Tuesday, August 30, 2011

இரு பெருநாள் தொழுகைப் பற்றிய நபிமொழித் தொகுப்பு


பெருநாள் தொழுகையின் நேரம்:

ஈத் பெருநாட்களில் குளிர்ந்த காலை நேரங்களில் அவரவர் வீடுகளிலிருந்து வெளிப்பட்டு (தொழ) செல்பவர்களுக்கு அல்லாஹ் அளப்பரிய அருளைப் பொழிகிறான்.அறிவிப்பவர்: அனஸ்பின் மாலிக்(ரலி) நூல்: இப்னு அஸாகிர்

இரண்டு ஈட்டிகளின் உயரத்திற்கு சூரியன் உயரும்போது நோன்புப் பெருநாள் தொழுகையை நபி(ஸல்)தொழுவார்கள். (ஒரு ஈட்டியின் உயரம் என்பது ஏறத்தாள மூன்று மீட்டர்களாக ஆகும். அறிவிப்பாளர்: ஜுன்துப்(ரலி) நூல்: அஹ்மது இப்னுஹஸன்

நோன்புப் பெருநாளில் தொலச் செல்வதற்கு முன்பே சாப்பிடுவது:

நபி(ஸல்)அவர்கள் உண்ணாமல் நோன்புப் பெருநாள் தொழுகைக்கு புறப்பட மாட்டார்கள். ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையைத் தொழுவதற்கு முன் உண்ண மாட்டார்கள் என புரைதா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நூல்: திர்மிதீ

சில பேரிச்சம் பழங்களை உண்ணாமல் நோன்புப் பெருநாளில் (தொழுகைக்கு) நபி(ஸல்)அவர்கள் புறப்பட மாட்டார்கள். அறிவிப்பவர்: அனஸ்(ரலி) புகாரி மற்றோர் அறிவிப்பில் அவற்றை ஒற்றைப்படை எண்ணிக்கையில் உண்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

நபி(ஸல்)அவர்கள் ஈதுல் பித்ர் (நோன்பு) பெருநாளன்று காலையில் ஏழு பேரித்தம் பழங்களை சாப்பிடாமல் வெளியேற மாட்டார்கள் (அறிவிப்பாளர்: ஜாபிர்பின் சம்ரா(ரலி) நூல்: தப்ரானி மற்றோர் அறிவிப்பில் அவற்றை ஒற்றைப்படை எண்ணிக்கையில் உண்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. (அறிவிப்பாளர்: அனஸ்(ரலி) புகாரி)

தக்பீர்:

ஈத் பெருநாட்களை அல்லாஹ்வைப் புகழ்வது கொண்டும் தக்பீரைக் கொண்டும் அழகு படுத்துங்கள். அறிவிப்பாளர்: அனஸ்பின் மாலிக்(ரலி) நூல்:நயீம்

பெருநாள் வந்துவிட்டால் நபி(ஸல்)அவர்கள் (போவதற்கும் வருவதற்கும்) பாதைகளை மாற்றிக் கொள்வார்கள். புகாரி

நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (திடலில் தொழுவதால் தடுப்பாக) நபி(ஸல்) அவர்களுக்கு முன்னால் ஓர் ஈட்டி நாட்டப்படும். நபி(ஸல்)அவர்கள் (அதை நோக்கித்) தொழுவார்கள். இப்னுஉமர்(ரலி),புகாரி

நபி(ஸல்)அவர்கள் (பெருநாள் தொழுகைக்காகத்) தொழும் திடலுக்குப் புறப்படுவார்கள். அவர்களுக்கு முன்பே கைத்தடி எடுத்துச் செல்லப்பட்டுத் தொழும் இடத்தில் அவர்களுக்கு முன்னால் நாட்டப்படும். அதை நோக்கி நபி(ஸல்)தொழுவார்கள். இப்னு உமர்(ரலி), புகாரி


திடலில் பெருநாள் தொழுகை:


பெரும்பாலும் நபி(ஸல்)அவர்கள் பெருநாள் தொழுகைகளை திறந்த பொது மைதானத்தில் தொழுதுள்ளார்கள். மழை காலத்தில் பெருநாள் தொழுகையை பள்ளியில் நடத்தினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) அபூதாவூத், இப்னுமாஜா

நபி(ஸல்)அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளியில் தொழாமல்) திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர். அவர்கள் முதன் முதலில் தொழுகையையே துவக்குவார்கள். தொழுது முடித்து எழுந்து மக்களை முன்னோக்குவார்கள். மக்களெல்லாம் தங்கள் வரிசைகளில் அப்படியே அமர்ந்திருப்பார்கள். அவர்களுக்குப் போதனைகள் செய்வார்கள். (வலியுறுத்த வேண்டியதை) வலியுறுத்துவார்கள்; (கட்டளையிட வேண்டியதை) கட்டளையிடுவார்கள். ஏதேனும் ஒரு பகுதிக்குப் படைகளை அனுப்ப வேண்டியிருந்தால் அனுப்புவார்கள். எதைப் பற்றியேனும் உத்தரவிட வேண்டியருந்தால் உத்தரவிடுவார்கள். பின்னர் (இல்லம்) திரும்புவார்கள். அபூ ஸயீத்(ரலி), புகாரி

பெருநாள் தொழுகையில் பாங்கும், இகாமத்தும் சொல்லப்பட்டதில்லை:

ஜாபிர்(ரலி), இப்னு அப்பாஸ்(ரலி) ஆகியோர் கூறினார்கள்: நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் பாங்கு சொல்லப்பட்டதில்லை. நூல்:புகாரி

நபி(ஸல்)அவர்கள் (பெருநாள் தொழுகைக்குத்) தயாராகித் தொழுகையைத் துவக்கினார்கள். பிறகு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். நபி(ஸல்)அவர்கள் (உரை நிகழ்த்தி) முடித்து இறங்கிப் பெண்கள் பகுதிக்குச் சென்று பிலால்(ரலி) உடைய கை மீது சாய்ந்து கொண்டு பெண்களுக்குப் போதனை செய்தார்கள். அறிவிப்பாளர்: ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி), நூல்: புகாரி

பிலால்(ரலி) தம் ஆடையை ஏந்திக்கொள்ள, பெண்கள் தங்கள் தர்மத்தை அதில் போடலானார்கள். நான், நபி(ஸல்)அவர்கள், அபூ பக்ர்(ரலி), உமர்(ரலி), உஸ்மான்(ரலி) ஆகியோருடன் பெருநாள் தொழுகையில் பங்கெடுத்துள்ளேன். அவர்கள் அனைவரும் உரை நிகழ்த்துவதற்கு முன்பே தொழுபவர்களாக இருந்தனர். புகாரி

நபி(ஸல்)அவர்கள், அபூ பக்ர்(ரலி), உமர்(ரலி) ஆகியோர் இரண்டு பெருநாள்களிலும் உரை நிகழ்த்துவதற்கு முன் தொழுபவர்களாக இருந்தனர். இப்னு உமர்(ரலி), நூல்:புகாரி


பெருநாள் தொழுகைக்கு முன் பின் எந்த தொழுகையுமில்லை:

நபி(ஸல்)அவர்கள் நோன்புப் பெருநாள் தினத்தில் புறப்பட்டு இரண்டு ரக்அத்கள் தொழுதனர். அதற்கு முன்பும் பின்பும் எதையும் அவர்கள் தொழவில்லை. அவர்களுடன் பிலால்(ரலி) அவர்களும் சென்றனர் என இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நூல்:புகாரி

நபி(ஸல்)அவர்கள் நோன்புப் பெருநாளில் இரண்டு ரக்அத்கள் தொழதனர். அதற்கு முன்னம் பின்னும் எதையேனும் தொழவில்லை. பிறகு பெண்கள் பகுதிக்கு வந்தனர். அவர்களுடன் பிலால்(ரலி) இருந்தார். தர்மம் செய்வதன் அவசியம் குறித்து அவர்களுக்கு நபி(ஸல்)விளக்கினார்கள். பெண்கள் (தங்கள் பொருட்களைப்) போடலானார்கள். சில பெண்கள் தங்கள் கழுத்து மாலையையும் வளையல்களையும் போடலானார்கள். அறிவிப்பவர்:இப்னு அப்பாஸ்(ரலி), நூல்: புகாரி


முதல் ரக்அத்தில் ஏழு தக்பீர்களும், இரண்டாவது ரக்அத்தில் ஐந்து தக்பீர்களும் :

நபி(ஸல்)அவர்கள் பெருநாள் தொழுகையில் முதல் ரக்அத்தில் ஏழு தக்பீர்களும் இரண்டாவது ரக்அத்தில் ஐந்து தக்பீர்களும் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அம்ரு(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நூல்: அஹ்மத், இப்னுமாஜா

“நோன்புப் பெருநாள் தொழுகையில் முதல் ரக்அத்தில் ஏழு தக்பீரும் இரண்டாவது ரக்அத்தில் ஐந்து தக்பீரும் உள்ளது. அவை இரண்டிற்கும் பின்னரும் கிராஅத் (குர்ஆனை ஓதுதல்) உண்டு” என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் என அம்ரு இப்னு ஷுஐப் தம் தந்தை மற்றும் பாட்டனார் வாயிலாக அறிவிக்கிறார். நூல்: புகாரி, திர்மிதீ


பெருநாள் தொழுகையில் பெண்கள்:


நபி(ஸல்)அவர்கள் நோன்புப் பெருநாளில் இரண்டு ரக்அத்கள் தொழதனர். அதற்கு முன்னம் பின்னும் எதையேனும் தொழவில்லை. பிறகு பெண்கள் பகுதிக்கு வந்தனர். அவர்களுடன் பிலால்(ரலி) இருந்தார். தர்மம் செய்வதன் அவசியம் குறித்து அவர்களுக்கு நபி(ஸல்)விளக்கினார்கள். பெண்கள் (தங்கள் பொருட்களைப்) போடலானார்கள். சில பெண்கள் தங்கள் கழுத்து மாலையையும் வளையல்களையும் போடலானார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி), நூல்:புகாரி

வீட்டில் தனித்து இருக்கும் நாங்கள் மாதவிடாய் பெண்கள் முதற்கொண்டு இரு பெருநாள் தொழுகைக்கு வெளியே வர ஆணையிடப்பட்டோம் தொழுகையில் கலந்து கொள்ளவும், பிரார்த்தனைகளில் பங்கேற்கவும் அனுமதிக்கப்பட்டோம். ஆனால் மாதவிடாய் பெண்கள் தொழுமிடத்திலிருந்து ஒதுங்கி இருக்க பணிக்கப்பட்டோம். அப்போது ஒரு பெண் அல்லாஹ்வின் தூதரே! எங்களில் எவருக்காவது உடை இல்லையெனில் என்ன செய்வது என வினவினார். அதற்கு நபி(ஸல்)அவர்கள் உங்களது தோழிகளிடமிருந்து ஓர் உடையை கடனாக வாங்கி உடுத்தி வாருங்கள் என பதில் கூறினர். அறிவிப்பவர் உம்மு அதிய்யா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், நஸயி,நூல்:இப்னுமாஜ்ஜா

நபி(ஸல்)அவர்கள் (பெருநாள் தொழுகைக்குத்) தயாராகித் தொழுகையைத் துவக்கினார்கள். பிறகு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். நபி(ஸல்)அவர்கள் (உரை நிகழ்த்தி) முடித்து இறங்கிப் பெண்கள் பகுதிக்குச் சென்று பிலால்(ரலி) உடைய கைமீது சாய்ந்து கொண்டு பெண்களுக்குப் போதனை செய்தார்கள். பிலால்(ரலி) தம் ஆடையை ஏந்திக் கொள்ள, பெண்கள் தங்கள் தர்மத்தை அதில் போடலானார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி), புகாரி

நபி(ஸல்)அவர்கள் நோன்புப் பெருநாளில் இரண்டு ரக்அத்கள் தொழதனர். அதற்கு முன்னம் பின்னும் எதையேனும் தொழவில்லை. பிறகு பெண்கள் பகுதிக்கு வந்தனர். அவர்களுடன் பிலால்(ரலி) இருந்தார். தர்மம் செய்வதன் அவசியம் குறித்து அவர்களுக்கு நபி(ஸல்)விளக்கினார்கள். பெண்கள் (தங்கள் பொருட்களைப்) போடலானார்கள். சில பெண்கள் தங்கள் கழுத்து மாலையையும் வளையல்களையும் போடலானார்கள். அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: புகாரி


பெருநாள் தொழுகையில் ஓதிய வசனங்கள்:


நபி(ஸல்)அவர்கள் இரு பெருநாள் தொழுகையிலும் ஜுமுஆத் தொழுகையிலும் ஸப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா (87வது அத்தியாயத்தையும்) ஹல் அதாக்க ஹதீஸுல் காஷியா (88வது அத்தியாயத்தையும்) ஓதி வந்தனர். பெருநாளும், ஜுமுஆவும் ஓரே நாளில் வரும்பொழுது இந்த இரண்டு அத்தியாயங்களை இரண்டு தொழுகையிலும் ஓதுவார்கள். அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர்(ரலி) நூமான் இப்னு பஷீர், நூல்கள்: முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், திர்மிதீ, நஸயீ

50வது அத்தியாயத்தையும் 54வது அத்தியாயத்தையும் ஓதியதாக ஓர் அறிவிப்பு முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், திர்மிதீ, நஸயீ ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது

பிரார்த்தனை:


பருவமடைந்த மற்றும் மாதவிடாய் பெண்களையும் பெருநாள் தொழுகைக்கு வெளியே அனுப்புமாறு நபி(ஸல்)அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். நற்பணிகளில் மற்றும் முஸ்லிம்களுடைய துஆவில் அவர்கள் பங்கு பெறுவதற்காக. ஆனால், மாத விலக்கான பெண்கள், தொழும் இடத்தின் ஓரப்பகுதியில் இருக்க வேண்டும். என உம்மு அதிய்யா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

பெருநாளில் நாங்கள் (தொழும் திடலுக்கு) புறப்பட வேண்டுமெனவும் கூடாரத்திலுள்ள கன்னிப் பெண்களையும் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டும் எனவும் கட்டளையிடப்பட்டிருந்தோம். பெண்கள் ஆண்களுக்குப் பின்னால் இருப்பார்கள். ஆண்களின் தக்பீருடன் அவர்களும் தக்பீர் கூறுவார்கள். ஆண்களின் துஆவுடன் அவர்களும் துஆச் செய்வார்கள். அந்த நாளின் பரக்கத்தையும் புனிதத்தையும் அவர்கள் எதிர்பார்ப்பார்கள். அறிவிப்பவர்: உம்மு அத்திய்யா (ரலி) நூல்கள்: புகாரீ, முஸ்லிம்.

தொகுப்பு: S.A. சுல்தான் (seaport, Jeddah)


Saturday, August 27, 2011

நிச்சயிக்கப்பட்ட அந்த நாளிகை

கருத்து வேறுபாடற்ற ஒரே தலைப்பு, அது மரணம் என்பது மட்டுமே! இரண்டாம் கருத்துக்கு இடம்பாடுள்ள விடயங்களில் தலையைப் பிய்த்துக் கொள்ளும் நாம், நிச்சயிக்கப்பட்ட அந்த நாளிகையை மறந்து விட்டோமா? அல்லது உலக வாழ்க்கையும் சடவாதமும் நம்மை மறக்கடிக்கச் செய்து விட்டதா?

புரியாத புதிராய் நம் வாழ்க்கை நடை போட
நாட்டு நடப்புக்கள் நம் மண்டையை நறை போட
இறத்தக் களரிகள் இதயத்தைத் துளை போட
இங்கிதமற்ற வாழ்க்கை மட்டும் நமை இம்சைப் படுத்துகின்றது!

மனிதா நில்!
இன்றோ நாளையோ உன் உயிரின் கதை முடிந்து போகுமே!
இனிய பொழுதுகளும் சேர்ந்து போகுமே!
இல்லற வாழ்க்கையும் அதனோடே இனைந்து போகுமே!

உன் வாழ்க்கையின் வசந்தங்கள் எங்கே?
வாஞ்சை தந்த வனப்புக்கள் எங்கே?

மரணம் உனை அறவணைக்கு முன் முளங்காளிட்டு உனக்கு வணக்கம் செலுத்தியவன் கூட, நீ கட்டையாய்க் கிடக்கும் போது பிணத்தை இன்னுமா புதைக்கவில்லை எனக் கூறி பின்தள்ளி நின்றுவிடுவான்.
நாட்டு நடப்புக்கள் நமக்கு பாடம் சொல்கின்றன. நாம் தான் மரணத்தை மறந்து விட்டோமே!

