Saturday, September 17, 2011

மஸ்ஜிதுகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம்

மஸ்ஜிதுகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம் என நெற்றிப் பொட்டில் அடிப்பது போல் எச்சரிப்பதைக் கண்டு கொள்ளாமல் தங்கள் தங்கள் சுய பெயர்களில் பதிவு செய்து ஆதிக்கம் செய்கின்றனர். அல்லாஹ்வின் தெளிவான இந்தக் கட்டளையைப் புறக்கணித்து ஒவ்வொரு பிரிவாரும் அல்லாஹ்வின் பள்ளிகளைக் கூறுபோட்டுள்ளனர். மற்றவர்களின் சொத்துக்களைப் போலிப் பத்திரங்கள் தயாரித்து தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் படுகிறபாடுகளை இப்போது ஊடகங்களில் பார்த்து வருகிறோம் அல்லவா? இங்கு கூட தங்களின் பண பலம் அரசியல் செல்வாக்குக் கொண்டு தண்டனையிலிருந்து சிலர் தப்பி விடலாம்.

ஆனால் அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமான பள்ளிகளை போலிப் பத்திரங்கள் மூலம் ஆதிக்கம் செய்து, அட்டூழியம் செய்கிறவர்கள் நாளை மறுமையில் அல்லாஹ்விடம் தப்ப முடியுமா? ஒருபோதும் தப்ப முடியாது. அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமான பள்ளிகளை இந்த அறிவீனர்கள் கூறு போட்டு ஆதிக்கம் செலுத்தி வருவது உண்மை தான். ஆயினும் நேர்வழி நடக்கும் முஸ்லிம்களின் கடமை என்ன? இதற்கு நபி(ஸல்) அவர் கள் 33:21 கூறுவது போல் வழிகாட்டவில்லையா? நிச்சயம் வழிகாட்டி இருக்கிறார்கள். அல்லாஹ்வின் வீடான கஃபதுல்லாஹ் முஷ்ரிக்குகளிலும் மிகக் கொடிய முஷ்ரிக்குகளான தாருந்நத்வா மதகுருமார்கள் கையில் சிக்கி இருந்தது. அங்கு எண்ணற்ற சிலைகளும், சமாதிகளும் நிறைந்து காணப்பட்டன.

இந்த நிலையிலும் நபி(ஸல்) அங்கு சென்று தான் அல்லாஹ்வைத் தொழுதார்கள். அப்போது அந்த தாருந்நத்வா குருகுல மடத்தின் தலைமை இமாமாகவும் அந்த மக்களால் அபுல் ஹிக்கம்-ஞானத்தின் தந்தை எனப் போற்றப்பட்ட, நபி(ஸல்) அவர்களால் அபூ ஜஹீல்- மடமையின் தந்தை என அடையாளம் காட்டப்பட்டவனும், இந்த அபூ ஜஹீலின் தோழர்களும் நபி(ஸல்) கஃபாவில் அல்லாஹ்வைத் தொழும்போது பெரும் துன்பங்களைக் கொடுத்தார்கள்.

ஒரு சமயம் நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ் தொழுது கொண்டிருக்கும்போது அவர்கள் மீது அழுகிய ஒட்டகக் குடலை அபூ ஜஹீல் வகையறாக்கள் போட்டதால் நபி(ஸல்) மூச்சுத் திணறி பெரும் துன்பத்திற்கு ஆளானார்கள். அந்த காஃபிர்களோ கைகொட்டிச் சிரித்து மகிழ்ந்தார்கள் என்ற வரலாற்றைப் பார்க்கிறோம்.

இதிலிருந்து நாம் பெறும் படிப்பினை என்ன? கஃபதுல்லாஹ் எண்ணற்ற சிலைகளைக் கொண்டும், சமாதிகளைக் கொண்டும் நிரப்பப் பட்டிருந்தாலும் அது அல்லாஹ்வின் வீடு என்பதில் எவ்வித மாற்றமும் பெறவில்லை. அதனால் தான் நபி(ஸல்) அங்கு சென்று மிகமிக ஆபத்தான, துன்புறுத்தல்கள் நிறைந்த நிலையிலும் அல்லாஹ்வைத் தொழுது தமது உம்மத்திற்கு வழி காட்டி இருக்கிறார்கள். சிலைகளும், சமாதிகளும் இருக்கும் நிலையிலேயே மதீனாவிலிருந்து கஃபாவை நோக்கியே தொழுதார்கள். இது இறைவனின் கட்டளையாகும்.

