுர்ஆனின் 4:43 வசனம் கட்டளை இடுகின்றது.

பிரயாணம் செய்து கொண்டிருக்கும்போது எப்படியும் குறிப்பிட்ட தொழுகையை நிறைவேற்ற முடியாது போகும் என்றும் கூற முடியாது. லுஹரையும், அஸரையும் ஒரே நேரத்தில் மஃரிபையும், இஷாவையும் ஒரே நேரத்தில் களா இல்லாமலே தொழவும் இஸ்லாம் அனுமதிக்கின்றது.

ஆக எந்தக் காரணத்திற்காகவும் தொழுகையைக் களாவாக ஆக்க முடியாது. அப்படிக் காலம் கடந்து தொழுவதால், அது அந்தத் தொழுகைக்கு எந்த விதத்திலும் ஈடாக முடியாது.

“எவனுக்கு அஸர் தொழுகை தவறி விட்டதோ அவனது பொருளும், குடும்பமும் தவறிவிட்டது போன்றதாகும்” என்பது நபிமொழி. அறிவிப்பவர்: இப்னு உமர்(ரழி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்

இதிலிருந்து தவறியது தவறியதுதான். அதைத் திரும்ப அடைய முடியாது என்று உணரலாம். இவ்வாறு களாவாக்குவது மிகப் பெரும் குற்றம்தான். அல்லாஹ் மிக அதிகமாக வற்புறுத்துகின்ற ஒரு கடமையை வீணடித்தவனாக அவன் ஆகின்றான்.

நீண்ட காலமாகவோ,அல்லது சில வேளைகளோ தொழுகையை விட்டவன் என்ன செய்யவேண்டும்? இதற்குப் பரிகாரமே கிடையாதா? அதையும் அல்லாஹ் அழகாகச் சொல்லித் தருகிறான்.

“அவர்களுக்குப் பின்னால் தொழுகையை பாழ்படுத்தி, தங்கள் மனோ இச்சையைப் பின்பற்றியவர்கள் தோன்றினார்கள். அவர்கள் நரகில் போடப்படுவார்கள். (நடந்து விட்ட இந்த பாவத்துக்காக) திருந்தி மன்னிப்புக் கேட்டு நற்கருமங்களைப் புரிந்தவர்கள் தவிர (மற்றவர்கள் தான் நரகை அடைவர்) இவர்கள் சுவனத்தில் நுழைவார்கள்.” (அல்குர்ஆன் 19:59,60)

இப்படித் தொழுகையைப் பாழ்படுத்தியவர்கள் இனிமேல் இப்படிப் பழாக்க மாட்டோம் என்று மனம் திருந்தி செய்த தவறுக்காக மன்னிப்புக் கேட்கவேண்டும். அவர்கள் அந்த மாபெரும் குறையை நிவர்த்தி செய்வதற்காக இயன்ற அளவு நபிலான வணக்கங்களில் ஈடுபடவேண்டும்.

ஆக தொழுகையைக் களாவாக ஆக்குவதற்கு இஸ்லாம் அனுமதிக்கவுமில்லை. களாவாக ஆக்கி விட்டு வேறு நேரத்தில் தொழுவது அதற்கு ஈடாக ஆகவும் முடியாது. அதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.

“உமர்(ரழி) அப்துல்லாஹ் இப்னு உமர்(ரழி) ஸஃது இப்னு அபீ வக்காஸ்(ரழி) ஸல்மான் அல்பார்ஸி(ரழி) போன்ற நபிதோழர்களின் கருத்தும், முஹம்மது இப்னு ஸீரின்(ரஹ்) உமர் இப்னு அப்துல் அஸீஸ்(ரஹ்) போன்ற அறிஞர் களின் கருத்தும் இதுதானே” என்று இமாம் இப்னுஹஸ்மு(ரஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். (நூல்: ஃபிக்ஹுஸுன்னா)

ஆரம்ப காலத்தில் களா செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தது. நபி(ஸல்) அவர்களும் நபி தோழர்களும் அவ்வாறு “களா’வாக ஆக்கி இருக்கின்றார்கள். பின்னர் அந்த அனுமதியை அல்லாஹ் ரத்துச் செய்துவிட்டான்.

அதற்கான ஆதாரம் வருமாறு:
“”அகழ்ப் போரின் போது, (அகழ்ப் போரில் ஈடுபட்டிருந்ததன் காரணமாக) லுஹர், அஸர், மஃரிபு ஆகிய தொழுகைகளை உரிய நேரத்தில் நபி(ஸல்) அவர்களும் நபி தோழர்களும் தொழவில்லை. இஷா நேரத்தில் வரிசைக் கிரமமாக பாங்கு, இகாமத்துடன் அந்தத் தொழுகைகளை நிறைவேற்றினார்கள்” இந்த நிகழ்ச்சி திருகுர்ஆனின் 2:239வது வசனம் இறங்குவதற்கு முன் நடந்ததாகும் என்று அபூஸயீது (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.(ஹதீஸின் கருத்து). நூல்கள்:அஹமது, நஸயீ.

“போர்க் காலங்களில் கூட உரிய நேரத்தில் தான் தொழ வேண்டும்” என்ற உத்தரவு வருவதற்கு முன்பு தான் இந்த நிலமை இருந்திருக்கின்றது என்பதை மேற்கூறிய ஹதீஸ் தெளிவாக்குகிறது.

இரண்டே இரண்டு காரணங்களினால் மட்டுமே, உரிய நேரம் தவறிய பிறகும் நிறைவேற்ற வேண்டும்.

“யாரேனும் மறதியின் காரணமாகவோ, அல்லது தூக்கத்தின் காரணமாகவோ, (உரிய நேரத்தில்) தொழத் தவறிவிட்டால் அவனுக்கு நினைவு வரும்போது, விழித்தவுடன் அதைத் தொழட்டும்!” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ்(ரழி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்

(இதே கருத்துக் கொண்ட பல ஹதீஸ்கள், புகாரி, முஸ்லிம் அபூதாவூது, நஸாயீ, இப்னு மாஜா, அஹ்மத் ஆகிய நூல்களில் காணப் படுகின்றன)

ஒருவன் தூங்கிவிட்டு தொழுகையின் நேரம் முடிந்த பிறகு எழுந்தான் என்றான், எழுந்த உடனே அதைத் தொழ வேண்டும். அது போல் மறதியின் காரணமாக ஒரு தொழுகையை நேரம் தவறவிட்டு விட்டால், நினைவு வந்தவுடன் தாமதிக்காது தொழுதிட வேண்டும் என்பதை நபி(ஸல்) தெளிவுபடுத்துகின்றார்கள். இந்த இரண்டு காரணங்கள் தவிர வேறு எந்தக் காரணங்களுக்காகவும் “களா’வாக ஆக்க முடியாது.

“நபி(ஸல்) அவர்களும், நபி தோழர்களும் பயணத்தில் செல்லும்போது ஓரிடத்தில் உறங்கி விடுகிறார்கள். உறங்குவதற்கு முன் பிலால் (ரழி) அவர்களை மட்டும் விழித்திருக்கும்படியும், சுபஹு தொழுகைக்கு எழுப்பும்படியும் கூறுகிறார்கள். பிலால்(ரழி) அவர்களும் தன்னை அறியாது உறங்கி விடுகிறார்கள். சூரியன் நன்றாக உதித்த பின்னர் தான் விழிக்கிறார்கள். எழுந்ததும் அவ்விடத்தை விட்டு அகன்று வழக்கம்போல பாங்கு சொல்லி சுன்னத் தொழுது பின்னர் இகாமத் சொல்லி ஜமா அத்துடன் தொழுதிருக்கிறார்கள்” (சுருக்கம்)
அறிவிப்பவர்: அபூ கதாதா(ரழி) நூல்கள்: அஹ்மத், முஸ்லிம்

(நஸாயீயிலும் இதே கருத்து பதிவு செய்யப் பட்டுள்ளது)

தூக்கம் மறதியின் காரணமாக விட்டுவிட்ட தொழுகைகளைத் தாமதமின்றி விழித்தவுடன், நினைவு வந்தவுடன் தொழுதிட வேண்டும். உரிய நேரத்தில் தொழும்போது எப்படி பாங்கு, இகாமத், சுன்னத்களுடன் தொழ வேண்டுமோ அவ்வாறே அதனை நிறை வேற்றவும் வேண்டும். அந்தத் தொழுகைக் குரிய நேரம் அதுதான் என்றாகி விடும்போது, களா என்ற பிரச்சனையே இல்லை.