கட்டு நோட்டுக்களும்
கடை வாசல்களும்,
காட்டு வாழ்க்கை போல் கசந்து விடு முன்னே
உன் கடந்த காலத்தை அசை போடு!
மீதி வாழ்க்கையை நிறை போடு!

உன் உடலுக்காய்த் தொழும் நாள் வருமுன்
நீயே – உனக்காய்த் தொழுது கொள்!
உதிர்ந்து போகும் உன் வாழ்க்கையை நினைந்து
உன் உதிரா வாழ்க்கைக்காய் உனை வார்த்துக் கொள்!

நாளைய பொழுதுகள் நமக்காய் காத்துக் கிடக்கின்றன
அது – சுட்டெரிக்கும் சுடு நொருப்பா?
இல்லை சுவனத்தின் சுகந்தங்களா?
யாவும் அறிந்தோன் வல்லோன் றஹ்மானே!!

உலக நெருப்பு நமக்குப் புதிதல்ல
உலகையே உருக்கிடும் நெருப்புத்தான் நமக்குப் புதிது!
உன் நிஜங்களை ஒரு முறை நிறுத்துக் கொள்!
போலிகளை அவ்வப்போது கலைந்து கொள்!

கடைசி நாளிகைகள் கண்சிமிட்டும் போது
கண்ணீர் மழைகளெல்லாம் அந்த நெருப்பை அனைக்கமாட்டா!
கபனும், கப்ரும் உனை அழைக்கு முன்
மீண்டும் ஒரு முறை அழுது கொள்!

மலக்குல் மெளத்தும் வரும் முன்னே
மண்ணறை வாழ்க்கைதனைப் பெறு முன்னே
மன நிலை மாற்றி மறுமைக்காய் வாழ்க்கையை வரைவோமே!!

By: Abu Areej


நோன்புப் பெருநாள் தர்மம்

புனிதமான இந்த மாதத்தில் இறைவன் கடமையாக்கிய வணக்கங்களில் ஒன்றுதான் ஸகாதுல் பித்ர் ஆகும். உலோபித்தனத்திலிருந்து மனதை சுத்தப்படுத்தவும், நோன்பாளிக்கு ஏற்படும் தவறுகள், கெட்ட வார்த்தைகள், வீண் விளையாட்டுகளில் இருந்து பரிசுத்தமாகவும், ஏழை, எளியோர்க்கு உதவியாகவும், ரமழான் மாதத்தில் பூரணமாக நோன்பு நோற்று வணக்கங்களை இலகுவாக நிறைவேற்றியதையிட்டு இறைவனுக்கு நன்றியை வெளிப்படுத்தும் நோக்கோடு இறைவன் இதை கடமையாக்கியுள்ளான்.

நோன்பு நோற்றவர் வீணான காரியங்களில் ஈடுபட்டதற்குப் பரிகாரமாகவும், ஏழைகளுக்கு
உணவாகவும் இருக்கும் பொருட்டு நோன்புப் பெருநாள் தர்மத்தை நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கடமையாக்கினார்கள்.என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(ஆதாரம் அபூதாவுத்)

முஸ்லிமான அடிமைகள், அடிமை அல்லாதவர்கள் ஆண்கள், பெண்கள் அனைவர் மீதும் ஸகாதுல்
பித்ர் கடமையாகும். தனக்கும் தனது குடும்பத்தினருடைய தேவைக்கும் இருப்பதை விட ஒரு
ஸாவு மேலதிகமாக ஒரு முஸ்லிம் வைத்திருந்தால் அவரின் மீது ஸகாதுல் பித்ர் கடமையாகும்.

அடிமைகள்,அடிமைகள் அல்லாதவர்கள், ஆண்கள் பெண்கள், சிறுவர், பெரியோர் ஆகிய அனைத்து
முஸ்லிம்கள் மீதும் நோன்புப் பெருநாள் தர்மத்தை நபிகள் நாயகம் கடமையாக்கினார்கள்.
பேரீச்சம் பழம், தீட்டப்படாத கோதுமை ஆகியவற்றிலிருந்து ஒரு “ஸாவு” எனவும் நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள். மேலும் (பெருநாள்) தொழுகைக்கு மக்கள்
புறப்படுவதற்கு முன்பே அதை வழங்கி விட வேண்டும் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பாளர் இப்னு உமர் (ஆதாரம்: புகாரி முஸ்லிம்)

உணவிலிருந்து அல்லது பேரீச்சம் பழம், கோதுமை பாலாடைக் கட்டி, போன்றவற்றிலிருந்து ஒரு
ஸாவு நோன்புப் பெருநாள் தர்மமாக நபி (ஸல்) அவர்கள் காலத்தில் கொடுத்து வந்தோம்.

இன்னுமொரு அறிவிப்பில் அன்றைய உணவு கோதுமை, உலர்ந்த திராட்சை, பாலாடைக் கட்டி,
பேரீச்சம் பழம் ஆகியவையாகும்.

மேற்குறிப்பிட்ட உணவு வகைகளில் சிறந்த பிரயோசனமுள்ள உணவுகளை ஏழை, எளியோர்க்கு
கொடுப்பது ஒரு முஸ்லிமின் கடமையாகும்.

நீங்கள் நேசிக்கும் பொருட்களிலிருந்து தானம் செய்யாதவரை நீங்கள் நன்மையடைய
மாட்டீர்கள். எந்தப் பொருளை நீங்கள் செலவு செய்தாலும், நிச்சயமாக அல்லாஹ் அதை
நன்கறிந்தவனாக இருக்கிறான்.

அபீ சயீத் அல் குத்ரி (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில் கூறப்பட்ட உணவு வகைகள்
அல்லாமல் இன்று மக்கள் உணவாக கருதக் கூடிய அரிசி போன்றவற்றை ஸகாதுல் பித்ராக
கொடுத்தால் அது ஆகுமானது என சில மார்க்க அறிஞர்கள் இப்னு தைமியா, இப்னுல் கையும்
போன்றோர் கூறுகின்றனர்.

ஸகாதுல் பித்ர் விடயத்தில் “ஸாவு” என்பது நான்கு முத்துகளாகும். முத்து என்றால்
நடுத்தரமான ஒரு மனிதனின் இரண்டு கைகளை இணைத்து சிறந்த கோதுமை போன்றவைகளை நிறைத்து
எடுப்பதாகும்.

நோன்புப் பெருநாள் தர்மத்தை வழங்க இரண்டு நேரங்கள் உள்ளன:

1- பெருநாள் இரவு சூரியன் மறைந்ததிலிருந்து ஆரம்பமாகின்றது. அதிலே மிகச் சிறந்தது
பஜ்ர் தொழுகைக்கும், பெருநாள் தொழுகைக்கும் இடைப்பட்ட நேரம். இப்னு உமர் (ரலி)
அவர்கள் அறிவிக்கும் ஒரு ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் ஸகாதுல் பித்ரை
கடமையாக்கினார்கள். மேலும் பெருநாள் தொழுகைக்கு மக்கள் செல்வதற்கு முன் அதை கொடுத்து
விடுமாறும் ஏவினார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. (ஆதாரம் புகாரி)

2- அனுமதிக்கப்பட்ட நேரம்: இந்த நேரம் பெருநாள் தினத்திற்கு ஒரு நாள் அல்லது இரண்டு
நாட்களுக்கு முன்பாகும்.

ஸகாதுல் பித்ரை பெறத் தகுதியானவர்களுக்கு இப்னு உமர் (ரலி) அவர்கள் கொடுத்தார்கள்.
மேலும் பெருநாள் தினத்திற்கு இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்பும்
கொடுப்பவர்களாகவும் இருந்தார்கள்.

பெருநாள் தொழுகைக்கு முன்பு யார் அதை வழங்கிவிடுகிறாரோ அது ஏற்றுக் கொள்ளப்பட்ட
தர்மமாகும். யார் அதை தொழுகைக்குப் பின் வழங்கிறாரோ அது பொதுவான ஸதகாவாகும். என நபி
(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஆறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்
(ஆதாரம்:அபு தாவுத்)

பெருநாள் தொழுகை முடியும் வரை பிற்படுத்தினால் அது களாவாகும். அதாவது அதை மீண்டும்
திருப்பிக் கொடுக்க வேண்டும். நேரம் முடிந்து விட்டதனால் அந்தக் கடமை அவரை விட்டும்
நீங்கி விடாது. மேலும் பிற்படுத்தியதனால் அவர் பாவியாவார் என ஷைகுல் இஸ்லாம் இப்னு
தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

ஏழை, எளியோர்க்கு இந்த தர்மம் கொடுக்கப்பட வேண்டும்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில் இது ஏழைகளின் உணவு என
குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த தர்மத்தை ஒரு ஜமாஅத்தினரிடமோ அல்லது
குடும்பத்தில் உள்ள அனைவருடைய பங்கையும் ஒரு ஏழைக்கு வழங்குவதோ
அனுமதிக்கப்பட்டுள்ளதாகும். தேவை ஏற்படின் ஒரு ஏழையின் பங்கை பிரித்து பலருக்கு
கொடுப்பதும் ஆகுமானதாகும்.

ஆனால் இந்த தர்மத்தை பணமாக கொடுப்பது ஆகுமானதல்ல. நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பணம்
கொடுப்பதற்கு வசதி இருந்த போதும் உணவு வகைகளையே நபி (ஸல்) அவர்கள்
குறிப்பிட்டுள்ளார்கள். உணவின் பெறுமதியை கொடுப்பது ஆகுமானதாக இருந்தால் நபி (ஸல்)
அவர்கள் அதை தெளிவுபடுத்தியிருப்பார்கள். காரணம் சட்டங்களை தெளிவு படுத்துவது
அவர்களின் காலத்தில் அவசியமாக இருந்தது. நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இருந்த
நபித்தோழர்கள் தன்னிடம் வசதி இருந்த போதும் எவரும் இந்த தர்மத்தை பணமாக கொடுத்ததாக
அறியப்படவில்லை. மேலும் பணத்தைக் கொடுப்பது கண்ணியமான இந்த அமலை மறைப்பதாகவும்,
இந்த சட்டங்களை மனிதர்கள் மறந்து போவதாகவும் ஆகிவிடுகிறது.

பெருநாள் தினத்தன்று எந்த ஊரில் இருக்கிறாரோ அங்குள்ள ஏழைகளுக்கு இந்த தர்மத்தை
வழங்க வேண்டும் என்பது அடிப்படையாகும். தர்மம் வழங்கக்கூடியவருடைய ஊரில் இருக்கும் ஏழைகளை விட மிகவும் கஷ்ட நிலையில் அடுத்த ஊரில் இருப்பின் அங்கு கொடுப்பது ஆகுமானதாகும்.


அஷ்ஷேக் அமீன் பின் அப்தல்லாஹ் அஷ்ஷகாவி
தமிழில்: மவ்லவி முஹம்மத் இம்ரான் கபூரி
(அபூ அப்துல் பாசித்)

Thursday, August 25, 2011

தாய் தந்தையரின் முக்கியத்துவம்

“(நபியே!) உமதிறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்றும் (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய் தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளையிட்டிருக்கிறான். (17 :23)

தாய் தந்தையரின் முக்கியத்துவத்தைத் தெளிவாக விளக்கும் மிக ஆழமான வசனம். ஆனால் இன்று மனிதர்களில் பெரும்பாலோரும் ஏன்! ஓர் இறைவனை வணங்கும் நிலையில் முதன்மை தரத்தை உடைய மக்களில் பெரும்பான்மையினோரும் பெற்றோர்கள் விஷயத்தில் தான் தாழ்ந்து நடந்து கொள்கின்றனர். இவ்விசயம் அவர்களை சுவனத்திற்கு செல்லும் நிலையை தடுக்கும் சக்தி கொண்ட மிக முக்கியமான ஒரு அம்சம் என்று அவர்கள் அறியாததினாலே! அல்லது அறிந்தும் அசட்டையாக இருப்பதே!

நம்மைப் போலவே அவர்களும் இளவயதுகளைக் கடந்து இன்று காலத்தின் வேகத்தால் முதுமையை அடைந்திருக்கின்றனர். அவர்களுடைய இளம் வயதில் நம்மை, அதாவது அவர்களுடைய பிள்ளைச் செல்வங்களை நன்றாக வளர்த்து நல்ல ஒரு நிலைக்கு ஆளாக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளையே கொண்டு வாழ்ந்தனர். அவர்களின் முயற்ச்சிக்கு தக்கவாரோ அல்லது கூடுதல், குறைவாகவோ இறைவன் அவர்களுக்கு அருளியதைக் கொண்டு நம்மை வளர்த்து நமது இன்றைய நிலைக்கு முக்கியமான கருப்பொருளாக இருக்கின்றனர். இதை நாம் ஒவ்வொருவரும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

இன்று பெரும்பான்மையோரின் கூற்றுக்களை ஆராய்வோமேயானால் மிகப் பெரும் ஆச்சரியமாக இருக்கும்; அதாவது:-

“எங்களுடைய பெற்றோர்கள் எங்களுக்கு எதையுமே விட்டு வைக்கவில்லை,” அதனால் தான் நாங்கள் இவ்வளவு கஷ்ட்டப்படுகிறோம்”

என்பதே அக்கூற்று இக்கூற்றுக்காரர்கள் ஒரு முக்கியமான விசயத்தை மறந்து விடுகின்றனர். அதாவது இவர்களுடைய பிள்ளைகளும் நாளைக்கு இதே கூற்றைத் தானே மொழிவார்கள்! இதன் பின்னணி என்ன என்பதைக் காண்போம்.

எந்த ஒரு மனிதனாயினும் அவனுடைய முயற்சிகள் அத்தனையும் பிரயோகித்து எப்படியாகிலும் நாம் ஒரு நல்ல நிலையை அதாவது ஒரு வசதியான வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்றே முயற்சி செய்கிறான். அப்படி முயற்சி செய்யும்பொழுது இறைவனின் நாட்டப்படி சிலர் நல்வழியில் சம்பாதித்து முன்னேறுகிறார்கள். சிலர் தீயக் காரியங்களில் முயற்சித்து அந்நிலையை அடைகிறார்கள். சிலர் எந்நிலை முயன்றும், முன்னேறாமல் எப்பவும் போல் ஒரே நிலையில் இருக்கிறார்கள்.

இறைவனின் நாட்டப்படியே அனைத்தும் நடக்கிறது என்பதை அறிகின்ற விசுவாசிகளான மனிதர்கள், மேற்சொன்ன மூன்றாவது நிலையை அடைகின்ற பெற்றோர்கள் எந்நிலையிலும் அவ்வாழ்க்கைக்கு அவர்கள் முழுப் பொறுப்பல்ல என்பதை உணர வேண்டும். இதை மேலும் உணர வேண்டுமாயின் ஒவ்வொருவரும் தத்தமது நிகழ்கால வாழ்க்கையையே உதாரணமாகக் கொள்ளலாம். அதாவது நமது முயற்சி எப்படிப்பட்டது? அதற்காக நாம் செய்கின்ற தியாகங்கள் முதலியன. இதிலிருந்து நாம் எந்த அளவு இன்றைய நிலையில் முயற்சிக்கிறோமோ! அதை போலவே அல்லது அதைவிடக் கூடுதலாகவே நம் பெற்றோர்களும் முயற்சித்து இருக்கலாம். ஆனால் இறைவனின் நாட்டப்படி அவர்களுக்கு உண்டானதை அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். இதை நாம் முற்றிலும் நன்கு ஆராய்ந்து உணர்ந்தவர்களாக பெற்றோர்களை குற்றஞ்சாட்டுவதை முழுமையாக தவிர்க்க வேண்டும். மேலும் இறைவன் நமக்கு அருளிய இவ்வாழ்வில் ஒவ்வொருவருடைய தனிப்பெரும் செயலாகவே பொருளீட்டுவதைக் கொள்ள வேண்டும் என்பதை ஆணித்தரமாக கீழ்கண்ட வசன மூலம் அறிகிறோம்.

“தொழுகை முடிவு பெற்றால், பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள்; நீங்கள் சித்தியடையும் பொருட்டு அடிக்கடி அல்லாஹ்வை நினைவுகூறுங்கள்.” (62:10)

இதை நினைவுகூர்ந்தவர்களாக பெற்றோரை குறை கூறும் தீய வழக்கத்தை மாற்றி, ஒவ்வொருவரும் நல்வழியில் முயற்சி செய்து முன்னேற முயல வேண்டும்.