அதேபோல் அல்லாஹ்வின் பள்ளிகளைக் கூறு போட்டு அவரவர்கள் பெயர்களில் பதிவு செய்து பித்அத், குஃப்ர், ´ஷிர்க் போன்ற அட்டூழியங்களை நடைமுறைப்படுத்தி வந்தாலும் அவை அல்லாஹ்வின் பள்ளிகள் என்ற நிலையிலிருந்து மாறப் போவதில்லை.

எனவே நபி(ஸல்) அவர்கள் காட்டித் தந்த அழகிய முறைப்படி நேர்வழி நடக்க விரும்பும் முஸ்லிம்கள் அப்பள்ளிகளில் சென்று அல்லாஹ்வைத் தொழுவதே சமுதாய ஒற்றுமைக்கு வழி வகுக்கும். அவர்கள் எவ்வளவு பெரிய ´ஷிர்க், பித்அத்களில் மூழ்கி இருந்தாலும், அடிப்படை விஷயங்களில் தொழுகையில் நபி(ஸல்) காட்டித் தந்ததையே பின்பற்றுகின்றனர். ஐங்கால தொழுகைகளில், ரகாஅத்களில், ருகூஃ, சுஜூதுகளில், இருப்பில் நபி(ஸல்) காட்டித் தந்தபடிதான் செய்கின்றனர். 39:17,18 இறைக் கட்ட ளைகள்படி அவர்கள் செய்யும் இந்த அழகானவற்றில் நேர்வழி நடக்க விரும்பும் முஸ்லிம்கள் பின்பற்றுவதில் குர்ஆன், ஹதீஸுக்கு முரண்பட்ட செயல் ஒன்றுமில்லை.

ஒருவருடைய சுமையைப் பிரிதொருவர் சுமக்க மாட்டார் என்று குர்ஆன் 6:164, 17:15, 35:18, 39:7, 53:38 போன்ற பல இடங்களில் அல்லாஹ் நேரடியாகக் கூறியுள்ளான். தொழவைக்கும் இமாமின் பித்அத், குஃப்ர், ´ஷிர்க் காரணமாக அவரின் தொழுகை அவரது முகத்தில் எறியப்பட்டாலும், அவர் பின்னால் தொழும் நேர்வழி நடக்கும் முஸ்லிம்களின் தொழுகையில் அணுவளவு கூட குறைவு செய்ய மாட்டான் அல்லாஹ்.

அவர்கள் பின்னால் நின்று தொழக்கூடாது என்று சட்டம் சொல்லும் மதகுருமார்கள் 9:31, 42:21, 49:16 வசனங்களின் வழிகாட்டல்படி தர்கா, மத்ஹபினரை விட கொடிய ´ஷிர்க் செய்கிறவர்களாகவே இருக்கிறார்கள். காரணம் முன்னவர்கள் அல்லாஹ்வுக்கும் தங்களுக்குமிடையில் முன் சென்ற இமாம்கள், வலிமார்கள் போன்றோரை வசீலாவாக-இடைத்தரகர்களாக மட்டுமே ஆக்குகிறார்கள்.

இவர்களோ அல்லாஹ் விதிக்காத சட்டங்களை விதித்து 42:21 வசனப்படி அல்லாஹ்வுக்கே இணையாளர்களாக ஆகிறார்கள். 21:92, 23:52 இறைக் கட்டளைக்கு முரணாகச் சமுதாயத்தைப் பிளவுபடுத்துகிறார்கள். தீர்ப்பை மறுமைக்கென்று அல்லாஹ் ஒத்தி வைத்திருக்காவிட்டால் இங்கே அவர்களுக்கு மிகக் கடுமையான தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கும்; தீர்ப்பு மறுமையில் என்றிருப்பதால் இவ்வுலகில் அவர்கள் விருப்பப்படி 9:34 வசனம் கூறுவது போல் மக்கள் சொத்துக்களைத் தவறான முறைகளில் சாப்பிடுகிறார்கள். 49:16 வசனத்தில் அல்லாஹ் கூறுவது போல் அல்லாஹ்வுக்கே மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்க முற்படுகிறார்கள்.