ஆக கடந்த காலங்களில் தொழுகைகளை விட்டது மிகப் பெரும் பாவம். இணை வைத்தலுக்கு அடுத்தபடியாக பெரும் பாவம். மிகப் பெரும் பாவத்திற்கு எப்படி உள்ளம் உருகி பாவமன்னிப்புக் கோர வேண்டுமோ அவ்வாறு பாவ மன்னிப்புக் கோருவதும், உபரியான வணக்கங்கள் புரிவதும் தான் அதற்குப் பரிகாரம். மேற்கூறிய இரண்டு காரணங்கள் தவிர வேறு காரணங்களால் தொழுகையைத் தாமதப்படுத்தக் கூடாது.

அல்லாஹ் மிகவும் அறிந்தவன்.

அந்நஜாத்

சின்னஞ்சிறிய விஷயங்கள் தான் ஆனாலும்……

மனிதன் சபல புத்தியுடையவனாகவும், பலகீனமாகவும் படைக்கப்பட்டுள்ளான். அதே சமயம் அவனது சுய புத்தியில் அபார நம்பிக்கையுடையவனாகவும் இருக்கின்றான். தன் புத்தியில் நல்லவையாகப்படுபவை அனைத்தையும் உறுதியாக நம்பி செயல்பட ஆரம்பித்து விடுகிறான். அவனின் இந்தச் செயல்பாடுகளின் பலனை இந்த உலகில் பார்ப்ப முடிவதில்லையே! நாளை மறுமையில் பார்க்க வேண்டிய நிலையில் இருக்கின்றான். 100 வயது கிழவனாக இருந்தாலும் தனது அனுபவத்தின் மூலம் இவ்வுலகில் அச்செயல்பாடுகளின் உண்மை நிலைகளை அறிந்துக் கொள்ள முடியாதே என்பதை எல்லாம் அவன் சிந்திப்பதில்லை. அதனை சிந்தித்துணரும் ஆற்றல் அவனுக்கில்லை. அதனையே அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகிறான் .

நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம்; ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்; ஒரு பொருளை விரும்பலாம். ஆனால் அது உனக்கு தீமை பயப்பதாக இருக்கும். (இவற்றையெல்லாம்) அல்லாஹ் அறிவான், நீங்கள் அறியமாட்டீர்கள். (2:216)

எனவே மார்க்க விஷயத்தில் அவனது சுய சிந்தனையைத் தூக்கி எறிந்து விட்டு அல்லாஹ்வின் கட்டளையை அப்படியே செயல்படுத்தினால் மட்டுமே அவனுக்கு மறுமையில் வெற்றியுண்டு.

ஆதம்(அலை) அவர்கள் மனித வர்க்கத்தினரிலே ஓரளவு மறு உலக அனுபவம் பெற்றவர்கள், சுவர்க்கத்தில் வாழ்ந்தவர்கள் ஷைத்தானின் சேட்டைகளை நேரடியாகக் கண்டு அவற்றின் விளைவுகளையும் அனுபவித்து பெரும் துன்பப்பட்டு சீரழிந்து பின் சீர் பெற்றவர்கள். அப்படிப்பட்ட ஆதம்(அலை) அவர்களைக் கூட இவ்வுலகில் வந்து தன் சுயபுத்தியைக் கொண்டு நல்லது கெட்டதைத் தீர்மானித்து வாழும்படி அல்லாஹ் அனுமதிக்கவில்லை; தனது வழிகாட்டலின்படி மட்டுமே இவ்வுலகில் வாழ வேண்டும். அப்படி வாழ்பவர்கள் மட்டுமே வெற்றி பெற முடியும். அவர்களுக்குப் பயமோ துக்கமோ இல்லை. அதற்கு மாறாக அல்லாஹ்வின் வழிகாட்டலை விட தங்களின் சொந்த புத்திக்கு முக்கியத்துவம் கொடுத்து இவ்வுலகில் வாழ்பவர்கள் தோல்வியடைந்து நரகைச் சேர்வார்கள். அதில் என்றென்றும் தங்கி விடுவார்கள் என அல்லாஹ் தெளிவாகவே அறிவித்து விட்டான். அவ்வசனங்கள் வருமாறு:

(பின்பு) நாம் சொன்னோம்: “நீங்கள் அனைவரும் இவ்விடத்தை விட்டும் இறங்கி விடுங்கள்; என்னிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக நல்வழி(யைக் காட்டும் அறிவுரைகள்) வரும்போது, யார் என்னுடைய (அவ்)வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமும் இல்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.” (2:38)

அன்றி யார் (இதை ஏற்க) மறுத்து, நம் அத்தாட்சிகளைப் பொய்ப்பிக்க முற்படுகிறார்களோ அவர்கள் நரகவாசிகள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கி இருப்பர். (2:39)

அல்லாஹ்வின் இந்தத் தெளிவான உத்திரவுகளை தலைமேற்கொண்டு ஆதத்தின் சந்ததிகள் செயல்பட்டிருந்தால் அது எவ்வளவோ நல்லதாக அமைந்திருக்கும். இவ்வுலகில் பல மதங்கள் தோன்றியிருக்கா. மனிதரில் பிரிவுகள் ஏற்ப்பட்டிருக்கா ஆனால் அதற்கு மாறாக மார்க்க விஷயத்தில் தனது சொந்த புத்தியைச் செலுத்தி சீரழிந்து வருகிறான் மனிதன். அதன் விளைவு மனிதனை தெய்வமாக்குவதும். தெய்வத்தை மனிதனாக்குவதும் சர்வசாதாரண நிகழ்ச்சியாக ஆகி விட்டது மனித வாழ்க்கையில், இக்கைங்கர்யத்தை வெகு சிரத்தையுடன் கடைப்பிடிப்பதோடு மக்களுக்கு அயராது போதித்து வருகிறவர்கள் பூசாரிகள், புரோகிதர்கள், பாதிரிகள், சந்நியாசிகள், மவ்லவிகள் ஆகும். இவர்கள் அனைவரும் அல்லாஹ்வுக்கும் அடியானுக்குமிடையில் இடைத்தரகர்களாக இருந்து வயிறு வளர்ப்பதுடன் மக்களை அல்லாஹ்வின் நேரியப் பாதையிலிருந்து வழி கெடுத்து அத்வைதம் என்று சொல்லப்படும் இறைவனையும் மனிதனையும் அதாவது படைத்தவனையும், படைக்கப்பட்டவனையும் ஒன்றாக்கும இணை வைக்கும் மாபாதகச் செயலை செய்ய வைத்து மனித வர்க்கத்தையே நரகில் கொண்டு சேர்த்து நரகை நிரப்பகின்றனர். இவர்கள் அனைவரும் இது விஷயத்தில் ஷைத்தானின் ஏஜண்டுகளாக இருந்து செயல்பட்டு வருகின்றனர்.

மக்களில் பெரும்பான்மையினர் செம்மறியாட்டுக் கூட்டம் போல் இந்தக் கயவர்களின் பின்னால் கண்ணை மூடிக் கொண்டு சென்று நரகப் படுகுழியில் வீழ்ந்து தங்களை அழித்துக் கொள்கின்றனர். இதனை அல்லாஹ் இவ்வாறு கூறி நம்மை எச்சரிக்கின்றான்.

“ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக (அவர்களுடைய) பாதிரிகளிலும், சந்நியாசிகளிலும் அநேகர் மக்களின் சொத்துக்களைத் தவறான முறையில் சாப்பிடுகிறார்கள்; மேலும் அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மக்களைத் ) தடுக்கிறார்கள். (9:34)

இந்த வசனத்தில் பாதிரிகளைப் பற்றியும் சந்நியாசிகளைப் பற்றியும் மட்டும் கூறி இருந்தாலும் இடைத்தரகர்கள் அனைவரது நிலையும் அப்படித்தான் என்பது சொல்லாமலே அனைவருக்கும் விளங்கும். இந்த அடிப்படையில் அதிகமான மக்கள் வழிகேட்டில் தான் இருப்பார்கள். இதற்கு குர்ஆன் கூறும் சான்று இதோ

பூமியில் உள்ளவர்களில் பெரும்பாலோரை நீர் பின்பற்றுவீரானால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிக்கெடுத்து விடுவார்கள். (ஆதாரமற்ற) வெறும் யூகங்களைத்தான் அவர்கள் பின்பற்றுகிறார்கள். இன்னும் அவர்கள் பொய்யான கற்பனையிலேயே மூழ்கி கிடக்கிறார்கள். (6:116)

மக்களில் பெரும்பாலோர் வழிகேட்டில் இருக்கும் நிலையில் அழைப்புப் பணியில் ஈடுபடுவோர் எப்படிப்பட்ட தவறான சிந்தனையில் இருக்கிறார்கள் என்பதை இனி ஆராய்வோம்.