தாய் தந்தையரிடம் பிள்ளைகள் அன்பாக நடந்து கொள்வது, பின்னவர்களின் இரு உலக வாழ்க்கைக்கும் மிகப் பெரும் வெற்றியை பெற வழிவகுக்கின்றது. பிள்ளைகளின் மேல் வாழ்க்கைக்காக இருவருமே தங்களைக் கூடுமானவரை அர்ப்பணித்திருக்கிறார்கள். இதை உணர்த்தும் விதமாகவே இறைவன்:

“தனது தாய், தந்தை(க்கு நன்றி செய்வது) பற்றி மனிதனுக்கு நாம் நல்லுபதேசம் செய்தோம். அவனுடைய தாய், துன்பத்தின் மேல் துன்பத்தை அனுபவித்து, (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள். (அவன் பிறந்த) பிறகும் இரண்டு வருடங்களுக்கப் பின்னரே அவனுக்கு பால் மறக்கடித்தாள். (ஆகவே. மனிதனே) நீ எனக்கும், உன்னுடைய தாய், தந்தைக்கும் நன்றி செலுத்தி வா, (முடிவில் நீ) என்னிடமே வந்து சேர வேண்டியதிருக்கிறது. (31:14)

இன்று பெரும்பான்மையான இளைஞர்களின் பெற்றோருடைய தொடர்பு மிக ஒரு மோசமான நிலையிலேயே அமைந்துள்ளது. இதற்கு பெற்றோர்களும் முக்கிய காரணமாக அமைகிறார்கள். காரணம், மார்க்க விசயங்களில் அவர்கள் அக்கறை காட்டாததினாலே இந்நிலை அமைகிறது. இறைக் கட்டளைகளை அறிந்து, அதன்படி நடக்க வேண்டும், மேலும் அதில் தான் வெற்றியிருக்கிறது என்று நினைத்து பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை வளர்த்து இருந்தால், இந்நிலைகளை அடைய வாய்ப்பில்லாமல் போயிருக்கும். இதைத் தவிர்த்துத் தங்களின் மனோ இச்சைகளின்படி இறைவனுடையக் கட்டளைகளை மறந்து அல்லது தங்களுடைய வசதிக்குத் தக்கபடி இறைக்கட்டளைகளை ஏற்று நடக்கும்பொழுது, அவர்கள் வளர்க்கும் பிள்ளைகளும் வாழ்க்கையில் ஒரு பற்றுதல் இல்லாமல் அதாவது மறுமையைப் பற்றிய சிந்தனை சிறிதும் இல்லாமல் ஏதோ வாழ்கிறோம் என்ற நிலைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இந்நிலைக்குத் தள்ளப்படும் பிள்ளைகள் காலப்போக்கில் தாய் தந்தையரை மதிக்காமல் அசட்டையாகவே வாழ முற்படுகிறார்கள்.

இதை தவிர்க்க வேண்டுமெனில் ஒவ்வொருவரும் இறைக்கட்டளைகளின்படி வாழ முழு முயற்சி செய்தவர்களாக தாங்களும் நல்வழியில் நடந்து தத்தமது பிள்ளைகளையும் அந்நிலையில் வளர்க்க முயற்சி செய்ய வேண்டும். அப்படியே ஏதோ காரணங்களினால் பெற்றோர்களே தவறுகள் செய்திருந்தாலும் (மனித இயல்புத்தானே!) பிள்ளைகள் அவற்றை மறந்து, அவர்களை அறவணைத்து வாழ முற்பட வேண்டும். இது இரு சாரருக்கும் பொருந்தும். தவறு செய்பவர்களிடம் அல்லது செய்தவர்களிடம் நாம் மென்மையாக எடுத்துச் சொல்லி அவர்களின் தவறுகளைக் களைய முயல வேண்டும். நமது தளராத அரவணைப்பால், காலப்போக்கில் அவர்களே தங்களின் தவறுகளை உணர்ந்து நமக்காக வேண்டி இறைவனிடம் பிரார்த்திக்கும் ஒரு நிலைக்கு ஆளாகிவிடுவார்கள்.

நாம் இவ்வுலகில் வாழும் காலமெல்லாம், பெற்றோர்களுக்கு நம்மால் இயன்றவரை உதவிகளை செய்வதை நமது தலையாயக் குறிக்கோளாக கொள்ள வேண்டும். மேலும் அவர்கள் கூறும் நல்ல ஆலோசனைகளை அது இறைக்கட்டளைக்குட்பட்டதாயின் செவியேற்ற அமுல் நடத்த முற்பட வேண்டும். இதன் தராதரத்தை அறியும் விதமாகவே இறைவன் :

தாய் தந்தைக்கு நன்மை செய்யும் விதமாக நாம் மனிதனுக்கு நல்லுபதேசம் செய்திருக்கின்றோம். (எனினும்) நீ அறியாத (எவ்வித ஆதாரமும் இல்லாத)வைகளை எனக்கு இணையாக்குபடி (மனிதனே!) அவர்கள் உன்னை நிர்ப்பந்திப்பதால், (அவ்விஷயத்தில்) நீ அவ்விருவருக்கும் வழிபடாதே! (என்னிடமே) நீங்கள் திரும்ப வேண்டிதிருக்கிறது. நீங்கள் செய்து கொண்டிருந்தவைகளைப் பற்றி அது சமயம் நான் உங்களுக்கு அறிவிப்பேன். (29:8)

மேலும் நபி (ஸல்) கூறுகிறார்கள்.
பெரும்பாவங்களான: அல்லாஹ்வுக்கு இணை வைத்தல், பெற்றோருக்கு இடர் செய்தல், கொலை செய்தல், பொய் சத்தியம் செய்தல் ஆகியவைகளாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். (அப்துல்லாஹ்பின் அம்ரு(ரழி) புகாரீ)

மேற்காண்பவற்றிலிருந்து பெற்றோர்களை அரவணைத்து நடப்பது, நமது இரு உலக வாழ்க்கைக்கு ஒரு முக்கியமான பங்கை வகிக்கிறது என்பதை அறிகிறோம். இதை உணர்ந்தவர்களாக, பெற்றோர்களிடம், அன்பாகவும், கனிவாகவும், மேலும் அவர்களுக்கு வேண்டிய உதவிகளை நம்மால் இயன்றவரை செய்து நமது இரு உலக வாழ்க்கையிலும் வெற்றி பெற்றவர்களாக வாழ சகோதர, சகோதரிகள் முன் வருவார்களாக! அல்லாஹ் உதவி செய்ய போதுமானவன்.

கணவனின் கடமை


கணவன் திருமணத்திற்குப் பிறகு தம் மனைவியுடன் பழகுவதிலும் அவளை நடத்துவதிலும் இஸ்லாம் கற்பிக்கும் நெறி முறைகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகள், அவளுடன் அழகிய முறையில் பழகுவது, அவளைக் கண்ணியமாக நடத்துவது ஆகியவை குறித்து இஸ்லாம் போதிக்கும் நல்லுரைகளை நாம் ஆராய்ந்தால் அவை நம்மை வியப்பில் ஆழ்த்திவிடுகின்றன. இஸ்லாம், பெண்ணின் உரிமைகளைப் பற்றி மிக ஆழமாக உபதேசித்துள்ளது. அவளுக்கு உலகின் எந்த மார்க்கமும் அளித்திராத உயரிய அந்தஸ்தை வழங்கியுள்ளது.

இதோ, அல்லாஹ்வின் தூதர் ஆண்களை எச்சரிக்கிறார்கள்:

“பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்! ஏனெனில், பெண், (வளைந்த) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டுள்ளாள். விலா எலும்பின் மிகக் கோணலான பகுதி அதன் மேல் பகுதியாகும். அதை நீ நிமிர்த்திக் கொண்டே போனால், ஒடித்து விடுவாய். அதை அப்படியே நீ விட்டுவிட்டால் கோணல் உள்ளதாகவே நீடிக்கும். ஆகவே, பெண்கள் விஷயத்தில் உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

“பெண், விலா எலும்பைப் போன்றவள். அவளை நீ நிமிர்த்தினால் ஒடித்து விடுவாய். அவளிடம் நீ இன்பத்தை அடைய நாடினால், அவளிடம் குறையுள்ள நிலையிலேயே இன்பத்தை அடைந்து கொள்வாய்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

“பெண், விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டவள். ஒரே நிலையில் உனக்கு நிலையாக இருக்கமாட்டாள். அவளிடம் நீ இன்பத்தை அடைய நாடினால் அவளிடம் குறையுள்ள நிலையிலேயே இன்பத்தை அடைந்து கொள்வாய்! அவளை நீ நேராக்க முயன்றால் ஒடித்து விடுவாய். அவளை ஒடிப்பது என்பது அவளைத் ‘தலாக்’ விடுவதாகும்.” (ஸஹீஹ் முஸ்லிம்)

இலக்கிய நயமான இந்த உதாரணத்தில் பெண்ணின் இயற்கைத் தன்மைகளையும் பண்புகளையும் மிகத் துல்லியமாக நபி அவர்கள் விவரித்துள்ளார்கள். மனைவி என்பவள் கணவர் விரும்புவது போன்று ஒரே நிலையில் சீராக இருக்கமாட்டாள். அவளிடம் சில கோணலான பண்புகளும் இயல்பாகவே அமைந்திருக்கும். இதைக் கணவர் விளங்கிக் கொள்ள வேண்டும். பூரணமானது அல்லது சரியானது என, தாம் நினைக்கும் முறையில் அவளைத் திருத்திவிட முயலக் கூடாது. பெண்மைக்கென்று அமைந்துள்ள இயற்கைப் பண்புகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அவளை, அல்லாஹ் எந்த இயல்புடன் படைத்தானோ அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

மனைவியின் சில குணங்கள் தமக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக, தாம் விரும்புவது போலவே அவளை மாற்றிட நினைப்பது, ‘விலா எலும்புகள் எதுவும் வளைந்திருக்கக் கூடாது அவற்றை நேராக்கியே தீருவேன்’ என்று நினைப்பது போலாகும். அப்படி நினைத்துச் செயல் பட்டால் அது அந்த எலும்புகளை முறித்து விடுவதில்தான் போய் நிற்கும். அதுபோன்றே ஒரு கணவர் தம் மனைவியை தாம் விரும்பியவாறு சீராக்க நினைப்பதும் விவாகரத்தில்தான் கொண்டுபோய் சேர்த்துவிடும்.

நபி அவர்கள் பெண்ணின் மன நிலைiயும் இயற்கைப் பண்புகளையும் ஆழமாக விளங்கி விவரித்திருக்கிறார்கள். இந்த வழிகாட்டுதலை உள்ளத்தில் ஏற்றுள்ள உண்மை முஸ்லிம், தமது மனைவியின் குறைகளை சகித்துக்கொள்வார். அவளது சிணுங்கல்களைப் பொருட்படுத்த மாட்டார். அதன் மூலம் அவரது இல்லறம் சண்டை, சச்சரவு, வாக்குவாதம், கூச்சல் இல்லாத மகிழ்ச்சி, அமைதி, நிம்மதி நிறைந்த இன்பப் பூங்காவாகத் திகழும்.

சற்றுமுன் கூறப்பட்ட நபிமொழியை ஆய்வு செய்பவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள முடியும். அதாவது நபி அவர்கள், ‘பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என நான் உங்களுக்கு உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்று ஆரம்பித்து, பிறகு அவளது இயல்புகளை விவரிக்கிறார்கள். அதன் பின், மீண்டும் தாம் ஆரம்பித்த முந்தைய வார்த்தையைக் கூறியே முடிக்கிறார்கள். ஆகவே, நபி அவர்கள் பெண்ணுக்கு எந்தளவு முக்கியத்துவம் அளித்துள்ளார்கள் அவளது இயல்பைப் பற்றி எந்தளவு ஆழமாக விளங்கி இருக்கிறார்கள் அவள் மீது எந்தளவு இரக்கம் கொண்டுள்ளார்கள் என்பதைக் கவனியுங்கள்! நபி அவர்களின் இந்த மேலான வழிகாட்டுதல்களை எல்லா நிலைகளிலும் முன்மாதியாக அமைத்து செயல்படுவதைத் தவிர ஓர் உண்மை முஸ்லிமுக்கு வேறு ஏதேனும் வழியுண்டோ!

பெண்களுக்கு மிக முக்கியத்துவம் அளித்ததால்தான் தமது இறுதி ஹஜ்ஜின் பேருரையிலும் பெண்களைப்பற்றி நபி அவர்கள் உபதேசிக்க மறந்துவிடவில்லை. முஸ்லிம்களுக்கு எவற்றையெல்லாம் சொல்ல வேண்டுமோ அவை அனைத்தையும் கூறுவதற்கான கடைசி வாய்ப்பாக இறுதி ஹஜ்ஜுப் பேருரையைப் பயன்படுத்தினார்கள். அந்த உரையின் ஆரம்பமே பெண்களைப் பற்றியதாக அமைந்திருப்பது, அதன் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்துகிறது.

நபி அவர்கள் கூறினார்கள்: “அறிந்து கொள்ளுங்கள்! பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என நான் உங்களுக்கு உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்! நிச்சயமாக அவர்கள் உங்களிடத்திலே உதவியாளர்களாகவே இருக்கிறார்கள். அதைத்தவிர வேறெதையும் நீங்கள் உரிமையாக்கிக் கொள்ள முடியாது அவர்கள் பகிரங்கமான மானக்கேடான விஷயங்களில் ஈடுபட்டாலே தவிர! அவ்வாறு அவர்கள் ஈடுபட்டால் படுக்கையிலிருந்து அவர்களை ஒதுக்கி வையுங்கள். அவர்களை காயம் ஏற்படாத வகையில் அடியுங்கள். அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டுவிட்டால் அவர்கள் மீது எந்த மாற்று வழியையும் தேடாதீர்கள். அறிந்து கொள்ளுங்கள்! உங்களுக்கு உங்கள் மனைவியர் மீது சில உரிமைகள் உள்ளன. உங்கள் மனைவியருக்கு உங்கள் மீது சில உரிமைகள் உள்ளன. அவர்கள் மீதான உங்கள் உரிமை என்பது, உங்களுக்கு வெறுப்பானவர் எவரையும் உங்களது விரிப்பை மிதிக்க அனுமதிக்காமல் இருப்பதும், உங்களுக்கு வெறுப்பானவர்களை உங்கள் வீட்டினுள் அனுமதிக்காமல் இருப்பதுமாகும். அறிந்து கொள்ளுங்கள்! உங்கள் மீதான அவர்களுடைய உரிமை என்பது, ஆடையிலும் உணவிலும் நீங்கள் அவர்களுக்கு அழகிய முறையில் நடந்து கொள்வதாகும்.” (ஜாமிவுத் திர்மிதி)

நபியவர்களின் இந்த உபதேசத்தை ஒவ்வொரு உண்மை முஸ்லிமும் நிச்சயமாக செவிமடுப்பார். கணவன், மனைவி இருவரின் உரிமைகள், கடமைகள் குறித்து நபி அவர்கள் எத்துணை நுட்பமாக வழிகாட்டியுள்ளார்கள் என்பதைக் கவனத்தில் கொள்வார். இதில் குறிப்பாக பெண்கள் மீது கருணை, அன்பு காட்டுவது, அவர்களுடன் அழகிய முறையில் நடந்து கொள்வது பற்றி நபி வலியுறுத்தியுள்ளார்கள். ஆகையால், முஸ்லிம்களின் வீடுகளில் பெண்கள் மீது அநீதி இழைக்கப்படுவது அல்லது அவர்களுக்கு இடையூறு செய்யப்படுவதற்கான எவ்வித வாய்ப்பும் அறவே இருக்காது.

பெண்ணைப் பேணுவதைப் பற்றி நபி அவர்கள் கூறிய உபதேசங்கள் ஏராளமானவை. தமது மனைவியிடத்தில் அழகிய முறையில் நடந்து கொள்பவர்தான் இச்சமுதாயத்தின் சிறந்தோர்் ஆக முடியும் என்கிற அளவிற்கு நபி கூறியுள்ளார்கள்.