குர்ஆன், ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என வாய் கிழியப் பேசும் இவர்கள் குர்ஆன், ஹதீஸ்படி நடப்பதில்லை என்பதே உண்மை. ஈமானுக்கு அடுத்து அடிப்படையான ஐங்காலத் தொழுகைகளையே உள்ளச்சத்தோடு, பேணுதலோடு அன்றாடம் தவறாமல் ஜமாஅத் தோடு சேர்ந்து தொழாத இவர்கள் வேறு எந்த மார்க்க விஷயங்களில் குர்ஆன், ஹதீஸைப் பின்பற்றப் போகிறார்கள்?

அல்லாஹ்வுக்குச் சொந்தமான பள்ளிகளை 18:28, 20:16, 25:43, 28:50, 38:26, 45:23, 79:40,41 இத்தனை இறைவாக்குகளில் மனோ இச்சைப் பற்றி எச்சரித்திருந்தும் அவற்றைக் கண்டு கொள்ளாமல் நிராகரித்து விட்டு தங்கள் மனோ இச்சை சரிகாணும் பெயர்களில் பத்திரப் பதிவு செய்து அபகரித்துக் கொண்டாலும் அவை அல்லாஹ்வின் பள்ளிகள்தான். இது அன்று குறைஷ் குஃப்பார்கள் அல்லாஹ்வின் வீடான கஃபதுல்லாஹ்வை அபகரித்து வைத்திருந்த செயலுக்கு ஒப்பானதாகும்.

மழை கற்றுத்தரும் பாடம்

உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் அமைதி நிலவட்டுமாக….

நாம் இந்த பதிவில் எடுத்திருக்கும் தலைப்பு மழை, வெய்யிலில் தெரியும் நிழலின் அருமை அது போன்று வானம் பார்த்த பூமியை கேட்டால் தெரியும் மழையின் அருமை.


சரி முதலில் மழை (Rain) எவ்வாறு உருவாகிறது என்று நாம் பாப்போம்.
வெப்பத்தின் காரணமாக கடல்கள், ஏரிகள், ஆறுகள் போன்றவற்றிலிருந்து எடுக்கப்படும் நீர் திரவ நிலையிலிருந்து நீராவி நிலைக்கு மாறி காற்றில் கலந்து மேல் சென்று பின்பு மேகங்களை உருவாக்குகின்றன. இதுவே பிறகு சுத்தமான நீர் மழையாக பெய்கிறது. அது அதோடு நின்று விடாமல் அந்த நீர் திரும்பவும் நீராவி ஆகி இப்படி ஒரு சுழற்சியாக நடைபெறும் இந்த நிகழ்வை நீர் சுழற்சி (The Water Cycle) என்று குறிப்பிடுவர்.

மழை பெய்வதினால் உயிரினங்களுக்கு பலவகையான நன்மைகள் உள்ளன, மழை உயிர் வாழ்வதற்கான ஆதாரம், ஆனால் இந்த மழை சிலகாலம் இல்லையெனிலும் உணவு பற்றாக்குறை போன்ற பல இன்னல்களை நாமே கண்ணெதிரே பார்க்கிறோம். மழை என்பதே இல்லையெனில் அதனால் ஏற்படும் தீமைகள் என்னவென்று சொல்லதேவை இல்லை அனைவரும் அறிந்ததே உயிரினங்கள் வாழவே முடியாத அளவிற்கு பூமியின் வெப்பம் அதிகமாகிவிடும். ஒரு பக்கம் முழுவதும் வெப்பமாகவும் ஒரு பக்கம் முழுவதும் கடல் நீராகவும் இருக்கும், அதாவது தற்போது இருக்கும் படியான சமநிலை படுத்தப்பட்ட பூமி இருக்கவே இருக்காது.

உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் நீரில் மூழ்கி அழியவும் கூடாது ஆனால் அவை அனைத்திற்கும் இன்றி அமையாத தேவைக்காக நீரும் தரப்படவேண்டும் என்ற நிலையில் இந்த மழையை தவிர வேறு எது சிறந்த வழி என்னவென்று கூறுங்கள் பாப்போம். இது ஏனோ தானோ வென்று நடைபெறுகிறது என்ற சந்தேகமின்றி அனைத்தும் தீர திட்டமிட்டே நடைபெறுகிறது.

இது உண்மையில் மாபெரும் சக்தியின் உன்னதமான அருட்கொடை என்பதை சந்தேகமின்றி என்று கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் மேலே செல்வோம்.