அழைப்புப் பணியில் ஈடுபடுபவர்களின் அசல் நோக்கம் மறுமையாக அல்லாஹ்வை திருப்திப் படுத்துவதாக இருந்தால் மக்கள் சத்தியத்தை மறுப்பதைக் கொண்டு விசனப்படாமல், அவர்கள் ஏற்றுக் கொள்ளும வகையில் நாம் செயல்பட வேண்டும் என்ற தப்பான முடிவுக்கு வராமல் சத்தியத்தை உள்ளது உள்ளபடி சொல்லிக் கொண்டே இருப்பார்கள். மக்கள் அனைவரும் அவர்களை ஒதுக்கித் தள்ளினாலும் அதனால் கவலைப்பட மாட்டார்கள். தங்களைப் பின்பற்றும் ஒரு நபர் கூட இல்லாத நிலையிலும் தனது பணியை செவ்வனே செய்த பல நபிமார்கள் அல்லாஹ்வின் திருப்தியுடன் சுவர்க்கம் நுழைவார்கள் என்ற நபிமொழியின் கருத்தை மனதில் கொண்டு உறுதியுடன் சத்தியத்தில் நிலைத்திருப்பார்கள்.

ஆனால் அதற்கு மாறாக மறுமையை குறிக்கோளாக கொள்ளாமல் இவ்வுலகில் பதவிகளையோ புகழையோ, பொன்னையோ பொருளையோ குறிக்கோளாகக் கொண்டு மார்க்க பிரசாரத்தில் ஈடுபடுகிறவர்கள் தங்கள் குறிக்கோள்கள் நிறைவேற மக்களின் திருப்தியைப் பெறவே குறியாக இருப்பார்கள் என்பதில் சந்தேகமிருக்க முடியாது. இது மனித இயல்பு. இதனை விட்டும் அல்லாஹ்வால் பாதுகாக்கப்பட்டவர்களைத் தவிர வேறு யாரும் தப்ப முடியாது. இதுப் பற்றி நபி(ஸல்) அவர்களையே அல்லாஹ் இவ்வாறு எச்சரிக்கின்றான்.

(நபியே!) தீயவை அதிகமாக இருப்பது உம்மை ஆச்சர்யப் படுத்தியபொழுதிலும் “தீயதும், நல்லதும் சமமாகா; எனவே, அறிவாளிகளே! அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்துக் கொள்ளுங்கள். அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.” என்று நீர் கூறுவீராக” (5:100)

மேலும் மனிதர்களின் சில விருப்பங்களை ஏற்றுக் கொள்ளும் போது அவர்கள் நம்மை தங்கள் உற்ற நண்பர்களாக ஆக்கிக் கொள்வார்கள். மக்களின் ஆதரவு அமோகமாக கிடைக்கம். அதே சமயம் அதன் பின் விளைவு மகா பயங்கரமானது என்பதை அழைப்புப் பணியாளர்கள் உணர வேண்டும். அது குறித்து அல்லாஹ் நபி(ஸல்) அவர்களையே எச்சரித்துள்ள வசனங்கள் வருமாறு:

(நபியே!) இன்னும் நாம் உமக்கு வஹீ மூலம் அறிவித்தோமே அதை விட்டும், அதல்லாததை நம்மீது நீர் இட்டுக்கட்டி கூறும்படி உம்மைத் திருப்பி விடவே அவர்கள் முனைந்தார்கள்; (அவ்வாறு நீர் செய்திருந்தால்) உம்மை தம் உற்ற நண்பராகவும் அப்போது எடுத்துக் கொண்டிருப்பார்கள்.

மேலும், நாம் உம்மை (ஹக்கான பாதையில்) உறுதிப்படுத்தி வைத்திருக்கவில்லை எனின் நீர் கொஞ்சம் அவர்கள் பக்கம் சாய்ந்து போயிருத்தல் கூடும்.

(அவ்வாறு நீர் சாய்ந்திருந்தால்) நீர் இவ்வாழ்நாளில் இரு மடங்கு (வேதனையும்) நுகருமாறு நாம் செய்திருப்போம்; பின்பு, நமக்கு எதிராக உதவியாளர் எவரையம் நீர் காணமாட்டீர். (17:73-75)

ஆக குர்ஆனின் இந்த எச்சரிக்கைகளை எல்லாம் கூர்ந்து அவதானித்து செயல்படும் சத்திய பிரச்சாரங்கள் எந்த நிலையிலும் மக்கள் கோபப்படுகிறார்கள், தனது சொல்லை செவிமடுக்க மறுக்கிறார்கள். என்ற காரணத்திற்காக உள்ளதை உள்ளபடி சொல்லுவதிலிருந்தும் பின்வாங்க முடியாது. மக்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் சிலதை விட்டு சிலதை சொல்லும் ஷைத்தானின் துர்போதனைக்கு ஆளாக மாட்டார்கள். இவர்கள் புத்தியில் சிறிய விஷயங்களாக படுபவற்றையெல்லாம் சொல்லாமல் விட்டு, இவர்கள் புத்தியில் பெரிய விஷயமாகப் படுபவற்றை மட்டும் சொல்லும் குற்ற செயல்களுக்கு ஆளாக மாட்டார்கள். அதாவது மார்க்கப் பிரசாரத்தில் தங்கள் மனித புத்தியை நுழைக்க மாட்டார்கள். விளைவுகள் தங்களின் சொந்த முயற்சிகளிலும் தங்களின் அனுமானங்களிலும் தங்கி இருக்கின்றன என தப்புக் கணக்குப் போடமாட்டார்கள். விளைவைப் பற்றி அக்கறைப்படாமல் அல்லாஹ்வின் உத்திரவுகளை எடுத்து வைப்பதே எமது கடமை என்பதை செவ்வனே உணர்ந்து செயல்படுவார்கள்.

“இன்னும் எங்கள் கடமை (இறைவனின் தூதுச் செய்தியை) விளக்கமாக எடுத்துச் சொல்வதைத் தவிர வேறில்லை” (36:17)

இந்த அல்லாஹ்வின் தெளிவான கட்டளையை சிரமேற்கொண்டு குர்ஆனிலும் ஹதீஸிலும் இருப்பதை மக்கள் முன் எடுத்து வைப்பதை விட வேறு அதிகாரம் தங்களுக்கில்லை என்பதை உணர்ந்து செயல்படுவார்கள். தங்கள் மனிதப் புத்தியைக் கொண்டும், அனுமானங்களைக் கொண்டும் மார்க்கப் பிரசாரத்தை திறம்பட செயல்படுத்த முடியும் என்ற அல்லாஹ்வை மறந்த எண்ணத்தை அதிக பிரசிங்கித் தனத்தை ஒரு போதும் மேற்க்கொள்ள மாட்டார்கள். அல்லாஹ் யாரை நேர்வழியில் செலுத்துகிறானோ அவர்களால் மட்டுமே இவை அனைத்தும் சாத்தியமாகும்.

இது விஷயத்தில் யார் அல்லாஹ்வின் அருளைப் பெறவில்லையோ அவர்கள் மட்டும் அல்லாஹ்வை மறந்து தங்கள் சொந்த புத்தியைக் கொண்டும் மக்களின் ஆதரவைக் கொண்டும் சாதித்து விட முடியும் என்ற நச்சுக் கருத்துக்கு ஆளாவார்கள். தங்கள் சொந்த புத்தியில் உதித்ததை செயல்படுத்துவது கொண்டு மக்களில் ஒரு கூட்டம் அவர்களை நம்பி, அவர்கள் பின்னால் வர ஆரம்பித்து விட்டால், அவர்கள் தாங்கள் பெரிதாக சாதித்து விட்டதாக மனப்பால் குடிப்பார்கள். நேர்வழியில் இருக்கும் வரை கூட்டம் குறைவாக இருக்கும் நிலைமாறி, வழிதவறி விட்டால், பெருங்கூட்டம் பின்னால் வர ஆரம்பித்து விடும் என்ற உண்மையை 6:116 வசனத்தின் பொருளை உணரத்தவறி விடுகிறார்கள்.

மக்கள் நமது கருத்துக்களை ஆர்வமாகக் கேட்டு ஏற்றுக் கொள்கிறார்கள். கூட்டம் கூட்டமாக நம் பின்னால் வருகிறார்கள் என்பதெல்லாம் நாம் நேர்வழியில் நடக்கின்றோம் என்பதற்கு உரைகல் அல்ல. பயித்தியக்காரன் பின்னாலும் ஒரு கூட்டம் செல்லத்தான் செய்யும். இன்று வழிகேட்டின் உச்சக் கட்டத்தில் இருப்பவர்களின் பின்னால் தான் பெருங் கூட்டங்கள் இருக்கின்றன. நாம் நேர்வழியில் இருக்கிறோம் என்பதற்கு சரியான அளவுகோல் குர்ஆனும், ஹதீஸும் ஆகும். அவை எடுத்துச் சொல்லுபவை சிறிய விஷயங்களாக இருந்தாலும் பெரிய விஷயங்களாக இருந்தாலும் சிறிது பெரிது என நாமாக அலட்டிக் கொள்ளாமல் மக்கள் முன் எடுத்து வைப்பதே பிரசாரகனின் கடமையாகும். நமது கடமைகளைச் செவ்வனே செய்யும் உண்மை பிரசாரர்களாக அல்லாஹ் நம்மை ஏற்று அருள் புரிவானாக.