நபி அவர்கள் கூறினார்கள்: “நம்பிக்கையாளர்களில் நம்பிக்கையில் (ஈமானில்) பரிபூரணமானவர் அவர்களில் மிக அழகிய குணமுடையவரே! உங்களில் சிறந்தோர் உங்கள் மனைவியடத்தில் சிறந்தோரே!”(ஜாமிவுத் திர்மிதி)

இந்த நபிமொழி, நம்பிக்கையாளர் மிக நேர்த்தியான குணத்தைக் கொண்டிருக்க வேண்டும் அந்த குணமில்லாமல் பரிப10ரண நம்பிக்கையை அடைய முடியாது நாம் யாரை நம்மில் சிறந்தவராக கருதுகிறோமோ அவர், தம் மனைவிக்கும் சிறந்தவராக விளங்க வேண்டும் நம்மிடத்தில் சிறந்தவராக இருந்து மனைவியிடத்தில் சிறந்தவராக இல்லையென்றால் உண்மையில் அவர் நம்மில் சிறந்தவரல்லர்’ என்று வலியுறுத்துகிறது.

சில பெண்கள் தங்களுடைய கணவர்களைப்பற்றி முறையிடுவதற்காக நபி அவர்களின் இல்லத்திற்கு வந்தார்கள். அப்போது நபி அவர்கள் ஆண்களின் காதுகளுக்கு எட்டும் விதமாக “முஹம்மதின் குடும்பத்தாரிடம் சில பெண்கள் தங்களது கணவன்மாரைப்பற்றி முறையிட வருகிறார்கள். அந்தக் கணவர்கள் உங்களில் சிறந்தவர்கள் அல்லர்” என்று கூறினார்கள். (ஸுனன்் அபூதாவூத்)

நேரிய மார்க்கமான இஸ்லாம், பெண்ணுக்கு நீதி வழங்குவதிலும் அவளைக் கண்ணியப் படுத்துவதிலும் ஏனைய மார்க்கங்களைப் பார்க்கிலும் மிக உயர்ந்தே நிற்கிறது. அவளைக் கணவன் வெறுத்தாலும் அவளுடன் நல்ல முறையிலேயே நடந்து கொள்ள வேண்டும் என உபதேசிக்கிறது. பெண்கள், தங்களது வரலாற்றில் இஸ்லாமைத் தவிர வேறெங்கும் இந்தக் கண்ணியத்தை அடைந்து கொண்டதே கிடையாது.

மேலும், “அவர்களுடன் (பெண்களுடன்) சிறந்த முறையில் நடந்து கொள்ளுங்கள்! அவர்களை நீங்கள் வெறுத்தபோதிலும் சரியே! ஏனென்றால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை வைத்திருக்கலாம்.” (அன்னிஸா 4:19)

இந்த இறைவசனம் உண்மை முஸ்லிமின் உள்ளுணர்வைத் தொட்டுப் பேசுகிறது. அவரது கோபத்தின் கொதிப்பைத் தணிக்கிறது தம் மனைவி மீதான வெறுப்பின் வேகத்தைக் குறைக்கிறது. ஆகவே, இதன் மூலம் மண வளையம் துண்டிக்கப்படுவதிலிருந்து இஸ்லாம் அதைப் பாதுகாக்கிறது. இங்குமங்கும் அலைபாயும் மடத்தனமான எண்ணங்களாலும், மாறிக் கொண்டே இருக்கும் சுபாவத்தினாலும் தூய்மையானத் திருமண உறவில் பங்கம் ஏற்படுவதை விட்டும் கட்டிக்காக்கிறது. தம் மனைவியின் மீது வெறுப்பு ஏற்பட்டு விட்டதால் அவளை விவாகரத்துச் செய்யப் போவதாக கூறிய மனிதருக்கு உமர் (ரழி) அவர்கள் “உனக்கென்ன கேடு! இல்லறம் அன்பின் மீதுதானே அமைக்கப்படுகிறது. அதில், பராமரிப்பும் புறக்கணிப்பும் எப்படி ஒன்று சேர முடியும்?” என்று அறிவுரை கூறினார்கள்.

இஸ்லாமில் திருமண ஒப்பந்தம் என்பது அற்பமான உணர்வுகளின் வெளிப்பாடோ அல்லது இயற்கை ஆசையைத் தணித்து விட்டுப் போவதற்கான வழியோ அல்ல. மாறாக, இதற்கெல்லாம் மேலாகத் தூய்மையானதும் மிகக் கண்ணியமானதுமாகும். உண்மை முஸ்லிமிடம் மனித நேயமும், அறிவும், நற்குணமும், சகிப்புத் தன்மையும், விசாலமான இதயமும் அமைந்திருக்கும். அந்தப் பண்புகள் தமது மனைவியிடம் காணப்படும் வெறுக்கத்தகுந்த குணங்களைச் சகித்துக் கொள்ளும் பக்குவத்தை அவருக்கு அளிக்கும். உண்மை முஸ்லிம் தமது இறைவனின் கட்டளையைப் பின்பற்றுவார். மனைவியின் மீது வெறுப்புள்ளவராக இருந்தாலும் நல்லுறவையே கடைப்பிடிப்பார். தமது இறைவனின் கூற்றுக்கிணங்க தம்மை அமைத்துக் கொள்வார். ஏனென்றால், மனிதன் சில விஷயங்களை வெறுத்து அதிலிருந்து விலகியிருக்க விரும்புகிறான். ஆனால், உண்மையில் அவை நன்மைகளால் சூழப்பட்டதாகவும், நல்லதை உள்ளடக் கியதாகவும் அமைந்திருக்கும்.

எனவே உண்மை முஸ்லிம், எப்படி நேசிக்க வேண்டும், எப்படி வெறுக்க வேண்டும் என்பதையெல்லாம் அறிந்திருப்பார். நேசிப்பவர் மீது குருட்டுத்தனமான நேசத்தைக் கொண்டிருக்கவும் மாட்டார். அதே சமயம், வெறுப்பவர் மீது கல்நெஞ்சம் கொண்ட, பிடிவாதமான, அடிப்படையற்ற கோபத்தையும் வெளிப்படுத்த மாட்டார். நேசிப்பிலும் வெறுப்பிலும் நீதமான நடுநிலையைக் கொண்டிருப்பார்.

“முஸ்லிமான பெண்ணை அவளது கணவர் எவ்வளவுதான் வெறுத்தாலும் அவளிடம் விரும்பத்தகுந்த பல நற்குணங்கள் இருந்தே தீரும். எனவே, அந்தக் கணவர் தமது மனைவியிடம் தமக்கு திருப்தி அளிக்கும் நற்குணங்கள் இருப்பதை மறந்துவிடக் கூடாது. அவளிடம் உள்ள வெறுக்கத்தக்க குணங்களைச் சுட்டிக் காட்டித் திருத்தவும் தவறக்கூடாது” என மகத்தான இறைத்தூதர் அவர்கள் தெளிவு படுத்தினார்கள்.

நபி அவர்கள் கூறினார்கள்: “எந்த ஒரு முஃமினும் (நம்பிக்கையாளரும்) முஃமினான பெண்ணை வெறுக்க வேண்டாம். அவளிடம் ஒரு குணத்தை அவர் வெறுத்தால் மற்றொரு குணத்தைப் பொருந்திக் கொள்வார்.” (ஸஹீஹ் முஸ்லிம்)

”இறை நம்பிக்கை கொண்ட ஓர் ஆண் இறை நம்பிக்கையுள்ள ஒரு பெண்ணை (முழுமையாக) வெறுத்து
ஒதுக்க வேண்டாம். அவளிடமிருந்து அவர் ஒரு குணத்தைவெறுத்தாலும் மற்றொரு குணத்தைக் கண்டு திருப்தி
கொள்ளட்டும்” என நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலீ) நூல்: முஸ்லிம் 2915

உண்ணும் போதும், உடுத்தும் போதும் மனைவியை விட்டு விடாதீர்கள். மனைவியிடம் வெறுப்பை வீட்டிலே
தவிர வேறெங்கும் வெளிப்படுத்தாதீர்கள்.அறிவிப்பாளர்: முஆவியா (ரலி) நூல்: அஹ்மத் 19160

”அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காகக் கூலி வழங்கப்படுவீர்.
உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் உணவுஉட்பட” என்று அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஃத் பின் அபீவக்காஸ் (ரலி) நூல்: புகாரி 56

ஒரு மனிதர் நபியவர்களிடம் ”மனைவிக்குக் கணவன் செய்ய வேண்டிய கடமைகள் என்ன?” என்று கேட்டார்
அதற்கு நபி அவர்கள்,’நீ உண்ணும் போதுஅவளுக்கு உணவளிப்பதும் நீ அணியும் போது அவளுக்கு
அணிவிப்பதும் இருப்பதும் வீட்டில் (கண்டிக்கும் போது) முகத்தில் அடிக்காதிருப்பதும் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் தவிர மற்ற இடங்களில் வெறுக்காமல் இருப்பதும் ஆகும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: முஆவியா பின் ஹைதர் (ரலி) நூல்கள்: அபூதாவூத் 1830, அஹ்மத் 19162

”இறை நம்பிக்கை கொண்ட வர்களில் முழுமையான நம்பிக்கை கொண்டவர் அவர்களில் நற்குணம்
கொண்டவரே! உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம்நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!”
என்று நபி அவரகள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: திர்மதி 1082

லைலத்துல் கத்ர் நாள் எப்போது?

அல்லாஹ்வின் தூதரே லைலத்துல்கத்ர் இரவை நான் அடைந்துகொண்டால் அதில் நான் என்ன பிரார்த்திப்பது? என்று வினவினேன். அதற்கு நபி அவர்கள் அல்லாஹும்ம இன்னக அஃபுவுன் துஹிப்புல் அஃப்வஃப அஃபுஅன்னீ (பொருள்: இறைவா நீ மன்னிப்பவன் மன்னிப்பையே விரும்புபவன் எனவே என்னுடைய பாவங்களை மன்னித் தருள்வாயாக!) அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூலகள்்: திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா, அஹமத்

லைலத்துல் கத்ர் இரவு கடைசி பத்து நாட்களில் உள்ளது. அது இருபத்தொன்பதாவது இரவிலோ இருபத்தி மூன்றாவது இரவிலோ உள்ளது என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: புகாரி

லைலத்துல் கத்ர் பற்றி எங்களுக்கு அறிவிப்பதற்காக நபி அவர்கள் புறப்பட்டார்கள். அப்போது இரண்டு முஸ்லிம்கள் சச்சரவு செய்து கொண்டிருந்தனர். நபி அவர்கள் லைலத்துல் கத்ரை உங்களுக்கு அறிவிப்பதற்காக நான் புறப்பட்டேன். அப்போது இரண்டு முஸ்லிம்கள் சச்சரவு செய்து கொண்டிருந்தனர். எனவே அது (பற்றிய விளக்கம்) நீக்கப்பட்டு விட்டது. அது உங்களுக்கு நன்மையாக இருக்கலாம்! எனவே அதை இருபத்தொன்பதாம் இரவிலும் இருபத்தேழாம் இரவிலும் இருபத்தைந்தாம் இரவிலும் தேடுங்கள் எனக் கூறினார்கள். அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி)நூல்: புகாரி, முஸ்லிம்

ரமளானின் கடைசிப் பத்து நாட்கள் வந்துவிட்டால் நபி அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக்கொள்வார்கள். இரவை (அல்லாஹ்வைத் தொழுது) உயிர்ப்பிப்பார்கள். அந்நாட்களில் வணக்க வழிபாடுகளில் ஈடுபட தம் குடும்பத்தினரை எழுப்பி விடுவார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்.

”எனக்கு லைலத்துல் கத்ர் இரவு காண்பிக்கப்பட்டது. பின்னர் அது எனக்கு மறக்கடிக்கப்பட்டு விட்டது. எனவே நீங்கள் கடைசி பத்து நாட்களின் ஒற்றைப்படை இரவுகளில் அதை தேடுங்கள்! அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித்(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்

நபி(ஸல்) அவர்கள் லைலத்துல் கத்ர் இரவு பற்றி ஏதேனும் கூறியதை நீங்கள் கேட்டீர்களா? என்று அபூ ஸயீத்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர், ‘ஆம்’ நாங்கள் ரமலானின் நடுப்பத்து நாள்களில் நபி(ஸல்) அவர்களுடன் இஃதிகாஃப் இருந்தோம். இருபதாம் நாள் காலையில் வெளியேறினோம். இருபதாம் நாள் காலையில் நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அவ்வுரையில், ‘எனக்கு லைலத்துல் கத்ர் காட்டப்பட்டது. அதை நான் மறந்து விட்டேன். எனவே, அதைக் கடைசிப் பத்து நாள்களின் ஒற்றை இரவுகளில் தேடுங்கள். அன்று ஈரமான களிமண்ணில் நான் ஸஜ்தாச் செய்வது போல் கனவு கண்டேன். யார் அல்லாஹ்வின் தூதருடன் இஃதிகாஃப் இருந்தாரோ அவர் பள்ளிக்குத் திரும்பட்டும்’ எனக் கூறினார்கள். மக்கள் பள்ளிக்குத் திரும்பினார்கள். அப்போது வானத்தில் சிறு மேகத்தைக்கூட நாங்கள் காணவில்லை. திடீரென மேகம் வந்து மழை பொழிந்தது. தொழுகைக்க இகாமத் சொல்லப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் ஈரமான களிமண்ணில் ஸஜ்தாச் செய்தார்கள். அவர்களின் நெற்றியிலும் மூக்கிலும் களிமண்ணை கண்டேன்’ என்று விடையளித்தார். நூல்: புகாரி

Friday, August 19, 2011

நிச்சயிக்கப்பட்ட மரணம்!

இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு ஆத்மாவுக்கும் மரணம் என்பது சந்தேகத்திற்கு வழியில்லாத உறுதியாக நிகழக் கூடிய ஒன்றாகும். அனைவரும் இதை அறிந்திருந்தும் மனிதர்களில் பெரும்பாலோர் மரணத்தை மறந்தவர்களாக வாழ்கின்றனர். ஒரு முஸ்லிம் மரணத்தை அதிகமாக நினைப்பதும் அதற்காக தம்மை தயார்படுத்திக் கொள்வதும் மிக மிக அவசியமாகும். எனவே ஒரு முஸ்லிம் நிரந்தரமற்ற இவ்வுலகில் தமக்கு மரணம் வருவதற்கு முன்னர் நற்செயல்களை அதிகமதிகம் செய்து நிரந்தர மறுமைக்கு தம்மை சித்தப்படுத்திக் கொள்வது அவசியமாகும்.

ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைப்பவரே! “ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் – இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;

எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்; இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை” (அல் குர்ஆன் 3:185)

“(பூமியில்) உள்ளயாவரும் அழிந்து போகக்கூடியவரே!” (அல் குர்ஆன் 55:26)

நபி (ஸல்) அவர்களைப் பார்த்து அல்லாஹ் கூறும் போது, “நிச்சயமாக நீரும் மரிப்பவர்! நிச்சயமாக அவர்களும் மரிப்பவர்களே!” (அல்குர்ஆன் 39:30)

இவ்வுலகில் ஒருவருக்கொருவர் போட்டிப் போட்டுக்கொண்டு செல்வம் சேர்ப்பதிலும் அதனைக் கொண்டு பெருமிதம் அடைகின்ற நாம் இவ்வுலக வாழ்வு என்பது நிரந்தரமற்ற தற்காலிக வாழ்வு என்பதை ஏனோ மறந்து விடுகிறோம். இவ்வுலகில் எந்த மனிதருக்கும் நிரந்தர வாழ்வு என்பது கிடையாது.

அல்லாஹ் கூறுகிறான்: “(நபியே!) உமக்கு முன்னர் எந்த மனிதனுக்கும் (அவன்) என்றென்னும் இருக்கக்கூடிய நித்திய வாழ்வை நாம் (இங்கு) கொடுக்கவில்லை” (அல் குர்ஆன் 21:34)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘ஐந்து நிலைமைகளட ஏற்படுவதற்கு முன் ஐந்து நிலைமைகளைப் பேணிக்கொள். மரணத்திற்கு முன் வாழ்வையும், நோய்வருமுன் ஆரோக்கியத்தையும், வேலை வருமுன் ஓய்வையும், வயோகிகத்திற்கு முன் வாலிபத்தையும், ஏழ்மைக்கு முன் செல்வ நிலையையும் பேணிக்கொள்’ ஆதாரம் : அஹ்மத்.