கடவுள் மறுப்பாளர்கள் கூற்றுப்படி முதல் மழை எப்படி பெய்திருக்கவேண்டும், இயற்கையாக (!?) உருவான ஆக்சிஜன் ஹைட்ரஜன் மூலக்கூறுகள் தானாக ஒன்றிணைந்து நீர்த்துளி உருவாகி பின் ஒவ்வொரு நீர்துளியாக அதிகமாகி கடல் உருவாகி இருக்க பிறகு பூமியிலுள்ள வெப்பத்தின் காரணமாக அவைகள் தங்களின் தன்மையை அதாவது திரவ நிலையிலிருந்து வாயு நிலைக்கு தானாக (!?) மாற்றி மேல் சென்று பிறகு பூமிக்கு தரவேண்டும்.

இவை அனைத்தும் தானாக உருவாகி இருக்குமானால் எப்படி இருக்கும் தெரியுமா? மேகம் எங்கு நீர் எடுக்கிறதோ அங்கு மட்டும் தான் மழை உருவாக வேண்டும், கடல், ஏரி, ஆறு போன்று நீர் உள்ள இடங்களிலிருந்து மேகம் நீர் எடுக்கிறது, உதாரணமாக கடல் நீர் மேகமாக மாருமானால் மழை கடலில் மட்டும் தான் பெய்யவேண்டும், அவ்வாறா நடக்கிறது இப்பூவுலகில், அதற்காக கடவுள் கொடுத்த ஒரு அமைப்புதான் காற்றில் மேகம் நகருதல்,எங்கிருந்து அது நீர் எடுத்தாலும் சுழன்று கொண்டு அனைத்து இடங்களுக்கும் மழையை தருகிறது, நம் ஊரில் உள்ள தண்ணீர் வண்டி என்ன செய்கிறது, அசுத்தமான நீரை சுத்தபடுத்தி அதை ஒரு வண்டியில் ஏற்று ஊர் முழுவதுமாக வளம் வருகிறது எங்கு தண்ணீர் வேண்டுமோ அங்கு அளிக்கிறது, இதே வேலையை செய்யத்தான் மழை என்ற ஒன்றை கடவுள் ஏற்படுத்தி தேவை படும் இடங்களில் பொழிய செய்கிறார், இந்த அமைப்பு எதற்காக நடக்கிறது அனைத்து உயிரினங்களும் வாழ வேண்டும் என்ற காரணத்திற்காக.

மேகத்தின் வேகம் என்பது இந்த பூமி சுழற்சியின் வேகத்தைவிட அதிகம் என்று கூட கூறலாம், ஏனெனில் பூமி தான் சுற்றும் போது தன்னுடைய வலிமண்டலதையும் இழுத்துக்கொண்டு சுற்றுகிறது, மேகம் என்பது பூமியின் வலிமண்டலத்தில் தான் உள்ளது. உதாரணமாக ஒருவர் மணிக்கு 10 கி மி வேகத்தில் நடக்கிறார் என்றால் அவர் உண்மையில் பூமியின் சுழற்சியையும் (529.75 kmph) சேர்த்து 539.75 கிலோ மீட்டர் வேகத்தில் நடக்கிறார் என்று தான் பொருள், இதை இங்கு நாம் குருப்பிடுவதற்கான காரணம் பூமிதான் சுற்றுகிறதே மேகம் எதற்காக நகர வேண்டும், அப்படி நகராமல் ஒரே இடத்தில் இருந்து விட்டால் என்ன நடக்கும் தெரியுமா தண்ணீர் இருக்கும் இடங்களில் மட்டுமே மழை கிடைக்கும், அப்படியெனில் உயிரினங்கள் இருக்குமா, நாம் தற்போது இருப்பது போன்ற எந்த குறையும் இல்லாமல் வாழ முடியுமா? இந்த தத்துவத்தை பார்க்கும், சிந்திக்கும் ஒரு மனிதன் என்ன உணருவான் இப்பூமியில் உயிரினங்களை வாழவைக்க மறைமுகமாகவோ அல்லது நேராகவோ ஒரு சக்தி உதவுகிறது என்று அடிப்படை நிலையை ஏற்று கொண்டுதான் ஆகவேண்டும், இல்லையெனில் மேகம் எதற்காக நகரவேண்டும் மழை எதற்காக பொழிய வேண்டும், இது போன்ற நாம் உணரவே முடியாத இவ்வுலகையும் இந்த தத்துவங்களையும் செயல்படுத்தி கொண்டிருக்கும் அந்த மாபெரும் சக்தியை அரைகுறையாக கூட உணரமட்டோம்.