Saturday, September 17, 2011

மஸ்ஜிதுகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம்

மஸ்ஜிதுகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம் என நெற்றிப் பொட்டில் அடிப்பது போல் எச்சரிப்பதைக் கண்டு கொள்ளாமல் தங்கள் தங்கள் சுய பெயர்களில் பதிவு செய்து ஆதிக்கம் செய்கின்றனர். அல்லாஹ்வின் தெளிவான இந்தக் கட்டளையைப் புறக்கணித்து ஒவ்வொரு பிரிவாரும் அல்லாஹ்வின் பள்ளிகளைக் கூறுபோட்டுள்ளனர். மற்றவர்களின் சொத்துக்களைப் போலிப் பத்திரங்கள் தயாரித்து தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் படுகிறபாடுகளை இப்போது ஊடகங்களில் பார்த்து வருகிறோம் அல்லவா? இங்கு கூட தங்களின் பண பலம் அரசியல் செல்வாக்குக் கொண்டு தண்டனையிலிருந்து சிலர் தப்பி விடலாம்.

ஆனால் அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமான பள்ளிகளை போலிப் பத்திரங்கள் மூலம் ஆதிக்கம் செய்து, அட்டூழியம் செய்கிறவர்கள் நாளை மறுமையில் அல்லாஹ்விடம் தப்ப முடியுமா? ஒருபோதும் தப்ப முடியாது. அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமான பள்ளிகளை இந்த அறிவீனர்கள் கூறு போட்டு ஆதிக்கம் செலுத்தி வருவது உண்மை தான். ஆயினும் நேர்வழி நடக்கும் முஸ்லிம்களின் கடமை என்ன? இதற்கு நபி(ஸல்) அவர் கள் 33:21 கூறுவது போல் வழிகாட்டவில்லையா? நிச்சயம் வழிகாட்டி இருக்கிறார்கள். அல்லாஹ்வின் வீடான கஃபதுல்லாஹ் முஷ்ரிக்குகளிலும் மிகக் கொடிய முஷ்ரிக்குகளான தாருந்நத்வா மதகுருமார்கள் கையில் சிக்கி இருந்தது. அங்கு எண்ணற்ற சிலைகளும், சமாதிகளும் நிறைந்து காணப்பட்டன.

இந்த நிலையிலும் நபி(ஸல்) அங்கு சென்று தான் அல்லாஹ்வைத் தொழுதார்கள். அப்போது அந்த தாருந்நத்வா குருகுல மடத்தின் தலைமை இமாமாகவும் அந்த மக்களால் அபுல் ஹிக்கம்-ஞானத்தின் தந்தை எனப் போற்றப்பட்ட, நபி(ஸல்) அவர்களால் அபூ ஜஹீல்- மடமையின் தந்தை என அடையாளம் காட்டப்பட்டவனும், இந்த அபூ ஜஹீலின் தோழர்களும் நபி(ஸல்) கஃபாவில் அல்லாஹ்வைத் தொழும்போது பெரும் துன்பங்களைக் கொடுத்தார்கள்.

ஒரு சமயம் நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ் தொழுது கொண்டிருக்கும்போது அவர்கள் மீது அழுகிய ஒட்டகக் குடலை அபூ ஜஹீல் வகையறாக்கள் போட்டதால் நபி(ஸல்) மூச்சுத் திணறி பெரும் துன்பத்திற்கு ஆளானார்கள். அந்த காஃபிர்களோ கைகொட்டிச் சிரித்து மகிழ்ந்தார்கள் என்ற வரலாற்றைப் பார்க்கிறோம்.

இதிலிருந்து நாம் பெறும் படிப்பினை என்ன? கஃபதுல்லாஹ் எண்ணற்ற சிலைகளைக் கொண்டும், சமாதிகளைக் கொண்டும் நிரப்பப் பட்டிருந்தாலும் அது அல்லாஹ்வின் வீடு என்பதில் எவ்வித மாற்றமும் பெறவில்லை. அதனால் தான் நபி(ஸல்) அங்கு சென்று மிகமிக ஆபத்தான, துன்புறுத்தல்கள் நிறைந்த நிலையிலும் அல்லாஹ்வைத் தொழுது தமது உம்மத்திற்கு வழி காட்டி இருக்கிறார்கள். சிலைகளும், சமாதிகளும் இருக்கும் நிலையிலேயே மதீனாவிலிருந்து கஃபாவை நோக்கியே தொழுதார்கள். இது இறைவனின் கட்டளையாகும்.

அதேபோல் அல்லாஹ்வின் பள்ளிகளைக் கூறு போட்டு அவரவர்கள் பெயர்களில் பதிவு செய்து பித்அத், குஃப்ர், ´ஷிர்க் போன்ற அட்டூழியங்களை நடைமுறைப்படுத்தி வந்தாலும் அவை அல்லாஹ்வின் பள்ளிகள் என்ற நிலையிலிருந்து மாறப் போவதில்லை.

எனவே நபி(ஸல்) அவர்கள் காட்டித் தந்த அழகிய முறைப்படி நேர்வழி நடக்க விரும்பும் முஸ்லிம்கள் அப்பள்ளிகளில் சென்று அல்லாஹ்வைத் தொழுவதே சமுதாய ஒற்றுமைக்கு வழி வகுக்கும். அவர்கள் எவ்வளவு பெரிய ´ஷிர்க், பித்அத்களில் மூழ்கி இருந்தாலும், அடிப்படை விஷயங்களில் தொழுகையில் நபி(ஸல்) காட்டித் தந்ததையே பின்பற்றுகின்றனர். ஐங்கால தொழுகைகளில், ரகாஅத்களில், ருகூஃ, சுஜூதுகளில், இருப்பில் நபி(ஸல்) காட்டித் தந்தபடிதான் செய்கின்றனர். 39:17,18 இறைக் கட்ட ளைகள்படி அவர்கள் செய்யும் இந்த அழகானவற்றில் நேர்வழி நடக்க விரும்பும் முஸ்லிம்கள் பின்பற்றுவதில் குர்ஆன், ஹதீஸுக்கு முரண்பட்ட செயல் ஒன்றுமில்லை.

ஒருவருடைய சுமையைப் பிரிதொருவர் சுமக்க மாட்டார் என்று குர்ஆன் 6:164, 17:15, 35:18, 39:7, 53:38 போன்ற பல இடங்களில் அல்லாஹ் நேரடியாகக் கூறியுள்ளான். தொழவைக்கும் இமாமின் பித்அத், குஃப்ர், ´ஷிர்க் காரணமாக அவரின் தொழுகை அவரது முகத்தில் எறியப்பட்டாலும், அவர் பின்னால் தொழும் நேர்வழி நடக்கும் முஸ்லிம்களின் தொழுகையில் அணுவளவு கூட குறைவு செய்ய மாட்டான் அல்லாஹ்.

அவர்கள் பின்னால் நின்று தொழக்கூடாது என்று சட்டம் சொல்லும் மதகுருமார்கள் 9:31, 42:21, 49:16 வசனங்களின் வழிகாட்டல்படி தர்கா, மத்ஹபினரை விட கொடிய ´ஷிர்க் செய்கிறவர்களாகவே இருக்கிறார்கள். காரணம் முன்னவர்கள் அல்லாஹ்வுக்கும் தங்களுக்குமிடையில் முன் சென்ற இமாம்கள், வலிமார்கள் போன்றோரை வசீலாவாக-இடைத்தரகர்களாக மட்டுமே ஆக்குகிறார்கள்.

இவர்களோ அல்லாஹ் விதிக்காத சட்டங்களை விதித்து 42:21 வசனப்படி அல்லாஹ்வுக்கே இணையாளர்களாக ஆகிறார்கள். 21:92, 23:52 இறைக் கட்டளைக்கு முரணாகச் சமுதாயத்தைப் பிளவுபடுத்துகிறார்கள். தீர்ப்பை மறுமைக்கென்று அல்லாஹ் ஒத்தி வைத்திருக்காவிட்டால் இங்கே அவர்களுக்கு மிகக் கடுமையான தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கும்; தீர்ப்பு மறுமையில் என்றிருப்பதால் இவ்வுலகில் அவர்கள் விருப்பப்படி 9:34 வசனம் கூறுவது போல் மக்கள் சொத்துக்களைத் தவறான முறைகளில் சாப்பிடுகிறார்கள். 49:16 வசனத்தில் அல்லாஹ் கூறுவது போல் அல்லாஹ்வுக்கே மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்க முற்படுகிறார்கள்.