மரணம் என்பது ஒருவருக்கு எப்போது வேண்டுமானாலும், எந்த இடத்திலும், எந்த வயதிலும் ஏற்படலாம். எனவே மரணம் வந்துவிட்டால் அதை தடுக்கவோ அல்லது அதை பிற்படுத்தவோ அல்லது அதை விட்டு தப்பிக்கவோ இயலாது. அல்லாஹ் கூறுகிறான்: “ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் (வாழ்வுக்கும், வீழ்வுக்கும்) ஒரு காலக்கெடு உண்டு, அவர்களுடைய கெடு வந்துவிட்டால் அவர்கள் ஒருகணப் பொழுதேனும் பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள்” (அல் குர்ஆன் 7:34)

இறைக் கட்டளைகளைப் பேணி வாழ்ந்து வரும் ஒரு முஃமினுக்கு மரணவேளை வந்துவிட்டால் அவருடைய உயிரை வானவர்கள் கைப்பற்றும் போது நிகழ்கின்ற நிகழ்வை அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்: “நிச்சயமாக எவர்கள்: ‘எங்கள் இறைவன் அல்லாஹ்தான்’ என்று கூறி, (அதன் மீது) உறுதியாக நிலைத்து நின்றார்களோ, நிச்சயமாக அவர்கள்பால் மலக்குகள் வந்து, ‘நீங்கள் பயப்படாதீர்கள்; கவலையும் பட வேண்டாம் – உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவர்க்கத்தைக் கொண்டு மகிழ்ச்சி பெறுங்கள்’ (எனக் கூறியவாறு) இறங்குவார்கள்” (அல் குர்ஆன் 41:30)

ஆனால், “அல்லாஹ்வின் மீது பொய்க் கற்பனை செய்பவன், அல்லது வஹீயின் மூலம் தனக்கு ஒன்றுமே அறிவிக்கப்படாமலிருக்க, ‘எனக்கு வஹீ வந்தது’ என்று கூறுபவன்; அல்லது ‘அல்லாஹ் இறக்கிவைத்த இ(வ்வேதத்)தைப் போல் நானும் இறக்கிவைப்பேன்’ என்று கூறுபவன், ஆகிய இவர்களை விடப் பெரிய அநியாயக்காரன் யார் இருக்க முடியும்? இந்த அநியாயக்காரர்கள் மரண வேதனையில் இருக்கும் போது நீங்கள் அவர்களைப் பார்த்தால், மலக்குகள் தம் கைகளை நீட்டி (இவர்களிடம்) ‘உங்களுடைய உயிர்களை வெளியேற்றுங்கள்; இன்றைய தினம் நீங்கள் இழிவுதரும் வேதனையைக் கூலியாகக் கொடுக்கப்படுவீர்கள். ஏனெனில், நீங்கள் உண்மையல்லாததை அல்லாஹ்வின் மீது கூறிக் கொண்டிருந்தீர்கள்; இன்னும், அவனுடைய வசனங்களை (நம்பாது நிராகரித்துப்) பெருமையடித்துக் கொண்டிருந்தீர்கள்’ (என்று கூறுவதை நீர் காண்பீர்)” (அல் குர்ஆன் 6:93)

எனவே மேற்கண்ட வசனங்களிலிருந்து ஒருவருடைய மரண வேளையில் அவருக்கு உண்மை நிலை வெளிப்பட்டுவிடும் என்பது தெளிவாகிறது. உண்மையை உணர்ந்தபின் தாம் வாழும் போது செய்யாமல் விட்டுவந்த நல்ல காரியங்களைச் செய்வதற்காக அவன் தமக்கு சிறிது அவகாசம் அளிக்குமாறு வேண்டுவான். ஆனால் காலம் கடந்து கைசேதப்பட்டு என்னபயன்? அல்லாஹ் கூறுகிறான்:

‘இன்னும் எவரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுகிறானோ அதற்குப்பின் அவனுக்குப் பாதுகாவலர் எவருமில்லை, அநியாயம் செய்தவர்கள் வேதனையைக் காணும் போது, (இதிலிருந்து) தப்பித்து மீள்வதற்கு ஏதாகிலும் வழியுண்டா?’ என்று கூறும் நிலையை நீர் காண்பீர்” (அல் குர்ஆன் 42:44) “

அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்: ‘என் இறைவனே! என்னைத் திரும்ப (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!’ என்று கூறுவான். ‘நான் விட்டுவந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக’ (என்றும் கூறுவான்). அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையே(யன்றி வேறில்லை) அவர்கள் எழுப்பப்படும் நாள்வரையும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது” (அல் குர்ஆன் 23:99-100)

இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு ஆத்மாவுக்கும் மரணம் என்பது சந்தேகத்திற்கு வழியில்லாத உறுதியாக நிகழக் கூடிய ஒன்றாகும். அனைவரும் இதை அறிந்திருந்தும் மனிதர்களில் பெரும்பாலோர் மரணத்தை மறந்தவர்களாக வாழ்கின்றனர். ஒரு முஸ்லிம் மரணத்தை அதிகமாக நினைப்பதும் அதற்காக தம்மை தயார்படுத்திக் கொள்வதும்மிக மிக அவசியமாகும். எனவே ஒரு முஸ்லிம் நிரந்தரமற்ற இவ்வுலகில் தமக்கு மரணம் வருவதற்கு முன்னர் நற்செயல்களை அதிகமதிகம் செய்து நிரந்தர மறுமைக்கு தம்மை சித்தப்படுத்திக் கொள்வது அவசியமாகும்.

ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைப்பவரே! “ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் – இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்; எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்; இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை” (அல் குர்ஆன் 3:185)

“(பூமியில்) உள்ளயாவரும் அழிந்து போகக்கூடியவரே!” (அல் குர்ஆன் 55:26)

நபி (ஸல்) அவர்களைப் பார்த்து அல்லாஹ் கூறும் போது, “நிச்சயமாக நீரும் மரிப்பவர்! நிச்சயமாக அவர்களும் மரிப்பவர்களே!” (அல்குர்ஆன் 39:30)

இவ்வுலகில் ஒருவருக்கொருவர் போட்டிப் போட்டுக்கொண்டு செல்வம் சேர்ப்பதிலும் அதனைக் கொண்டு பெருமிதம் அடைகின்ற நாம் இவ்வுலக வாழ்வு என்பது நிரந்தரமற்ற தற்காலிக வாழ்வு என்பதை ஏனோ மறந்து விடுகிறோம். இவ்வுலகில் எந்த மனிதருக்கும் நிரந்தர வாழ்வு என்பது கிடையாது.

அல்லாஹ் கூறுகிறான்: “(நபியே!) உமக்கு முன்னர் எந்த மனிதனுக்கும் (அவன்) என்றென்னும் இருக்கக்கூடிய நித்திய வாழ்வை நாம் (இங்கு) கொடுக்கவில்லை” (அல் குர்ஆன் 21:34)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘ஐந்து நிலைமைகளட ஏற்படுவதற்கு முன் ஐந்து நிலைமைகளைப் பேணிக்கொள். மரணத்திற்கு முன் வாழ்வையும், நோய்வருமுன் ஆரோக்கியத்தையும், வேலை வருமுன் ஓய்வையும், வயோகிகத்திற்கு முன் வாலிபத்தையும், ஏழ்மைக்கு முன் செல்வ நிலையையும் பேணிக்கொள்’ ஆதாரம் : அஹ்மத்.
மரணம் என்பது ஒருவருக்கு எப்போது வேண்டுமானாலும், எந்த இடத்திலும், எந்த வயதிலும் ஏற்படலாம். எனவே மரணம் வந்துவிட்டால் அதை தடுக்கவோ அல்லது அதை பிற்படுத்தவோ அல்லது அதை விட்டு தப்பிக்கவோ இயலாது. அல்லாஹ் கூறுகிறான்: “ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் (வாழ்வுக்கும், வீழ்வுக்கும்) ஒரு காலக்கெடு உண்டு, அவர்களுடைய கெடு வந்துவிட்டால் அவர்கள் ஒருகணப் பொழுதேனும் பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள்” (அல் குர்ஆன் 7:34)

இறைக் கட்டளைகளைப் பேணி வாழ்ந்து வரும் ஒரு முஃமினுக்கு மரணவேளை வந்துவிட்டால் அவருடைய உயிரை வானவர்கள் கைப்பற்றும் போது நிகழ்கின்ற நிகழ்வை அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்: “நிச்சயமாக எவர்கள்: ‘எங்கள் இறைவன் அல்லாஹ்தான்’ என்று கூறி, (அதன் மீது) உறுதியாக நிலைத்து நின்றார்களோ, நிச்சயமாக அவர்கள்பால் மலக்குகள் வந்து, ‘நீங்கள் பயப்படாதீர்கள்; கவலையும் பட வேண்டாம் – உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவர்க்கத்தைக் கொண்டு மகிழ்ச்சி பெறுங்கள்’ (எனக் கூறியவாறு) இறங்குவார்கள்” (அல் குர்ஆன் 41:30)

ஆனால், “அல்லாஹ்வின் மீது பொய்க் கற்பனை செய்பவன், அல்லது வஹீயின் மூலம் தனக்கு ஒன்றுமே அறிவிக்கப்படாமலிருக்க, ‘எனக்கு வஹீ வந்தது’ என்று கூறுபவன்; அல்லது ‘அல்லாஹ் இறக்கிவைத்த இ(வ்வேதத்)தைப் போல் நானும் இறக்கிவைப்பேன்’ என்று கூறுபவன், ஆகிய இவர்களை விடப் பெரிய அநியாயக்காரன் யார் இருக்க முடியும்? இந்த அநியாயக்காரர்கள் மரண வேதனையில் இருக்கும் போது நீங்கள் அவர்களைப் பார்த்தால், மலக்குகள் தம் கைகளை நீட்டி (இவர்களிடம்) ‘உங்களுடைய உயிர்களை வெளியேற்றுங்கள்; இன்றைய தினம் நீங்கள் இழிவுதரும் வேதனையைக் கூலியாகக் கொடுக்கப்படுவீர்கள். ஏனெனில், நீங்கள் உண்மையல்லாததை அல்லாஹ்வின் மீது கூறிக் கொண்டிருந்தீர்கள்; இன்னும், அவனுடைய வசனங்களை (நம்பாது நிராகரித்துப்) பெருமையடித்துக் கொண்டிருந்தீர்கள்’ (என்று கூறுவதை நீர் காண்பீர்)” (அல் குர்ஆன் 6:93)

எனவே மேற்கண்ட வசனங்களிலிருந்து ஒருவருடைய மரண வேளையில் அவருக்கு உண்மை நிலை வெளிப்பட்டுவிடும் என்பது தெளிவாகிறது. உண்மையை உணர்ந்தபின் தாம் வாழும் போது செய்யாமல் விட்டுவந்த நல்ல காரியங்களைச் செய்வதற்காக அவன் தமக்கு சிறிது அவகாசம் அளிக்குமாறு வேண்டுவான். ஆனால் காலம் கடந்து கைசேதப்பட்டு என்னபயன்? அல்லாஹ் கூறுகிறான்:

‘இன்னும் எவரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுகிறானோ அதற்குப்பின் அவனுக்குப் பாதுகாவலர் எவருமில்லை, அநியாயம் செய்தவர்கள் வேதனையைக் காணும் போது, (இதிலிருந்து) தப்பித்து மீள்வதற்கு ஏதாகிலும் வழியுண்டா?’ என்று கூறும் நிலையை நீர் காண்பீர்” (அல் குர்ஆன் 42:44)

“அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்: ‘என் இறைவனே! என்னைத் திரும்ப (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!’ என்று கூறுவான். ‘நான் விட்டுவந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக’ (என்றும் கூறுவான்). அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையே(யன்றி வேறில்லை) அவர்கள் எழுப்பப்படும் நாள்வரையும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது” (அல் குர்ஆன் 23:99-100)

எனவே நாம் நிரந்தரமற்ற இவ்வுலக வாழ்க்கை என்பது ஒரு சோதனை என்பதை உணர்ந்து அழியக்கூடிய பொருள்களின் மீது பேராசைக் கொள்வதை விட்டு விட்டு நிரந்தரமான மறுமை வாழ்விற்கு தேவையான நல்லறங்களின் மீது நாட்டம் கொண்டவர்களாக அதிகமதிகம் நற்காரியங்களைச் செய்வோமாக! வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அதற்கு அருள் புரிவானாகவும்.

நோன்பு


அல்லாஹ்வின் மாபெரும் கருணையால் சிறப்புமிக்க ரமளான் மாதத்தை அடைந்து நோன்பு நோற்றிருக்கும் அனைவர் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும், சமாதானமும் என்றும் நிலவட்டுமாக! இந்த ரமளான் மாதம் நம் உள்ளங்களை தூய்மைப் படுத்தக்கூடியதாகவும், சிறு சிறு தவறுகளையும்கூட களைந்து உண்மையான/முழுமையான‌ இஸ்லாமியர்களாக வாழ நம்மை தயார் படுத்தக்கூடியதாகவும் உள்ளது. அது எப்போது..? ரமளானில் நோற்கும் நோன்பின் நோக்கத்தை சரியான முறையில் நாம் நிறைவேற்றும்போது! அப்படியானால் நோன்பின் நோக்கத்தை நாம் எவ்வாறு நிறைவேற்றுவது? முதலில் நோன்பின் நோக்கம் இதுதான் என்று நாம் அறிந்துக் கொண்டால்தான் அதன் நோக்கத்தை நாம் நிறைவேற்ற‌ இயலும்.

நோன்பின் நோக்கம் என்பது ஏழைகளின் பசியை அறிந்துக் கொள்வதற்காக என சிலர் (அறியாமையில்) கூறுவதுபோல் இஸ்லாம் நமக்கு எங்குமே கூறவில்லை. அப்படி கூறியிருந்தால் பசியின் கொடுமையை வாழ்நாளெல்லாம் உணர்ந்த, தினமும் பட்டினியால் வாடும் ஏழைந்த நோன்பை இஸ்லாம் கடமையாக்கி இருக்காது. பசியை உணர்ந்திருக்கும் செல்வந்தர்களாக இருந்தாலும், அத‌ன் கொடுமை அறியாமல் பழகிய வசதி படைத்தவர்க‌ளுக்கு மட்டும் நோன்பு கடமையாக்கப்பட்டிருக்கும். ஆனால் அன்றாடங்காய்ச்சிகளாக இருந்தாலும், அடுத்தவர்களின் கையை எதிர்ப்பார்த்து வாழும் பரம ஏழைகளாகவே இருந்தாலும்கூட ரமளானில் நோன்பு நோற்பதை இஸ்லாம் கடமையாக்கி இருக்கிறது. அது ஏன்? அதுபோல் இஸ்லாமிய நோன்பு முறையினால் உடல் ஆரோக்கியம் பேணப்படும் என மருத்துவ ஆராய்ச்சிகள் கூறினாலும் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு அதுவும் ஒரு காரணம் என இஸ்லாம் குறிப்பிடவில்லை. இப்படியிருக்க ரமளானின் ஒரு மாதகாலம் முழுவ‌தும் ஏழை/ பணக்காரன் பாகுபாடின்றி நோன்பு நோற்கவேண்டும் என்ற இஸ்லாத்தின் கட்டளைக்கு என்னதான் நோக்கமாக இருக்கும்?



“நம்பிக்கைக் கொண்டவர்களே! நீங்கள் இறைவனை அஞ்சி (பயபக்தியுடன்) நடந்துக் கொள்வதற்காக, உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது கடமையாக்கப் பட்டிருந்ததுபோல் உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது”. (அல்குர்ஆன் 2:183) என்று அல்லாஹ்தஆலா கூறுகிறான்.

அதாவது மனிதன் மறுமையின் வெற்றியை அடைய இறையச்சத்துடன் வாழவேண்டும். அந்த இறையச்சத்திற்கான ஒரு ஆன்மீகப் பயிற்சியை நோன்பு நோற்பதின் மூலம் நாம் பெறுகிறோம். உதாரணமாக நாம் ஹலாலான முறையில் உழைத்து, சம்பாதித்த பொருட்களிலிருந்தோ, நமக்கு உரிமையான மற்ற‌ ஹலாலான பொருட்களிலிருந்தோ உண்பது நமக்கு அனுமதியளிக்கப்பட்டதாக இருந்தாலும், அந்த உணவை ரமலானின் பகல் நேரத்தில் உண்ணாமல் தவிர்த்துக் கொள்கிறோம். காரணம் அது அல்லாஹ்வின் கட்டளை! நம்முடைய‌ வீட்டில், சாப்பிட்டால் அது யாருக்கும் தெரியப் போவதில்லை என்ற நிலையில் நம்மைத் தவிர யாருமில்லாமல் நாம் தனித்து இருந்தாலும், அங்கு அறுசுவை உணவுகளும் கண் முன்னால் தயார் செய்து வைக்கப்பட்டு இருந்தாலும், அந்த நேரத்தில் பசியோ, தாகமோ, அவற்றை உண்ணவேண்டும் என்ற ஆவலோ ஏற்பட்டாலும் ‘சாப்பிடக் கூடாது’ என்ற அல்லாஹ்வின் கட்டளையினால் நாம் அவற்றை சாப்பிடுவதில்லை. யாருமே பார்க்காவிட்டாலும் நாம் சாப்பிடுவது ஒரு கவளம் உணவாக‌ இருந்தாலும், ஒரு மிடறு தண்ணீராக இருந்தாலும் அது அல்லாஹ்வுக்கு தெரியும்! அவன் நம்மைப் கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்ற உள்ளச்ச‌ம் நமது உள்ளத்தில் ஆழமாகப் பதிந்திருப்பதாலும், அல்லாஹ்தஆலா இட்ட கட்டளையை மீறினால் மறுமையில் தண்டனைக்குரியவர்களாக ஆகிவிடுவோம் என்ற இறையச்சமும் நம் உணவையே நாம் சாப்பிடுவதை விட்டும் நம்மை தடுக்கிறது.