குர்ஆன், ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என வாய் கிழியப் பேசும் இவர்கள் குர்ஆன், ஹதீஸ்படி நடப்பதில்லை என்பதே உண்மை. ஈமானுக்கு அடுத்து அடிப்படையான ஐங்காலத் தொழுகைகளையே உள்ளச்சத்தோடு, பேணுதலோடு அன்றாடம் தவறாமல் ஜமாஅத் தோடு சேர்ந்து தொழாத இவர்கள் வேறு எந்த மார்க்க விஷயங்களில் குர்ஆன், ஹதீஸைப் பின்பற்றப் போகிறார்கள்?

அல்லாஹ்வுக்குச் சொந்தமான பள்ளிகளை 18:28, 20:16, 25:43, 28:50, 38:26, 45:23, 79:40,41 இத்தனை இறைவாக்குகளில் மனோ இச்சைப் பற்றி எச்சரித்திருந்தும் அவற்றைக் கண்டு கொள்ளாமல் நிராகரித்து விட்டு தங்கள் மனோ இச்சை சரிகாணும் பெயர்களில் பத்திரப் பதிவு செய்து அபகரித்துக் கொண்டாலும் அவை அல்லாஹ்வின் பள்ளிகள்தான். இது அன்று குறைஷ் குஃப்பார்கள் அல்லாஹ்வின் வீடான கஃபதுல்லாஹ்வை அபகரித்து வைத்திருந்த செயலுக்கு ஒப்பானதாகும்.

மழை கற்றுத்தரும் பாடம்

உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் அமைதி நிலவட்டுமாக….

நாம் இந்த பதிவில் எடுத்திருக்கும் தலைப்பு மழை, வெய்யிலில் தெரியும் நிழலின் அருமை அது போன்று வானம் பார்த்த பூமியை கேட்டால் தெரியும் மழையின் அருமை.


சரி முதலில் மழை (Rain) எவ்வாறு உருவாகிறது என்று நாம் பாப்போம்.
வெப்பத்தின் காரணமாக கடல்கள், ஏரிகள், ஆறுகள் போன்றவற்றிலிருந்து எடுக்கப்படும் நீர் திரவ நிலையிலிருந்து நீராவி நிலைக்கு மாறி காற்றில் கலந்து மேல் சென்று பின்பு மேகங்களை உருவாக்குகின்றன. இதுவே பிறகு சுத்தமான நீர் மழையாக பெய்கிறது. அது அதோடு நின்று விடாமல் அந்த நீர் திரும்பவும் நீராவி ஆகி இப்படி ஒரு சுழற்சியாக நடைபெறும் இந்த நிகழ்வை நீர் சுழற்சி (The Water Cycle) என்று குறிப்பிடுவர்.

மழை பெய்வதினால் உயிரினங்களுக்கு பலவகையான நன்மைகள் உள்ளன, மழை உயிர் வாழ்வதற்கான ஆதாரம், ஆனால் இந்த மழை சிலகாலம் இல்லையெனிலும் உணவு பற்றாக்குறை போன்ற பல இன்னல்களை நாமே கண்ணெதிரே பார்க்கிறோம். மழை என்பதே இல்லையெனில் அதனால் ஏற்படும் தீமைகள் என்னவென்று சொல்லதேவை இல்லை அனைவரும் அறிந்ததே உயிரினங்கள் வாழவே முடியாத அளவிற்கு பூமியின் வெப்பம் அதிகமாகிவிடும். ஒரு பக்கம் முழுவதும் வெப்பமாகவும் ஒரு பக்கம் முழுவதும் கடல் நீராகவும் இருக்கும், அதாவது தற்போது இருக்கும் படியான சமநிலை படுத்தப்பட்ட பூமி இருக்கவே இருக்காது.

உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் நீரில் மூழ்கி அழியவும் கூடாது ஆனால் அவை அனைத்திற்கும் இன்றி அமையாத தேவைக்காக நீரும் தரப்படவேண்டும் என்ற நிலையில் இந்த மழையை தவிர வேறு எது சிறந்த வழி என்னவென்று கூறுங்கள் பாப்போம். இது ஏனோ தானோ வென்று நடைபெறுகிறது என்ற சந்தேகமின்றி அனைத்தும் தீர திட்டமிட்டே நடைபெறுகிறது.

இது உண்மையில் மாபெரும் சக்தியின் உன்னதமான அருட்கொடை என்பதை சந்தேகமின்றி என்று கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் மேலே செல்வோம்.

கடவுள் மறுப்பாளர்கள் கூற்றுப்படி முதல் மழை எப்படி பெய்திருக்கவேண்டும், இயற்கையாக (!?) உருவான ஆக்சிஜன் ஹைட்ரஜன் மூலக்கூறுகள் தானாக ஒன்றிணைந்து நீர்த்துளி உருவாகி பின் ஒவ்வொரு நீர்துளியாக அதிகமாகி கடல் உருவாகி இருக்க பிறகு பூமியிலுள்ள வெப்பத்தின் காரணமாக அவைகள் தங்களின் தன்மையை அதாவது திரவ நிலையிலிருந்து வாயு நிலைக்கு தானாக (!?) மாற்றி மேல் சென்று பிறகு பூமிக்கு தரவேண்டும்.

இவை அனைத்தும் தானாக உருவாகி இருக்குமானால் எப்படி இருக்கும் தெரியுமா? மேகம் எங்கு நீர் எடுக்கிறதோ அங்கு மட்டும் தான் மழை உருவாக வேண்டும், கடல், ஏரி, ஆறு போன்று நீர் உள்ள இடங்களிலிருந்து மேகம் நீர் எடுக்கிறது, உதாரணமாக கடல் நீர் மேகமாக மாருமானால் மழை கடலில் மட்டும் தான் பெய்யவேண்டும், அவ்வாறா நடக்கிறது இப்பூவுலகில், அதற்காக கடவுள் கொடுத்த ஒரு அமைப்புதான் காற்றில் மேகம் நகருதல்,எங்கிருந்து அது நீர் எடுத்தாலும் சுழன்று கொண்டு அனைத்து இடங்களுக்கும் மழையை தருகிறது, நம் ஊரில் உள்ள தண்ணீர் வண்டி என்ன செய்கிறது, அசுத்தமான நீரை சுத்தபடுத்தி அதை ஒரு வண்டியில் ஏற்று ஊர் முழுவதுமாக வளம் வருகிறது எங்கு தண்ணீர் வேண்டுமோ அங்கு அளிக்கிறது, இதே வேலையை செய்யத்தான் மழை என்ற ஒன்றை கடவுள் ஏற்படுத்தி தேவை படும் இடங்களில் பொழிய செய்கிறார், இந்த அமைப்பு எதற்காக நடக்கிறது அனைத்து உயிரினங்களும் வாழ வேண்டும் என்ற காரணத்திற்காக.

மேகத்தின் வேகம் என்பது இந்த பூமி சுழற்சியின் வேகத்தைவிட அதிகம் என்று கூட கூறலாம், ஏனெனில் பூமி தான் சுற்றும் போது தன்னுடைய வலிமண்டலதையும் இழுத்துக்கொண்டு சுற்றுகிறது, மேகம் என்பது பூமியின் வலிமண்டலத்தில் தான் உள்ளது. உதாரணமாக ஒருவர் மணிக்கு 10 கி மி வேகத்தில் நடக்கிறார் என்றால் அவர் உண்மையில் பூமியின் சுழற்சியையும் (529.75 kmph) சேர்த்து 539.75 கிலோ மீட்டர் வேகத்தில் நடக்கிறார் என்று தான் பொருள், இதை இங்கு நாம் குருப்பிடுவதற்கான காரணம் பூமிதான் சுற்றுகிறதே மேகம் எதற்காக நகர வேண்டும், அப்படி நகராமல் ஒரே இடத்தில் இருந்து விட்டால் என்ன நடக்கும் தெரியுமா தண்ணீர் இருக்கும் இடங்களில் மட்டுமே மழை கிடைக்கும், அப்படியெனில் உயிரினங்கள் இருக்குமா, நாம் தற்போது இருப்பது போன்ற எந்த குறையும் இல்லாமல் வாழ முடியுமா? இந்த தத்துவத்தை பார்க்கும், சிந்திக்கும் ஒரு மனிதன் என்ன உணருவான் இப்பூமியில் உயிரினங்களை வாழவைக்க மறைமுகமாகவோ அல்லது நேராகவோ ஒரு சக்தி உதவுகிறது என்று அடிப்படை நிலையை ஏற்று கொண்டுதான் ஆகவேண்டும், இல்லையெனில் மேகம் எதற்காக நகரவேண்டும் மழை எதற்காக பொழிய வேண்டும், இது போன்ற நாம் உணரவே முடியாத இவ்வுலகையும் இந்த தத்துவங்களையும் செயல்படுத்தி கொண்டிருக்கும் அந்த மாபெரும் சக்தியை அரைகுறையாக கூட உணரமட்டோம்.

இதில் முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் தற்போதைய அறிவியல் படி மழை பெய்ய மேகம் உருவானால் மட்டுமல்லாமல் ஏர்பான் (Airborne) என்ற ஒரு வகையான பாக்டீரியாவின் பங்கும் அதிகம் உள்ளதாம். உயிர்களை வாழவைக்க உதவுவது நுண்ணுயிரிகள், பூமியில் நீர் இல்லையெனில் உயிரினங்கள் இல்லை, நீர் இல்லையெனில் கடல் இல்லை, கடல் இருந்தாலும் வெப்பம் இல்லையெனில் மேகம் இல்லை, மேகம் இருந்தும் புவி ஈர்ப்பு விசை இல்லையெனில் மழை இல்லை. சுருங்க சொல்வதென்றால் ஒன்றில்லையேல் ஒன்றில்லை என்ற மிகவும் சிக்கலான ஆயிரக்கணக்கான அமைப்பை வைத்து கொண்டு இதுதான் முதலில் வந்தது அதுவும் தானாக வந்தது என்ற வாதம் எந்த அளவிற்கு அறிவுடையதாக இருக்கும் என்பதை நாம் உணரவேண்டும்.

பொதுவாக வெள்ளம் வறட்சி ஏற்படுதல் என்பது எப்போது என்பது நாம் அறிந்ததே இயற்கைக்கு முரணான (அதாவது உலக அமைப்பிற்கு பங்கம் விளைவிக்கும் பொழுது) இவைகள் நடைபெறும், குளோரோ ப்லோரோ கார்பன் அதிகமாக வெளியிடும் பொழுது, ஒரே இடத்தில் சுரங்கம் தண்டவாளம் போன்றவைகளுக்காக குண்டு வெடிப்புகளால் தொண்டபடுதல் போன்ற இயற்கை அமைப்பை சிதைக்கும் போதுதான் நமக்கு வெள்ளம் மற்றும் பூகம்பம் போன்ற பெரிய பாதிப்புகள் நடைபெறும். இதிலிருந்து நாம் விளங்கி கொள்வது மேலே குறுப்பிட்ட இந்த இயற்கை அமைப்பு என்பது எவ்வாறு ஏற்பட்டது. தானாக உருவான ஒன்று அதன் அமைப்பை மாற்றும் போது எதற்காக எதிர்மறை விளைவை ஏற்படுத்த வேண்டும். சாதரணமாக எதிர்மறை விளைவை ஏற்படுத்தாத அமைதியான அமைப்பை அது எப்படி பெற்றது என்பதை நாம் நன்கு சிந்திக்க வேண்டும். இவைகள் அனைத்தும் நடப்பது ஒரு காரணம் இல்லாமலா? இதை பார்க்கும் போதே தெரியவில்லையா ஒரு சக்தி தான் இதை இயக்குகிறது என்று.

மழை எதற்காக பெய்கிறது என்று யாரிடமாவது கேட்டால் அதற்கு பதில் உயிரினங்களுக்காக என்றுதான் கூறுவார்கள், இது உலகில் அனைவரும் அறிந்த நியதி என்று கூட கூறலாம், இணையத்தில் மழை ஏன் பெய்கிறது என்ற கேள்வியை பற்றி தேடினால், எப்படி உருவாகிறது எங்கிருந்து பெய்கிறது, என்னென்ன வகைகள் அதில் உள்ளன என்ற பதிலெல்லாம் கிடைத்தது, என்னுடைய கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை என்னுடைய கேள்வி:

மழை ஏன் பெய்கிறது? எதற்காக பெய்ய வேண்டும் என்பது தான்.
“அவர்கள் (இதையும்) கவனிக்கவில்லையா – நிச்சயமாக நாமே வறண்ட பூமியின் பக்கம் மேகங்கள் மூலமாக தண்ணீரை ஓட்டிச் சென்று அதன் மூலம் இவர்களும் இவர்களுடைய கால் நடைகளும் உண்ணக் கூடிய பயிர்களை வெளிப்படுத்துகிறோம். அவர்கள் (இதை ஆய்ந்து) நோட்டமிட வேண்டாமா? (அல் குர்ஆன் 32 : 27)”


Monday, September 5, 2011

இஸ்லாத்தின் பெயரால் போலிச் சடங்குகள்!!

நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம்? ஒரு கணம் சிந்திப்போமாக!


நாம் பெயரளவில் மட்டுமே முஸ்லிம்கள்!

புனித இஸ்லாத்தைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொள்ளும் நாம், மார்க்கத்தின் பெயரால் சம்பிரதாயங்களையும், சடங்குகளையும் பின் பற்றிக்கொண்டு நமது வசதிக்கேற்ப தொழுகை, நோன்பு போன்ற சில வணக்கங்களை மட்டும் செய்துவிட்டு நாமும் முஸ்லிம்கள் என மார்தட்டிக் கொள்கிறோம்.


உண்மையில் நாம் முஸ்லிம்களாக வாழ்கிறோமா?

அல்லாஹ்வை நமது ஏகநாயனாகவும், அவன் இறுதித்தூதரை நமது வாழ்வின் ஒரே வழிகாட்டியாகவும் ஏற்றுக்கொண்டுள்ள நாம், இஸ்லாத்தின் மூலாதாரங்களான அல்லாஹ்வின் அருள் மறையாம் அல்குர்ஆனையும் அவனது தூதரின் தூயபோதனையாம் அல் ஹதீஸையும் பின் பற்றுகிறோமா ? அவற்றின்படி செயலாற்றுகிறோமா?

இவற்றைப் பின்பற்றாது மனம்போன போக்கில் விரும்பியவாறு வாழ்ந்துவிட்டால் நாம் உண்மையான முஸ்லிம்களாக இருக்க முடியுமா? என நாம் நம் நெஞ்சைத் தொட்டு நம்மையே நாம் கேட்டுப்பார்ப்போம். எத்தனை சதவிகிதம் நாம் பின்பற்றுகிறோம் எனத் தெரிந்துவிடும்.


இதோ இஸ்லாத்தின் பெயரால் நாம் செய்யும் பித்அத்துகள்! சடங்குகள்!!

முதன் முதலில் நமக்குக் குழந்தை பிறந்ததும் மதபோதகர் ஒருவரை அழைத்து பொருள் புரிந்தோ புரியாமலோ அழகாகத் தெரியும் ஒருபெயரை தேர்வு செய்து பாத்திஹா, துஆ ஓதி பெயர் சூட்டி மகிழ்கிறோம்.

பின்னர் அரபி மத்ரஸாக்களில் குர்ஆன் ஓதுவதற்காக அனுப்பிவைக்கிறோம். எப்படி ஓதிவருகிறார்கள்? என்னென்ன மார்க்க அறிவுகளைப் பெற்று வருகிறார்கள்? என்பதை எந்தப் பெற்றோரும் கவனிப்பதே இல்லை. பிற்காலத்தில் கல்லூரியில் காலெடுத்து வைக்கும் நாட்களில் சரியாக ஓதத்தெரியாததால் மறந்துவிட்டது என பரிதவித்து ஓலமிடும் பலரை நாம் இன்று காணமுடிகிறது.


அது மட்டுமா?

பிள்ளைகளுக்கு ஊர்வலம் நடத்தி சுன்னத் வைபவம், புனித நீராட்டு விழா, திருமண வைபவங்கள் போன்றவற்றை சீதனப் பகட்டுகள், மேளதாளங்கள், வாணவேடிக்கைகள், பாட்டுக்கச்சேரிகள் என ஊரே வியக்கும்படி நமது வீட்டு வைபவங்களை குருமார்களின் தலைமையில் ஃபாத்திஹா, துஆ போன்றவற்றை ஓதி கோலாகலமாக அரங்கேற்றி பெருமைப்படுகிறோம்.

நடை மவ்லிது, விடி மவ்லிது


நல்லவை நிகழவும், பயணம் போகவும் நாடியது நடக்கவும் நடை மவ்லிது, விடி மவ்லிது ஓதி ‘பரக்கத்தும் பொருளும்’ குவிய விடிய விடிய சினிமா மெட்டுகளில் கச்சேரிகள் நடத்தி அமர்க்களப்படுத்துகிறோம்.