ஆக நாம் சாப்பிடுவதை யாருமே பார்க்க முடியாத சூழலிலும் இறைவன் பார்க்கிறான் என்ற ஒரே காரணத்திற்காக நமக்குச் சொந்தமான, * ஹலாலான உணவை ரமளானின் பகல் நேரங்களில் ஒதுக்கி வைக்கும் நாம், ரமளான் அல்லாத மாதங்களில் இஸ்லாம் தடுத்துள்ள * ஹராமான தீய‌ காரியங்களில் ஈடுபட வாய்ப்பு கிடைத்தாலும், அல்லாஹ் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற அச்சம் நமக்குள் ஏற்பட்டு அதிலிருந்து விலகி வாழ்கிறோமே, அதுதான் ரமளான் மாதத்தில் நாம் பெற்ற அந்த ஆன்மீகப் பயிற்சி! அதை நம் வாழ்நாள் முழுதும் கடைபிடிக்கும்போது நோன்பின் நோக்கத்தை நாம் நிறைவேற்றியவர்களாக ஆகிவிடுவோம். (இன்ஷா அல்லாஹ்!)

ஆனால் அநேக மக்கள், இஸ்லாம் தடுத்துள்ள‌ தீய காரியங்கள் என்று சொன்னால் இணைவைத்தல், வட்டி, விபச்சாரம், கொலை, கொள்ளை, மது அருந்துதல் போன்ற பெரும் பாவங்கள் மட்டும்தான் என்று சிறிய ஒரு வட்டத்திற்குள் அடக்கி வைத்திருப்பதால், மற்ற தவறுகளை தவறென்று நினைத்து அஞ்சாமல் அலட்சியப் படுத்தப்படுவதால் நோன்பு வைத்தாலும் அதன் பலனை அடைய முடியாத நஷ்டவாளிகளாக ஆகும் நிலையில் மக்கள் உள்ளனர். (அல்லாஹ் காப்பாற்றுவானாக!) இப்படிப்பட்ட‌ நிலையை விட்டும் தவிர்ந்துக் கொண்டவர்களாக நம்முடைய ரமளான் நோன்பை நன்மை தர‌க்கூடியதாக‌ நாம் நிறைவேற்றி வருகிறோமா? அல்லது நோன்பைப் பாழாக்கும் விஷயங்கள் இன்ன இன்னவை என இஸ்லாம் பட்டியலிடுவதை சரியான முறையில் அறிந்து அவற்றைத் தவிர்ந்துக் கொள்ளாமல் வெறும் பட்டினி கிடப்பதைப்போல நன்மையற்ற நோன்பு நோற்கிறோமா? என்பதை நாம் ஒவ்வொருவரும் இந்த ரமளானிலே சுய பரிசோதனை செய்துக் கொள்ளவேண்டும்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“யார் பொய்யான பேச்சுகளையும் பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதிலோ, தாகித்திருப்பதிலோ அல்லாஹ்வுக்கு எந்த தேவையுமில்லை”
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி); நூல்: புகாரி, திர்மிதி, இப்னுமாஜா

மற்ற எத்தனையோ தவறுகள் தடுக்கப்பட்டதாக இருப்பினும் ‘பொய் சொல்வதை’ப் பற்றி இங்கே நபிகள்(ஸல்) அவர்கள் குறிப்பிட்டு சொல்கிறார்கள். அப்படியானால் புறம் பேசுவது, கோள் சொல்வது, இல்லாததை கற்பனையாக‌ இட்டுக் கட்டுவது, வீணான பொழுது போக்குகள், அருவறுக்கத்தக்க ஆபாசமான‌ பேச்சுகள், தீமைகளுக்கு துணை போவது, மோசடி செய்வது, வாக்குறுதி மீறுவது என அத்தனையும் செய்யலாமென்று அர்த்தமாகிவிடாது. ஒரு மனிதனால் தவறென்றே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாமல் சர்வ சாதாரணமாக செய்கின்ற‌, அல்லது தவறென்று தெரிந்தும் அதை அலட்சியப் படுத்தக்கூடியதாக இருக்கக்கூடிய, அடிக்கடி நிகழும் ஒரு தவறுதான் பொய் சொல்வதாகும் என்பதால்தான், தடுக்கப்பட்ட விஷயங்களில் ‘பொய்’யை முக்கியப்படுத்தி நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆக குறிப்பிட்டு சொல்லப்பட்டுள்ள ‘பொய்’ என்ற இந்த ஒன்றைப் போலவே, அலட்சியமாகக் கருதப்படும் மேற்சொன்ன மற்ற அத்தனை தவறுகளும் நாம் நோற்கும் நோன்பினை நன்மை இல்லாமல் பாழாக்கிவிடும் என்பதை நாம் புரிந்துக் கொள்ளவேண்டும். அவ்வளவு ஏன்.. நாம் நோன்பு நோற்றிருக்கும்போது நம்முடன் யாரும் வீண் வம்புக்கு வந்தால் கூட அவர்களுடன் நாமும் பதில் வம்புக்குப் போகக்கூடாது என நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நமக்கு வலியுறுத்தியுள்ளார்கள் என்றால், எந்தளவுக்கு பேணுதலாக நம்முடைய நோன்பின் நன்மையைப் பெறவேண்டியுள்ளது என்பதை நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும்போது யாரேனும் சண்டைக்கு வந்தால், (அல்லது) யாரேனும் திட்டினால் “நான் நோன்பாளி” என்று கூறிவிடுங்கள் என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி); நூல்: புகாரி (1893, 1903)

ஆகவே, நோன்பாளிகளே! அல்லாஹ்வின் அருளால் நமக்குக் கிடைத்திருக்கும் இந்த ரமளான் நோன்பின் முழு பயனையும் அடைய‌ பசித்திருப்பதும், தாகித்திருப்பதும் மட்டும் போதாது. நாம் நோன்பு நோற்பதுடன் அலட்சியமாகக் கருதிக் கொண்டிருக்கும் ஆபத்தான பாவங்களை விட்டு நாம் தவிர்ந்துக் கொள்ளவேண்டும். நோன்பின் மூலம் எடுக்கப்படும் இந்தப் பயிற்சி மற்ற 11 மாதங்களிலும் நம்மிடம் சிறந்தவொரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். நோன்பின் மூலம் நாம் பொய் சொல்வதிலிருந்தும் அதுபோன்ற மற்ற‌ தீய நடவடிக்கையிலிருந்தும் விலகிக் கொள்ளவில்லை என்றால் அது நோன்பே அல்ல, வெறும் பட்டினிதான் என்பதை நினைவில் கொள்வோமாக! அதுபோன்றதொரு நிலையை விட்டும் அல்லாஹ் நம்மைக் காப்பாற்றுவானாக!

ஷிர்க்கின் (இணை வைத்தல்) மூலகாரணம் என்ன?

ஆதம்(அலை) அவர்களிலிருந்து மனிதன் ஓரிறைக் கொள்கையுடையவனாகவே இருந்து வந்தான். அந்தத் தவ்ஹீதைத் பிரச்சாரம் செய்த நல்லடியர்களை அளவுக்கு அதிகமாகக் கண்ணியப்படுத்தி, கடவுள் நிலைக்கு அவர்களை உயர்த்தியதுதான் “ஷிர்க்” (இணை வைத்தால்) தோன்ற மூல காரணமாக இருந்தது. இந்த உண்மையைத் திருக்குர்ஆன் கூறுகின்றது.

“நீங்கள் உங்கள் தெய்வங்களை விட்டு விடாதீர்கள்! மேலும் ‘வத்து’ ‘சுவாவு’ ‘யஹூது’ ‘யவூக்’ ‘நஸ்றா’ ஆகிய தெய்வங்களை நீங்கள் விட்டு விடாதீர்கள்!” என்று அவர்கள் (நூஹ் நபியின் சமூகத்தினர் கூறினார்கள்) (அல்குர்ஆன் 71:23)

இந்தத் திரு வசனத்தில் கூறப்பட்ட ‘வத்து’ ‘சுவாவு’ ‘யஹூது’ ‘யவூக்’ ‘நஸ்றா’ ஆகியோர் ஆரம்ப காலத்தில் வாழ்ந்த நல்லடியார்கள் என்றும், அவர்கள் மரணமடைந்த பின்னர் அவர்களையே மக்கள் கடவுள் நிலைக்கு உயர்த்தி விட்டனர் என்றும், ஆரம்பத்தில் நினைவுச் சின்னம் எழுப்பினர்; பின்னர் அடுத்த தலை முறையினர் அவர்களையே வணங்க முற்பட்டு விட்டனர் என்றும் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் விளக்கம் தந்தனர். (நூல்: புகாரி- தப்ஸீர் பகுதி)

அன்று நூஹ் (அலை) அவர்களின் காலத்தில் வாழ்ந்த மக்கள் இணைவைக்க முற்பட்டதற்குக் காரணம் எதுவோ, அதே காரனத்தினால் தான் இன்றும் பெரும் பகுதியினர் ஷிர்க்கில் வீழ்ந்து கிடக்கின்றனர். நபி(ஸல்) தம் உம்மத்தினர் ஷிர்க்கில் விழக்கூடாது என்றூ எவ்வளவோ தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். அத்தனையையும் மீறி நல்லடியார்கள் மரணித்த பின் அவர்களின் அடக்கஸ்தலத்தில் பல தகாத செயல்களை செய்யத் துவங்கிவிட்டனர்.

எத்தனையோ பள்ளிவாசல்கள் நிர்வாகம் நடத்த போதிய பொருளாதாரம் இன்றி திணறிக் கொண்டிருக்க, கப்ருகளை நிர்வாகம் செய்யப் பொருளாதாரம் குவிந்து கொண்டிருக்கிறது. அல்லாஹ்வை வணங்க நூறு பேர் வருகின்றனர் என்றால் அவனது அடிமைகளை வணங்க ஆயிரக் கணக்கானோர் குவிந்த வண்ணமாக உள்ளனர்.

இறைவா! “என்னுடைய கப்ரை வணக்கஸ்தலமாக ஆக்கி விடாதே” என்று நபி (ஸல்) அவர்கள் துஆச் செய்துள்ளார்கள் என்றால் அது நமக்கு உணர்த்தும் பாடம் என்ன என்பதைப் எண்ணிப் பாருங்கள்! அல்லாஹ் அவர்களின் துஆவை ஏற்று அவர்களின் அடக்கஸ்தலத்தை வணங்குமிடமாக ஆக்காமல் பாதுகாத்துக் கொண்டான். ஆனால் மற்ற கப்ருகள் அந்த நிலைக்கு மாறி விட்டன!

“நாங்கள் கப்ரை வணங்கவா செய்கிறோம்?” என்று நம்மில் சிலர் கேட்கின்றனர். வணங்குவது என்றால் தொழுவது மட்டும் தான் என்று இவர்கள் எண்ணியுள்ளனர். தங்களின் தேவைகளை நிறை வேற்றும்படி பிரார்த்தனை செய்வதும் வணக்கம் என்பதை என்றுதான் உணவார்களோ? சிலைகளுக்குச் செய்யப்படுவது போல் அலங்காரங்களூம் அபிஷேகங்களும், வேறு பெயர்களில் இங்கேயும் நடக்கத்தான் செய்கின்றன. சிலைகள் முன்னே சிலர் பக்தி சிரத்தையோடு நிற்பது போலவே கப்ருகளின் முன்னிலையிலும் இவர்கள் நிற்கின்றனர். இந்நிலை உணர்ந்து தவ்ஹீத் அடிப்படையில் மக்கள் வாழ அல்லாஹ் அருள் புரிவானாக. ஆமீன்.

ஷிர்க்கின் தோற்றம்

மனிதனின் வாழ்க்கை இவ்வுலகில் தவ்ஹீதை அடிப்படையாகக் கொண்டு துவங்கியதா? அல்லது ஷிர்க்கை அடிப்படையாகக் கொண்டு துவங்கியதா? மனிதன் முதலில் ஓரிறைக் கொள்கையாளனாக இருந்து பின்னர் பல தெய்வ வழிபடு செய்பவனாக மாறினானா? அல்லது பல தெய்வ வழிபாட்டிலிருந்து ஓரிறைக் கொள்கைக்கு மாறினானா என்பதை நாம் முதலில் அறிய வேண்டும். இதற்குத் தெளிவான விளக்கத்தைத் திருகுர்ஆன் கூறுவதைப் பார்ப்போம். “மனிதர்கள் ஒரே சமுதாயமாகவே இருந்தனர்” (அல்குர்ஆன்2:213)

இந்த திருவசனத்தின்படி மனிதன் முதலில் தவ்ஹீது (ஏகத்துவம்) வாதியாகவே இருந்திருக்கிறான் என்பது தெளிவகின்றது. இதே கருத்தைத் தான் ஹதீஸும் வலியுறுத்துகிறது.”நான் அடியார்களைத் தூயவர்களாகவே படைத்தேன் ஆனால் ஷைத்தான் தவ்ஹீதை விட்டும் அவர்களைத் திசைதிருப்பி விட்டான். அவர்களுக்கு (என்னால்) அனுமதிக்கப் பட்டிருந்தவைகளை ஷைத்தான் ஹராமானது என்று காட்டிவிட்டான்” என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இயாழ் இப்னு அஹ்மது, நூல்: அஹ்மது

ஆரம்பத்தில் மனிதன் ஓரிறைக் கொள்கைவாதியாகவே இருந்தான். பின்னர்தான் பல தெய்வ வணக்க வழிபாடுகளில் மூழ்கிவிட்டான் என்பதை மேற்கூறிய இறை வசனமும் நபி மொழியும் தெளிவு படுத்துகின்றன.


Friday, August 12, 2011

தொழாதவன் முஸ்லிம் அல்ல

தொழுகையை வேண்டுமென்றே யாராவது புறக்கணித்தால் அவன் இஸ்லாமிய மார்க்கத்தை விட்டும் வெளியேறியவனாகக் கருதப்படுவான்.