ராத்திபு, குத்பிய்யது, ஞானப்பாடல்

இவை போதாது என இறைவனின் விசேச அருளைப்பெற ராத்திபு, குத்பிய்யத்து, தரீக்காக்களின் பல்வேறு செய்குகள் அரங்கேற்றிய திக்ருகள், ஹல்காக்கள், ஞானிகள் இயற்றிய ஞானப்பாடல்கள், 4444 தடவைகள் என்ற எண்ணிக்கையில் ஸலவாத்துந் நாரியாவெனும் நரகத்து ஸலவாத்துகளை ஓதி வருகிறோம்,

மாயமந்திரங்கள்

பேய் பிசாசுகளை ஓட்ட தாவீசுகள், முடிச்சுக் கயிறுகள், மாய மந்திரங்களை தட்டைப் பீங்கானில் இஸ்முகள் என்ற பெயரில் எழுதிக் கரைத்துக் குடிப்பது, அரபி எழுத்துகளில் அழகாக வடித்து வீட்டுச்சுவர்களில் மாட்டுவது, நோய் நொடிகள் தீர பெண்களுக்கு தனியாக ஓதிப் பர்ப்பது போன்ற ஆயிரமாயிரம் போலிச் சடங்குகளை இஸ்லாத்தின் பெயரால் அரங்கேற்றி அப்பாவி மக்களை ஏமாற்றிவரும் அவலக்காட்சிகளையும் காணுகிறோம்.

இவையெல்லாம் போலிச்சாமியார்கள், சாயிபாப்பாக்கள், வேடதாரிகள் நடத்தும் கபடநாடகங்கள்! ஏமாற்று வித்தைகள்!! கம்பியெண்ணவைக்கும் ஈனச் செயல்கள்!!


போலிகளிடம் ஏமாறாதீர்!


இவர்கள் வழியில் ஷெய்குகள்.மகான்கள் என்ற போர்வையில் இறையருள் பெற்ற மனிதப்புனிதர்கள் என்ற மாயையை எற்படுத்தி மக்களை ஏமாற்றும் எத்தர்களை இனம் கண்டு கொள்ள வேண்டாமா? இவர்களிடம் மண்டியிட்டு ஏமாறும் அப்பாவி ஆண்களையும், பெண்களையும் என்னென்பது?


இவற்றையெல்லாம் அறிவார்ந்த நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டாமா?
மரணச்சடங்குகளும் கர்மாதிகளும்


மரணச் சடங்குககளோ இந்துக்களை மிஞ்சுமளவுக்குச் சென்று விட்டது. மூன்றாவது நாள் ஃபாத்திஹா, பத்தாவது நாள் ஃபாத்திஹா, நாற்பதாவது நாள்-ஃபாத்திஹா என அரபி மத்ரஸாக்களில் படிக்கும் அப்பாவி மாணவர்களை வாடகைக்கு அமர்த்தி முழுக் குர்ஆனையும் ஓதுவது, இவற்றைக் கடன் பட்டாவது, சொத்துகளை விற்றாவது விருந்து வைபவங்களை கோலாகலமாக நிறைவேற்றி கர்மாதிகளை நடத்தி வருவதையும் பர்க்கிறோம்.


அகிலத்திற்கெல்லாம் வழி காட்டும் வான்மறை இதற்காகவா அருளப்பட்டது ?
முகவரியில்லா மகான்கள்


அடுத்து ஊர் பெயர் வரலாறே இல்லாத கப்ருகளுக்கு தெய்வீகப் பெயர்சூட்டி, அவ்லியாக்கள், ஷெய்குமர்ர்கள், நாதாக்கள் என அங்கீகாரமளித்து ஆண்டுதோறும் உற்சவங்கள், சந்தன உரூஸ்கள், கூடு கொடிகள், யானை ஊர்வலங்கள், கரக ஆட்டங்கள் என ஊரே அமர்க்களப்படும்படி விழாக்கள் எடுப்பதையும் கண்டு வருகிறோம்.


பாட்டுக்கச்சேரியும் நடனமும்

கப்ருகளைச் சுற்றி கராமத்துகளை விளக்கும் பாட்டுக்கச்சேரிகள், கதா காலட்சேபங்கள், மக்களை மயக்கும் நடன நிகழ்ச்சிகள், கப்ரு ஆராதனைகள், நேர்ச்சை தபர்ருக்கள், விஷேச மந்திரங்கள், கந்தூரிக் காட்சிகள் என அனாச்சாரங்களை வகைப்படுத்திக் கொண்டே போகலாம். இவையெல்லாம் மார்க்கத்தின் பெயரால் அர்ச்சனை செய்யப்படுகின்ற கைங்கரியங்கள் என்பது தான் வேதனையிலும் வேதனை!


பக்கவாத்தியங்கள்

இதற்கு போலி மத குருமார்களும், ஷைகுமார்களும், முல்லாக்களும் வயிறு வளர்க்கும் சில சில்லரை உலமாக்களும் பக்கவாத்தியங்களாக விளங்குவது தான் வேடிக்கையாக உள்ளது.


பிறந்த நாள் விழாக்கள்

இந்துக்கள், கிறித்தவர்கள் ஆகியோரின் எல்லாப்பழக்க வழக்கங்களையும் தவறாது பின்பற்றி ‘பிறந்த நாள் விழா, இறந்த நாள் விழா, ஆண்டு விழா’ என பல்வேறு விழாக்களையும் விடாது நடத்திக்கொண்டு நாங்கள் தான் உண்மையான முஸ்லிம்கள் என வீர முழக்கமிடுகிறோம்.

இவை போதாதென்று நபிகள் நாயகம் பிறந்த நாள் விழா, கௌதுல் அஃலம் நினைவு விழா, ரிஃபாயி ஆண்டகை விழா, நாகூர் நாயக விழா, காஜா முயீனுத்தீன் ஜிஸ்தி உரூஸ் விழா, மோத்தி பாவா ஆண்டு விழா, குணங்குடி மஸ்தான் விழா, பொட்டல் புதூர் மைதீன்(யானை) ஆண்டகை விழா, ஆத்தங்கரை செய்யிதலி அம்மா விழா, பீமாப்பள்ளி பீஅம்மா விழா, பீடி மஸ்தான் விழா, தக்கலை பீரப்பா விழா, மெய்நிலை கண்ட ஞானிகள் விழா என மிகவும் பக்தியோடு தேசிய விழாக்களாக கரக ஆட்டங்களுடன் யானை ஊர்வலம் சகிதமாக கொண்டாடப்பட்டு வரும் புதுமையான விழாக்களையும் நாடெங்கிலும் பரவலாகக் காண முடிகிறது.


ஞானமர்ர்க்கத்தின் பெயரால் தீட்சைகள்

நம்மை வழி நடத்தும் குருமார்களோ நமது பலவீனங்களையும், அறியாமையையும் பயன்படுத்திக்கொண்டு சுவர்க்கத்திற்கு வழிகாட்டுகிறோம் எனக் கூறி ஆதாயம் தேடி வழிகெடுத்து வருகின்றனர். பால் கிதாபு என்றும், தாவீசு என்றும், இஸ்மு என்றும், தீட்சை யென்றும், பைஅத் என்றும், முரீது என்றும் கூறி ஞான மார்க்கத்தின் பெயரால் நம்மை அதல பாதாளத்திற்கு அழைத்துச் செல்கின்றனர்.

பித்அத்கள் (புதுமைகள்) பெயரால் சமுதாயத்தில் அரங்கேறிவிட்ட சீர்கேடுகளைப் பார்த்ததீர்களா?


விஞ்ஞானயுகத்தில் கற்காலம்

விஞ்ஞானத்தின் உச்சிக்குச் சென்று வியத்தகு விந்தைகள் புரியும் இந்த அறிவியல் உலகில் வாழ்ந்து கொண்டு கற்கால மனிதர்களைப்போல் இயங்கும் நம் மக்களின் அறியாமையையும் பேதமையையும் என்னென்பது? இஸ்லாம் கூறும் அறிவியல் நுட்பங்களையும், அற்புதமான தத்துவங்களையும் தனிசிறந்த நாகரிகத்தையும் மிக உயர்ந்த கலாச்சாரத்தையும் அலட்சியப்படுத்தும் அவல நிலையை யாரிடம் சொல்வது?

இந்த போலிச் சம்பிரதாயங்களையும், சடங்குககளையும் புனித இஸ்லாம் அனுமதிக்கிறதா? இவற்றிற்கெல்லாம் சாவு மணியடிக்க வேண்டாமா? கண்மூடித்தனமான பழக்கங்களையெல்லாம் மண் மூடச்செய்ய வேண்டாமா? குர்ஆனிலோ ஹதீஸ்களிலோ இவற்றுக்கெல்லாம் ஏதேனும் ஆதாரங்கள் உள்ளனவா? என்றால் இல்லவே இல்லை. பின் எங்கிருந்து இவை இறக்குமதியாயின? யூதர்கள், கிறித்தவர்கள், இந்துக்கள் போன்ற மாற்றாரிடமிருந்து படிப்படியாக இறக்குமதியாகி தொற்றிக் கொண்ட சாத்திரங்கள்! ஒட்டிக்கொண்ட நோய்கள்!! பேயாட்டம் போடும் போலிச்சடங்குகள்!!!


இதோ ஒரு கணம் சிந்திப்பீர்! நாம் இந்துக்களா ? முஸ்லிம்களா ?


1. அங்கே சிலை வணக்கம் : இங்கே கப்ரு வணக்கம்
2. அங்கே தேர் திருவிழா : இங்கே சந்தனக்கூடு
3. அங்கே பால் அபிசேகம் : இங்கே சந்தன அபிசேகம்
4. அங்கே சாம்பல் திருநீறு : இங்கே சந்தனத் திருநீறு
5. அங்கே சிலைக்குப்பட்டுப்புடவை : இங்கே கப்ருக்குப்பட்டுத்துணி
6. அங்கே பூமாலை பத்தி ஆராதனை : இங்கேயும் பூமாலை பத்திகள்
7. அங்கே குத்துவிளக்கு : இங்கேயும் குத்து விளக்கு
8. அங்கே அம்மன் முன் சாஷ்டாங்கம்: இங்கே கப்ரின்முன் சாஷ்டாங்கம்.
9. அங்கே கோயிலைச் சுற்றி வருதல் : இங்கே கப்ரை சுற்றி வலம்வருதல்
10. அங்கே சர்க்கரை கற்கண்டு பிரசாதம்: இங்கே சர்க்கரை பாயாசம் தபர்ருக்
11. அங்கே நேர்ச்சை காணிக்கை : இங்கேயும் நேர்ச்சை காணிக்கை
12. அங்கே சாமியிடம் வேண்டுதல் : இங்கே கப்ரிலே வேண்டுதல்
13. அங்கே பிள்ளைக்காக பூஜை : இங்கே பிள்ளைக்காகப் பிரார்த்தனை
14. அங்கே குழந்தைக்காக தொட்டில் : இங்கேயும் தர்காவில் தொட்டில்
15. அங்கே திருப்பதி மொட்டை : இங்கேயும் தர்காவில் மொட்டை.
16. அங்கே மயிலிறகு மந்திரம் : இங்கேயும் மயிலிறகு ஆசீர்வாதம்
17. அங்கே தீட்சை : இங்கே முரீது, பைஅத்
18. அங்கே மஞ்சள் கயிறு தாலி : இங்கே தங்கம்-கருக மணித்தாலி
19. அங்கே பக்திப்பாடல் : இங்கே மவ்லிது ராத்தீபு பைத்து
20. அங்கே சுப்ரபாதம் : இங்கே ஞானப்பாடல்.
21. அங்கே ஜோதிடம், ஜாதகம் : இங்கே பால்கிதாபு, இஸ்முகிதாபு
22. அங்கே நல்ல நாள், ராவு காலம் : இங்கே நஹ்ஸு நாள், ராவு காலம்.
23. அங்கே மார்கழி மாதம் பீடை : இங்கே ஸஃபா மாதம் பீடை
24. அங்கே கழுத்தில் கையில் தாயத்து : இங்கேயும் கழுத்தில், கையில் தாவீசு
25. அங்கே சாமி ஆடுவார் : இங்கே பே ஆடும்.
26. அங்கே சாமி அருள் வாக்கு : இங்கே அவ்லியா கனவில் அருள்வாக்கு.
27. அங்கே தீமிதி உண்டு : இங்கேயும் முஹர்ரம் மாதத்தில் தீமிதி உண்டு.
28. அங்கே திதி திவசம் : இங்கே ஃபாத்திஹா, கத்தம்.
29. அங்கே சரஸ்வதி, லட்சுமி படங்கள் : இங்கே நாகூர், அஜ்மீர் படங்கள்,
30. அங்கே துவஜா ரோகனம் கொடி : இங்கே நாகூர் அஜ்மீர் கொடியேற்றல்.
31. அங்கே வீட்டு முகப்பில் ஓ மந்திரம் : இங்கே வீட்டில் 786 மந்திரம்.
32. அங்கே விநாயகர் ஊர்வலம் : இங்கே மீலாது, யானை ஊர்வலம்.
33. அங்கே காவடி ஊர்வலம் : இங்கே அல்லாஹ்சாமி ஊர்வலம்.


இவை மட்டுமா? இன்னும் எத்னை எத்தனையோ? சடங்குகள் !


இவ்வாறு ஆயிரமாயிரம் மதச்சடங்குகள் நம்மிடம் புரையோடிப் போய்விட்டன. நவூது பில்லாஹ்! வல்லான் அல்லாஹ் நம் சமுதாய மக்களைக் காப்பானாக! இப்போது சொல்லுங்கள்! நம்மிடம் இஸ்லாம் இருக்கிறதா? நாம் இஸ்லாத்தில் இருக்கிறோமா? நாம் முஸ்லிம்களாக வாழ்கிறோமா? போலிகளாக வாழ்கிறோமா?


முஸ்லிம்கள் எங்கே இருக்கிறார்கள்?

இந்திய விடுதலைக்கு வித்திட்ட அல்லாமா இக்பால் கூறுகிறார்:-
‘முஸ்லிம்கள் முஸ்லிம்கள் என்று கூப்பாடு போடுகிறார்கள்!
செயல்களில் சம்பிதாயச் சடங்குகளில நாம் இந்துக்களாக வாழ்கிறோம்.
ஆடைகளில் கலாச்சாரங்களில் மேலை நாட்டு மோகத்தில் கிறித்தவர்களாக வாழ்கிறோம்! வாணிபத்தில் வியாபார முறைகளில் யூதர்களாக வாழ்கிறோம்! அவ்வாறாயின் முஸ்லிம்கள் எங்கே இருக்கிறார்கள்? ‘முஸ்லிம்கள் எங்கே இருக்கிறார்கள்?’


‘அவர்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டே (அவனுக்கு) இணையும் கற்பிக்கிறார்கள்.’ (அல்-குர்ஆன்12:106) என்ற மறை வசனமும்,

‘யார் எந்த சமுதாயத்தைப் பின்பற்றி வாழ்கிறார்களோ அவர்கள் அந்த சமுதாயத்தைச்சார்ந்தவர்களே!’ (நூல் அபூ தாவூது) என்ற நபி மொழியும் இன்று மிகவும் சிந்திக்க வேண்டிய வைர வரிகள்!

இவற்றையெல்லாம் அசை போட்டு சிந்தித்து சீர்தூக்கி நமது அறிவிற்கேற்ற உயரிய மார்க்கமாம் தூய இஸ்லாத்தை வழுவாது பின்பற்றி குர்ஆன் சுன்னாஹ் வழியில் உண்மை முஸ்லிம்களாக வாழ்வோமாக!


வாருங்கள்.இன்று நாம் சபதம் ஏற்போம் !
அறிவுக்கேற்ற மார்க்கமாம் இஸ்லாத்தை நோக்கி அகில உலகமும் மிக வேகமாக வரும் இந்த கணினியுகத்தில், முஸ்லிம்களாகிய நாம், இனியும் அறிவுக்கே பொருந்தாத மூட நம்பிக்கைகளை நம்பி,

சடங்கு சம்பிரதாயங்களைச் செய்து மோசம் போக மாட்டோம்! போலி மதவாதிகளால் ஏமாற மாட்டோம்!! என சபதம் ஏற்போமாக!

இஸ்லாத்தின் தூய கொள்கைகளை உயிருள்ளவரை உறுதியுடன் பின்பற்றி அறநெறி வழுவாது வாழ்வோம்.
என இன்று வீரசபதம் ஏற்போமாக!

‘இஹ்தினஸ்ஸராத்தல் முஸ்தகீம்’

இறைவா! எங்களுக்கு நேரான வழியைக் காட்டுவாயாக! (அல்குர்ஆன்: 1:06)

رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَة ً وَفِي الآخِرَةِ حَسَنَة ً وَقِنَا عَذَابَ النَّار

‘ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனத்தன் வஃபில் ஆகிரத்தி ஹஸனத்தன் வகினா அதாபந்நார்’
எங்கள் இறைவா! எங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நன்மையை நல்கும் நல் வாழ்வை வழங்குவாயாக! (அல்குர்ஆன்: 2:201)