ஓர் அடியானுக்கும் நிராகரிப்பிற்கும் இடையில் பிரித்துக் காட்டுவது தொழுகையை விடுவதாகும் என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்:முஸ்லிம்

நமக்கும் நிராகரிப்பாளர்களுக்கும் இடையில் பிரித்து காட்டுவது தொழுகைதான். எனவே எவன் தொழுகையை விட்டு விடுகிறானோ, அவன் காபிராகி விட்டான் என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: புரைதா (ரலி) நூல்:திர்மிதீ, நஸயீ

தொழுகையைத் தவிர வேறு எந்த செயலையும் விடுவது இறை நிராகரிப்பாகும் என நபித்தோழர்களில் யாரும் கருதவில்லை என அப்துல்லாஹ் பின் ஷகீக் அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்: திர்மிதீ

தொழுகையை விடுவது நரகம் செல்வதற்கு முக்கிய காரணமாகும்.
சுவனவாசிகள் குற்றவாளிகளிடம் கேட்பார்கள் உங்களை ஸகர் என்ற நரகத்தில் நுழையவைத்தது எது? (என்று) அதற்கவர்கள், தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை என்று கூறுவார்கள். (அல்குர்ஆன் 74:40-43)

இவர்களுக்குப் பின்னர் (வழிகெட்ட) தீய பின் தோன்றல்கள் இவர்களுடைய இடத்தை அடைந்தார்கள், தொழுகையை(த் தொழாது) வீணாக்கினார்கள், மனோ இச்சைகளையும் பின்பற்றினார்கள், ஆகவே அவர்கள் (மறுமையில்) பெரும் தீமையைச் சந்திப்பார்கள். (அல்குர்ஆன் 19:59)

தொழுகையைப் பேணுபவர்கள் மட்டுமே சுவர்க்கம் செல்லமுடியும்.
இன்னும் அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள் தொழுகைகளைப் பேணுவார்கள். இத்தகையோர்தாம் (சுவர்க்கத்தை) அனந்தரம் கொள்பவர்கள், இவர்கள் எத்தகையோரென்றால் ஃபிர்தௌஸ் (என்னும் சுவனபதியை) அனந்தரமாக கொள்வார்கள், அவர்கள் அதில் நிரந்தரமாக(த்தங்கி) இருப்பார்கள். (அல்குர்ஆன் 23:9-11)

தொழுகையை வேண்டுமென்றே விடக்கூடியவன், தொழுவதற்குறிய உடல் ஆரோக்கியம் இருந்தும் தொழாமலிருந்தவன், தொழுகையை தொழுகையாளியை ஏளனமாக கருதியவன், தொழுகையாளியை கிண்டலும் கேலியும் செய்பவன் முஸ்லிம்களின் சகோதரன் அல்ல. இது போன்ற மனிதர்களுடன் குடியிருக்க நேரிட்டால் அவர்களுக்கு தொழுகையை விடுவதினால் ஏற்படும் விளைவுகளை இறை வசனங்களையும் நபிமொழிகளையும் எடுத்துக்கூறி தொடர்ந்து அவர்களுக்கு உபதேசித்து கொண்டே இருக்க வேண்டும்.

அவர்கள் தவ்பா செய்து (மனந்திருந்தி தம் தவறுகளிலிருந்து விலகி) தொழுகையைக் கடைப்படித்து, ஜகாத்தையும் (முறையாக) கொடுத்து வருவார்களானால், அவர்கள் உங்களுக்கு மார்க்கச் சகோதரர்களே; நாம் அறிவுள்ள சமூகத்தினருக்கு (நம்) வசனங்களை விளக்குகிறோம். (அல்குர்ஆன் 9:11)

தொழுகையில் மார்க்க ரீதியாக வெறுக்கப்பட்டவை

1. தொழும் போது தலையைத் திருப்பிக் கொண்டு பார்ப்பது:
நான் நபி(ஸல்) அவர்களிடம் தொழும்போது தலையைத் திருப்பிக் கொண்டு பார்ப்பது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் இது ஷைத்தான் மனிதனிடமிருந்து (அவனது கவனத்தை) அபகரிக்கும்படியானதோர் அபகரிப்பாகும் என்றார்கள். (ஆயிஷா(ரழி), புகாரீ,அபூதாவூத், நஸயீ, அஹ்மத்)

தலையைத் திருப்பிக் கொண்டு பார்ப்பதானது, முறையாக இறை உணர்வோடு தொழும் ஒருவரின் கவனத்தைத் திசைத் திருப்புவதற்காக ஷைத்தான் செய்யும் சூழ்ச்சியாகும். தொழுவோர் இதுவரையில் மிக எச்சரிக்கையோடு நடந்து கொள்வார்களாக!

2. தொழும்போது கைகளை இடுப்பில் வைத்துக் கொண்டு நிற்பது: நபி(ஸல்) அவர்கள், தொழும்போது இடுப்பில் கைவைத்துக் கொண்டிருப்பதைத் தடை செய்துள்ளார்கள். (அபூஹுரைரா(ரழி) புகாரீ, முஸ்லிம், திர்மிதீ,அபூதாவூத்)

3. தொழுகையின் போது வானத்தை நோக்கி முகத்தை உயர்த்துதல் தொழும்போது வானத்தின்பால் உயர்த்துவோர், அதிலிருந்து தம்மைத் தடுததுக் கொள்வார்களாக! இன்றேல் அவர்களின் பார்வைகள் பறிக்கப்பட்டுப் போய்விடும்” என்று நபி(ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
(அபூஹுரைரா(ரழி), முஸ்லிம், நஸயீ, அஹ்மத்)

4. ஸுஜூது செய்யும்போது முழங்கையைத் தரையில் படுக்க வைத்துக் கொள்வது: ”ஸுஜூதை முறையாகச் செய்யுங்கள்! உங்கள் முழங்கைகளை நாய் விரிப்பது போல் தரையில் விரித்துக் கொள்ள வேண்டாம்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அனஸ்(ரழி),அபூதாவூத்)

3. தொழும்போது கொட்டாவி விடுவது:
”உங்களில் ஒருவருக்குத் தொழுகையில் கொட்டாவிவிட நேர்ந்தால் தம்மால் இயன்றளவு (அதை) அடக்கிக் கொள்வாராக!” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (இப்னு ஸஃது(ரழி),அபூதாவூத்)

6. தூக்கம் மிகைத்த நிலையில் தொழுவது:
”உங்களில் ஒருவருக்குத் தூக்கம் (கடுமையாக) வருமாயின் அவர் தூக்கம் போகும் வரைத் தூங்கிக்கொள்வாராக! (ஏனெனில்) அவர் தாம் தூங்கும் நிலையில் தொழ முற்பட்டால் அவர் (தொழும்போது) பாவ மன்னிப்புத் தேட வேண்டிய கட்டத்தில் (ஒன்றிருக்க ஒன்றை ஓதி) தம்மைத் தாமே ஏசிக்கொள்ள நேரிடலாம்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆயிஷா(ரழி), புகாரீ, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா)

”உங்களில் ஒருவர் இரவில் விழித்துத் தொழும்போது, (தூக்கத்தின் மேலீட்டால்) குர்ஆன் ஒதுவதற்கு நாவு தடுமாறி, தாம் ஓதுவது தமக்குப் புரியாத நிலை ஏற்பட்டு விடுமாயின், உடனே அவர் படுத்துக் கொள்வாராக!” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூஹுரைரா(ரழி), முஸ்லிம், அஹ்மத்)

தொழுகை என்பது சுய உணர்வோடு நிறைவேற்றப்பட வேண்டிய ஒரு அமலாக இருப்பதால், தூக்கம் மிகைத்த நிலையும் சுய உணர்வை அகற்றி விடுகிறது. இந்த நிலையில் தொழுகையில் ஓத வேண்டியவைகளை முறையாக ஓதித் தொழ இயலாது. தூங்கி விழித்த பிறகு தொழ வேண்டியவற்றைத் தொழுது கொள்ள வேண்டும்.

பர்ளான தொழுகையைத் குறித்த நேரத்தில் தொழ வேண்டும் என்பதற்காக நபி(ஸல்) அவர்கள் எடுத்துக் கொண்ட கடும் முயற்சி!
நபி(ஸல்) அவர்கள் இரவு நேரத்தில் பிரயாணத்திலிருந்து ஓய்வு பெறுவதற்காக ஓர் இடத்தில் இறங்கினால், தமது வலப்புறமாகப் படுத்திருப்பார்கள். ஆனால் சுப்ஹுத் தொழுகைக்கு சற்று முன்னர் இறங்கினால் தமது தலைக்குக் கையை முட்டுக் கொடுத்தவர்களாக, முழங்கையை நட்டி வைத்து (உஷார் நிலையில்) படுத்திருப்பார்கள். (கதாதா(ரழி), முஸ்லிம்)

நபி(ஸல்) அவர்கள் கைபர் யுத்தத்திலிருந்து திரும்பும் போது, இரவுப் பிரயாணம் செய்து வந்து கொண்டிருக்கையில் அவர்களுக்கு இலேசாகத் தூக்கம் வந்தது. அப்போது பிலால்(ரழி) அவர்களிடத்தில் இன்றிரவு நீர் விழித்திருந்து, சுப்ஹுத் தொழுகைக்காக எங்களுக்கு பாதுகாப்புப் பணி செய்வீராக! என்றார்கள்.

அப்போது பிலால்(ரழி) அவர்கள் (அதை ஏற்று சுப்ஹு வரையுள்ள இடை நேரத்தில் அல்லாஹ்வால் விதிக்கப்பட்டுள்ள ஓரளவு நேரம் வரை (நபிலான தொழுகை) தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களும், சஹாபாக்களும் (அயர்ந்து) தூங்கிக் கொண்டிருந்தார்கள். சுப்ஹு நேரம் நெருங்கியபோது பிலால்(ரழி) அவர்கள் சுப்ஹு நேரத்தை எதிர்பார்த்தவர்களாக, ஒட்டகத் தொட்டிலில் சாய்ந்து கொண்டிருந்தார்கள். தொட்டிலில் சாய்ந்து கொண்டிருந்த பிலால்(ரழி) அவர்களை அவர்களின் கண்கள் மிகைத்துவிட்டன. (அதனால் அவர்களும் அயர்ந்து விட்டார்கள்) நபி(ஸல்) அவர்களும், பிலால்(ரழி) அவர்களும், மற்றும் சஹாபாக்களில் எவரும் தங்கள் மீது வெயில் அடிக்கும் வரை விழிக்கவில்லை. அவர்களில் முதன்மையாக விழித்தவர்கள் நபி(ஸல்) அவர்களேயாவார்கள்.

நபி(ஸல்) அவர்கள் திடுக்கிட்டெழுந்து ”பிலாலே!” என்றார்கள். உடனே பிலால்(ரழி) அவர்கள் (நபி அவர்களே!) ”உங்களை எது அயர்த்தியதோ அதுவே என்னையும் அயர்த்திவிட்டது” என்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் அனைவரையும் நோக்கி (இவ்விடத்தை விட்டு) அகன்று விடுங்கள்! என்றார்கள். அனைவரும் தமது பயணச் சாமான்களோடு அதைவிட்டு அகன்றுவிட்டனர். பிறகு நபி(ஸல்) அவர்கள் ஒளு செய்துவிட்டு, பிலால் அவர்களிடம் ”இகாமத்” சொல்லும் படி கூறிவிட்டு, அவர்களுக்கு சுப்ஹைத் தொழ வைத்தார்கள். தொழுகையை முடித்தவுடன் ”ஒருவர் தொழுகையை மறந்துவிட்டால் அவர் அதை நினைத்தவுடன் தொழுது கொள்வாராக!” என்று கூறினார்கள். ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ்

கூறியுள்ளான்! என்னை நினைப்பதற்காகத் தொழுவீராக! (20:14)

(அபூகதாதா(ரழி) அவர்கள் மூலம் நஸயீயில் இடம் பெற்றுள்ள மற்றொரு அறிவிப்பில் ”ஒருவர் தொழுகையை விட்டுத் தூங்கிவிட்டால் அவர் விழித்தவுடன் அதைத் தொழுது கொள்வாராக!” என்று உள்ளது. (அபூஹுரைரா(ரழி), முஸ்லிம்)

7. சித்திரங்களையும், சிந்தனையை ஈர்ப்பவை அனைத்தையும் நோக்கித் தொழுவது: ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் சித்திர வேலைப்பாட்டையுடைய ஆடை ஒன்றை அணிந்து தொழுதார்கள். அப்போது அவர்கள் அதன் சித்திர வேலைப்பாட்டை ஒருமுறை பார்த்து விட்டார்கள். தாம் தொழுது முடித்தவுடன் இந்த ஆடையை அப+ஜஹ்மு என்பவரிடம் கொண்டு போய் கொடுத்து விட்டு அவரிடம் சித்திர வேலைப்பாடில்லாத ஆடை ஒன்றை எனக்கு வாங்கி வாருங்கள். ஏனெனில் இது என்னை எனது தொழுகையை விட்டு சற்று கவனத்தைத் திருப்பிவிட்டது என்றார்கள். (ஆயிஷா(ரழி), புகாரீ)

மேற்காணும் ஹதீஸின் அடிப்படையில் தொழுபவரின் கவனத்தை அல்லாஹ்வின் சிந்தனையை விட்டுத் திருப்பக் கூடியவையான எந்தப் பொருளுக்கும் எதிரில் நின்று தொழுவது முறையல்ல. அவை தாம் அணிந்திருக்கும் ஆடையாயிருந்தாலும் சரி, அல்லது தாம் விரித்துத் தொழும் முஸல்லா-தொழுகை விரிப்பாயிருந்தாலும் சரி. இதே அடிப்படையில் தான் பள்ளிவாசலின் சுவர்களில் குர்ஆனின் வசனங்களை எழுதுவதும் தவறாகும்.

8. கண்ணை மூடிக்கொண்டு தொழுவதன் நிலை:
”உங்களில் ஒருவர் தொழுகையிலிருக்கும் போது, தமது கண்களை மூடிக்கொள்ள வேண்டாம்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (இப்னு அப்பாஸ்(ரழி), தப்ரானீ)

இவ்வறிவிப்பு முறையானதல்ல. ஏனெனில் இதில் பல கோளாறுகள் காணப்படுகின்றன. அதனால் ஹதீஸ் கலாவல்லுனர்கள் இதை ”முன்கர்” நிராகரிக்கப்பட்டவையோடு சேர்த்துள்ளார்கள். பொதுவாக கண்கள் திறந்த நிலையில் தொழுவதே முறையாகும். காரணம் நபி(ஸல்) அவர்கள் கண்ணை மூடிக் கொண்டு தொழுதார்கள் என்பதற்கான ஒரு ஹதீஸும் இல்லை.

9. தொழும்போது கைவிரல்களை ஒன்றோடொன்று கோர்த்துக் கொள்வது: ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் ஒருவர் தொழும்போது தமது கைவிரல்களைக் கோர்த்து வைத்திருப்பதைப் பார்த்து, உடனே அவர் விரல்களை அதிலிருந்து பிரித்து விட்டார்கள். (கஃபுபின் உஜ்ரா(ரழி), திர்மிதீ, இப்னுமாஜா)

உங்களில் ஒருவர் தாம் பள்ளியில் இருக்கும்போது, தமது விரல்களைக் கோர்த்து வைத்துக் கொள்ள வேண்டாம். ஏனெனில் இவ்வாறு செய்து கொள்வது ஷைத்தானின் செயலில் உள்ளதாகும். (அபூஸயீதில் குத்ரீ(ரழி), அஹ்மத்)

சாப்பிட அவசியமான நிலையிலும், மலஜலத்திற்கு அவசியம் செல்ல வேண்டிய கட்டத்திலும் தொழுவது.
”உணவு தயாராக இருக்கும்போது தொழுகை இல்லை. இவ்வாறே மலஜலத்திற்குச் செல்ல அவசியமான நேரத்திலும் தொழுகை இல்லை” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆயிஷா(ரழி), முஸ்லிம்) இப்னு உமர்(ரழி) அவர்களுக்குச் சாப்பாடு வைக்கப்பட்டு விடும், (அதே நேரத்தில்) தொழுகைக்கு இகாமத்தும் சொல்லப்பட்டு விடும். (இந்நிலையில்) அவர்கள் இமாமுடைய கிராஅத்து ஓதலைக் கேட்டுக் கொண்டிமிருப்பார்கள். ஆனால் அவர்கள் சாப்பிட்டு முடிக்காமல் தொழுகைக்கு வரமாட்டார்கள். (நாஃபிஉ(ரழி), புகாரீ)

10. பள்ளியில் தொழும்போது குறிப்பிட்டதோர் இடத்தில் தொழுவதையே பழக்கமாக்கிக் கொள்வது:
ஒருவர் தொழுகையில் (ஸ{ஜூது செய்கையில்) காக்கை கொத்துவது போல் கொத்துவதையும், ஜவாய் மிருகங்கள் விரிப்பதுபோல் கையைத் தரையில் படுக்க வைத்துக் கொள்வதையும், ஒட்டகம் வழக்கப்படுத்திக் கொள்வது போல் பள்ளியில் (தொழுவதற்கென்று) ஓர் இடத்தைக் குறிப்பாக்கிக் கொள்வதையும் நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள். (அப்துர் ரஹ்மான்பின் »ப்லு(ரழி), அஹ்மத்) (வழக்கமாக குறிப்பிட்டதோர் இடத்தில் இமாம் தொழுவதை இவ்வறிவிப்பு கட்டுப்படுத்தாது ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் தொழ வைக்கும்போது குறிப்பிட்டதோர் இடத்தில் நின்றே தொழ வைத்துள்ளார்கள்.)

11. தொழும்போது எதிரில் எச்சில் துப்புவது:
உங்களில் ஒருவர் தாம் தொழுகையில் இருக்கும்போது, தமதுகிப்லாவின் பக்கம்-எதிரில் எச்சில் துப்ப வேண்டாம். எனினும் அவர் தமது இடப்பக்கமோ அல்லது தமது காலடியிலோ (துப்பிக் கொள்வாராக) என்று நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டு, அவர்கள் தமது உடலில் போட்டிருக்கும் ஆடையின் ஒரு ஓரத்தை எடுத்து அதில் உமிழ்ந்து அதன் ஒரு மறுபகுதியை மறு பகுதியில் வைத்து மடித்துவிட்டு அல்லது அவர் இவ்வாறு செய்து கொள்வாராக! என்று கூறினார்கள். (அனஸ்(ரழி), புகாரீ, முஸ்லிம்)

ஒருவர் தாம் தொழும்போது தமது இறைவனிடம் உரையாடிக் கொண்டிருக்கிறார். ஆகையால் அவர் தமக்கு எதிரிலோ அல்லது தமது வலப்புறத்திலோ எச்சில் துப்பவேண்டாம். எனினும் அவர் தமது இடப்புறத்தில் தமது காலடியில் துப்பிக்கொள்வராக! என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அனஸ்(ரழி), முஸ்லிம்)

ஆகவே தொழும்போது எச்சில் துப்ப வேண்டிய நிர்ப்பந்த நிலை ஏற்பட்டால் எக்காரணத்தை முன்னிட்டும் தமக்கு எதிரில்கிப்லாவின் பக்கம் துப்பிவிடாது. தமது இடப்பக்கம் தமது காலடியில் துப்பிவிட்டு, அதன்மேல் மண்ணைத் தள்ளி மறைத்துவிட வேண்டும். இவை அனைத்தும் மண் தரையிலான பள்ளிகளுக்கே பொருந்தும், ஆனால் தளம் போடப்பட்டும், விரிப்புகள் விரிக்கப்பட்டு இருப்பின் மேற்காணும் ஹதீஸின் இறுதியில் காணப்படுவது போல் தமது ஆடையில் ஒரு ஓரத்திலோ அல்லது கைக்குட்டை போன்றவற்றிலோ உமிழ்ந்து மடித்து வைத்துக்கொள்வதே உசிதமாகும்.

12. வெங்காயம், பூண்டு முதலிய தூவாடைப் பொருள்களைச் சாப்பிட்டுவிட்டு அதன் துர்வாடை தம்மில் இருக்கும்போது பள்ளியில் பிரவேசிப்பது:
”இத்தாவரப் பொருட்களான வெங்காயம், பூண்டு ஆகிய துர்வாடையுடையவற்றைச் சாப்பிட்டவர் நமது பள்ளிவாசலின் பக்கம் நெருங்கக் கூடாது. ஏனெனில் நிச்சயமாக எவற்றால் மக்கள் இம்சை அடைகிறார்களோ, அவற்றால் மலக்குகளும் இம்சை அடைகின்றனர்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஜாபிர்(ரழி), முஸ்லிம்)

தமது தோள்-புஜத்தின் மீது ஆடை ஏதுமின்றி ஓர் ஆடை மட்டும் அணிந்து கொண்டு தொழுவதன் நிலை:
”உங்களில் எவரும் தமது தோள்-புஜத்தின் மீது ஆடையில்லாது ஓர் ஆடை மட்டும் அணிந்த நிலையில் தொழ வேண்டாம்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூஹுரைரா(ரழி),அபூதாவூத், நஸயீ, தாரமீ)

”ஓர் ஆடையில் (மட்டும்) தொழுபவர் அந்த ஆடையின் (மேல்) இரு ஓரங்களையும் மாற்றி (பிடறியில் கட்டி)க் கொள்வாராக?” என்று நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன். (அபூஹுரைரா(ரழி), புகாரீ)

”உங்களில் ஓர் ஆடை மட்டும் அணிந்து தொழும் எவரும் அந்த ஆடையில் சிறிது பாகமேனும் (தமது) பிடறியில் இல்லாத நிலையில் (அந்த ஆடையின் மேல் இரு ஓரங்களையும் மாற்றி பிடறியில் முடிச்சுப் போட்டுக் கொள்ளாத நிலையில்) தொழ வேண்டாம்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூஹுரைரா(ரழி), புகாரீ)

நான் ஜாபிருபின் அப்தில்லாஹ்(ரழி) அவர்கள் ஒரே ஆடையாக தம்மைப் போர்த்திக் கொண்டு தொழுது கொண்டிருக்கும்போது அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்களின் மேலதிகமான ஆடைகள் (ஒருபுறம்) வைக்கப்பட்டிருந்தன. அவர்கள் தொழுது திரும்பியபோது அவர்களை நோக்கி அபூ அப்தில்லாஹ் அவர்களே! உங்கள் மேலதிகமான ஆடைகள் (இதோ) வைக்கப்பட்டிருக்கும்போது, நீங்கள் (இந்த நிலையில் ஒரே ஆடையில்) தொழுகிறீர்களே! என்று கேட்டேன், அதற்கு அவர்கள் உம்மைப் போன்ற விவேகமற்றவர்கள் என்னைப் பார்க்கவேண்டும் என்று விரும்பினேன் (அதனால் இவ்வாறு செய்தேன்) என்று கூறிவிட்டு நபி(ஸல்) அவர்களை இவ்வாறு தொழ நான் பார்த்துள்ளேன் என்றார்கள். (முஹம்மதுபின் முன்கதிர்(ரஹ்), புகாரீ)

மேற்காணும் ஹதீஸ்களில் ஓர் ஆடையைக் கொண்டு மட்டும் தொழுபவர் அந்த ஆடை விசாலமாயிருந்தால் அந்த ஆடையின்மேல் இரு ஓரங்களையும் மாற்றி பிடறியில் முடிச்சுப் போட்டுக் கொண்டு தொழ வேண்டும. ஆடை போதிய அளவில்லாது சிறியதாகயிருந்தால், (ஆடை சிறியதாயிருந்தால் அதை உமது இடுப்பில் (மட்டும்) கட்டிக் கொள்வீராக! என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஜாபிர்(ரழி), புகாரீ, அபூதாவூத் என்ற அறிவிப்பின்படி) அதை இடுப்பில் (மட்டும்) அணிந்து கொள்ள வேண்டும்.

மேல் அதிகமாக துண்டு போன்றவையிருந்தால் (உங்களில் எவரும் ”தமது தோள்-புஜத்தின்மீது ஆடையில்லாது ஓர் ஆடை மட்டும் அணிந்த நிலையில் தொழ வேண்டாம்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அபூஹுரைரா(ரழி),அபூதாவூத், நஸயீ, தாரமீ என்ற அறிவிப்பின்படி) அவற்றால் புஜத்தை மறைத்துக்கொண்டு தொழ வேண்டும்.

இவ்வாறு இடுப்பில் ஓர் ஆடை மட்டும் அணிந்து தொழும் ஒருவருக்கு தோள்-புஜங்கள் அவசியம் மறைக்க வேண்டிய பகுதியாக இல்லாமலிருந்தும் கூட அப்பாகத்தை மறைத்துத் தொழுவது நல்லது – சிறப்பு என்று வலியுறுத்திக் கூறிய நபி(ஸல்) அவர்கள், ”தொழுபவர் தமது தோள் – புஜங்களை மறைப்பது போன்று அவரது தலையையும் மறைத்துத் தொழுவது நல்லது” என்ற வகையில் ஒரு வார்த்தையேனும் கூறியிருக்கலாமல்லவா? இவ்வாறு அதுபற்றி கூறாமலிருப்பது ஒன்றே ஆண்கள் தலை திறந்த நிலையில் தொழுவது தாராளமாக ஆகும், அதில் எவ்வித குறைபாடுமில்லை என்பதை எடுத்துக் காட்டுகிறது.

திருமணம்

முன்பே மணமுடிக்கப்பட்டு கணவனை இழந்துவிட்ட விதவையும், அல்லது முந்திய கணவனால் விவாக முறிவு (தலாக்) கொடுக்கப்பட்ட பெண்ணும் தனக்காக இத்தா காலம் முடிந்ததும் மறுமணம் முடிக்க விரும்பினால் அப்பெண்ணின் முழு சம்மதத்தையும் பெற்றே மண முடித்து வைக்கவேண்டும். இப்பெண்களை அயிம்மா என்றோ தய்யிபா என்றோ அழைப்பர்.
இஸ்லாமிய மார்க்கத்தில் திருமணம் என்பது ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் ஏற்படும் வாழ்க்கை ஒப்பந்தமாகும். மாற்று மதத்தில் கல்யாணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று கூறுவது இஸ்லாத்தில் இல்லை. திருமணம் புரியவுள்ள ஆணும் பெண்ணும் ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இருவரும் தங்களது பரிபூரண சம்மதத்தை தெரிவிக்க வேண்டியது மிக அவசியமாக வலியுறுத்தப்பட்ட விஷயமாகும்.
கண்ணிப்பெண்ணாக இருப்பாளேயானால் அவள் தனது சம்மதத்தை மெளனம் மூலம் தெரிவிக்கலாம். அவளுக்கு விருப்பமில்லையெனில் கட்டாயம் சொல் மூலம் தெரிவிக்க வேண்டும். அவள் எந்த பதிலும் தராமல் மெளனம் சாதித்தால் அது சம்மதம் என்ற பொருளைத் தரும். இப்பெண்களை ‘பாகிரா’ என்று அழைப்பர்.
‘அயிம்மா’ பெண்களுக்கு அவர்களது சம்தமின்றி திருமணம் செய்து வைக்காதீர்கள். கன்னிப் பெண்களிடம் திருமணம் விஷயமாக அனுமதி பெற வேண்டும் என்று நபி(ஸல்) கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! ஒரு கன்னிப்பெண் (நாணாத்தால்) தெளிவாகச் சொல்ல வெட்கப்படுவாளே! என்று சிலர் கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவளது மெளனம் சம்மதமாகும் என்றார்கள். அறிவிப்பாளர்: ஆயிஷா, அப்பாஸ், அபூஹுரைரா(ரழி- அன்கும்) நூல்:புகாரி முஸ்லிம் அபூதாவூத், நஸயீ,திர்மிதி, இப்னுமாஜ்ஜா

இந்த நபிமொழி மூலம் ஏற்கனவே திருமணம் செய்த பெண்கள் தங்களது அடுத்த திருமணத்துக்கு தெளிவான சம்மதம் தெரிவிக்க வேண்டுமென்பதை அறியலாம். கன்னிப்பெண்கள் தங்களது சம்மதத்தை மெளனம் மூலம் தெரிவிக்கலாம். சம்மதம் இல்லையெனில் நிச்சயமாக வாய்விட்டு சொல்லியே ஆக வேண்டுமென்பதை உணரலாம். இவ்விதமாக மணப்பெண்ணின் சம்மதம் பெறாமல் நடத்தி வைக்கப்படும் திருமணம் இஸ்லாத்தில் செல்லத்தக்கதல்ல. அது முறிக்கப்படும்.

கன்சா(ரழி) என்ற அம்மையார் அறிவிக்கிறார்கள்; எனது தந்தை கிதாம்(ரழி) அவர்கள் எனக்கு பிடிக்காத இடத்தில் மணமுடித்துக் கொடுத்தார். நான் நபி(ஸல்) அவர்களிடம் வந்து இதனைக் கூறியபோது அந்த திருமணத்தை நபி(ஸல்) அவர்கள் ரத்து செய்தார்கள். இதே நிகழ்ச்சியை இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களும் அறிவிக்கிறார்கள். (முஅத்தாமாலிகி, புகாரி, அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜ்ஜா, பைஹகீ)

இவ்விதம் தனது தந்தையின் வற்புறுத்தலில் நடத்தப்பட்ட திருமணத்தை நபி(ஸல்) அவர்கள் மூலமாக ரத்து செய்யப்படவே கன்சா(ரழி) அவர்கள் அபூலுபாபா(ரழி) அவர்களை மணமுடித்துக் கொண்டார்கள் என்ற விபரம் அப்துர்ரஹ்மான் பின் யஜீத்(ரழி) அறிவிக்க இப்னுமாஜ்ஜா என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதே போல் ஒரு கன்னிப்பெண் சம்மதமின்றி அவளது தந்தையால் நடத்தி வைக்கப்பட்ட திருமணத்தை நபி(ஸல்) அவர்கள் ரத்து செய்ததாக அபூதாவூதில் இப்னு அப்பாஸ்(ரழி) கூற பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே எந்த முஸ்லிம் பெண்ணையும் அவளது முழு சம்மதமின்றி திருமணம் செய்து வைக்க இஸ்லாத்தில் இடமில்லை. அப்பெண்ணைப் பெற்றெடுத்த தந்தைக்கும் அனுமதியில்லை என்பதை தெளிவாக உணர்ந்து பெற்றோர்கள் நடந்து கொள்வது அவசியமாகும்.

மணமகளுக்குரிய தகுதிகள்

நீ நல்லொழுக்கமுள்ளவளை மணம் புரிவதன் மூலம் வெற்றியடைந்துகொள்! என நபி(ஸல்) அவர்கள் அறிவுரை பகன்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத்)

பெண்களை அவர்களின் அழகுக்காக மணமுடிக்காதீர்கள்; அவர்களின் அழகு அவர்களை அழித்துவிடலாம்; அவர்களின் செல்வத்திற்காக மணமுடிக்காதீர்கள்; அவர்களின் செல்வம் அவர்களை தவறச் செய்திடலாம்; நல்லொழுக்கத்திற்காக அவர்களை மணமுடியுங்கள்; நல்லொழுக்கமுள்ள அழகற்ற கருநிறத்து அடிமைப்பெண் (தீய ஒழுக்கமுள்ள பெண்ணைவிட) மேலானவள் என நபி(ஸல்) அவர்கள் விளக்கினார்கள். (அறிவிப்பு: இப்னு அம்ர்(ரழி) நூல்: இப்னு ஹிப்பான், அஹ்மத்)

மணமகனுக்குரிய தகுதிகள்

எவருக்கு திருமண வயது வந்து விட்டதோ அவர் திருமணம் செய்து கொள்ளட்டும். அது அவரது கண்களையும், வெட்கஸ்தலங்களையும் பாதுகாக்கும் அரணாக அமைகிறது. எவருக்கு திருமணம் செய்ய வசதிபடவில்லையோ அவர் நோன்பு வைத்துக்கொள்ளட்டும். (அறிவிப்பு: இப்னு மஸ்வூத்(ரழி) நூல்: புகாரி, முஸ்லிம், நஸயீ, தாரமி, பைஹகீ, அஹ்மத்)

இந்நபிமொழி ஆண்களுக்கு கூறப்பட்டதாகும். மணமகன் பெண்ணுக்காக மஹர், திருமண செலவு, வலீமா விருந்து என பல செலவு செய்யவேண்டியவனாகிறான். அது மட்டுமின்றி திருமணம் முடிந்த நேரம் முதல் தனது மனைவிக்காக உணவு, உடை, இருப்பிடத்திற்கான செலவுகள் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான். எனவேதான் மணமுடிக்கும் மணப்பெண்ணுக்கு தனது உடல் ரீதியான சுகத்தையும், பொருளாதார ரீதியான சுமையையும் சுமக்க தகுதியுடையவன் தனது திருமண வயது வந்ததும் திருமணம் செய்து கொள்ளலாம்; அதற்கான வசதியில்லாதபோது நோன்பு வைத்து தனது இச்சையை அடக்கவும் நபி(ஸல்) அவர்கள் அறிவுரை பகர்ந்தார்கள்.

எங்கள் மனைவிக்கு நாங்கள் ஆற்றவேண்டிய கடமைகள் யாவை? என நபி(ஸல்) அவர்களிடம் கேட்டபோது ‘நீ உன்ணும்போது அவளுக்கும் உணவளிக்க வேண்டும்; நீ ஆடை அணியும்போது அவளுக்கு ஆடை அணிவித்தல் வேண்டும்; அவளது முகத்தில் அடித்தலாது’ என நபி(ஸல்) அறிவுறுத்தினார்கள். (அறிவிப்பவர்: முஆவியா பின் ஹைதா(ரழி) நூல்: அபூதாவூத்)

எனவேதான் ஒருவேளை செல்வ செழிப்புள்ள மனமகள் ஒருவருக்கு மனைவியாக அமைந்தாலும் அவளது சொத்து பங்கில் அவளது உரிமையின்றி கணவன் கைவைக்க அனுமதியில்லை என இஸ்லாம் கூறுகிறது. மண முடிக்க நாடும் மணமகன் தான் மணக்கும் பெண்ணை உடல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதுகாக்கும் தகுதியை பெற்றிருப்பது அடிப்படை தகுதியாகும்.