இதில் முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் தற்போதைய அறிவியல் படி மழை பெய்ய மேகம் உருவானால் மட்டுமல்லாமல் ஏர்பான் (Airborne) என்ற ஒரு வகையான பாக்டீரியாவின் பங்கும் அதிகம் உள்ளதாம். உயிர்களை வாழவைக்க உதவுவது நுண்ணுயிரிகள், பூமியில் நீர் இல்லையெனில் உயிரினங்கள் இல்லை, நீர் இல்லையெனில் கடல் இல்லை, கடல் இருந்தாலும் வெப்பம் இல்லையெனில் மேகம் இல்லை, மேகம் இருந்தும் புவி ஈர்ப்பு விசை இல்லையெனில் மழை இல்லை. சுருங்க சொல்வதென்றால் ஒன்றில்லையேல் ஒன்றில்லை என்ற மிகவும் சிக்கலான ஆயிரக்கணக்கான அமைப்பை வைத்து கொண்டு இதுதான் முதலில் வந்தது அதுவும் தானாக வந்தது என்ற வாதம் எந்த அளவிற்கு அறிவுடையதாக இருக்கும் என்பதை நாம் உணரவேண்டும்.

பொதுவாக வெள்ளம் வறட்சி ஏற்படுதல் என்பது எப்போது என்பது நாம் அறிந்ததே இயற்கைக்கு முரணான (அதாவது உலக அமைப்பிற்கு பங்கம் விளைவிக்கும் பொழுது) இவைகள் நடைபெறும், குளோரோ ப்லோரோ கார்பன் அதிகமாக வெளியிடும் பொழுது, ஒரே இடத்தில் சுரங்கம் தண்டவாளம் போன்றவைகளுக்காக குண்டு வெடிப்புகளால் தொண்டபடுதல் போன்ற இயற்கை அமைப்பை சிதைக்கும் போதுதான் நமக்கு வெள்ளம் மற்றும் பூகம்பம் போன்ற பெரிய பாதிப்புகள் நடைபெறும். இதிலிருந்து நாம் விளங்கி கொள்வது மேலே குறுப்பிட்ட இந்த இயற்கை அமைப்பு என்பது எவ்வாறு ஏற்பட்டது. தானாக உருவான ஒன்று அதன் அமைப்பை மாற்றும் போது எதற்காக எதிர்மறை விளைவை ஏற்படுத்த வேண்டும். சாதரணமாக எதிர்மறை விளைவை ஏற்படுத்தாத அமைதியான அமைப்பை அது எப்படி பெற்றது என்பதை நாம் நன்கு சிந்திக்க வேண்டும். இவைகள் அனைத்தும் நடப்பது ஒரு காரணம் இல்லாமலா? இதை பார்க்கும் போதே தெரியவில்லையா ஒரு சக்தி தான் இதை இயக்குகிறது என்று.

மழை எதற்காக பெய்கிறது என்று யாரிடமாவது கேட்டால் அதற்கு பதில் உயிரினங்களுக்காக என்றுதான் கூறுவார்கள், இது உலகில் அனைவரும் அறிந்த நியதி என்று கூட கூறலாம், இணையத்தில் மழை ஏன் பெய்கிறது என்ற கேள்வியை பற்றி தேடினால், எப்படி உருவாகிறது எங்கிருந்து பெய்கிறது, என்னென்ன வகைகள் அதில் உள்ளன என்ற பதிலெல்லாம் கிடைத்தது, என்னுடைய கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை என்னுடைய கேள்வி:

மழை ஏன் பெய்கிறது? எதற்காக பெய்ய வேண்டும் என்பது தான்.
“அவர்கள் (இதையும்) கவனிக்கவில்லையா – நிச்சயமாக நாமே வறண்ட பூமியின் பக்கம் மேகங்கள் மூலமாக தண்ணீரை ஓட்டிச் சென்று அதன் மூலம் இவர்களும் இவர்களுடைய கால் நடைகளும் உண்ணக் கூடிய பயிர்களை வெளிப்படுத்துகிறோம். அவர்கள் (இதை ஆய்ந்து) நோட்டமிட வேண்டாமா? (அல் குர்ஆன் 32 : 27)”


Monday, September 5, 2011

இஸ்லாத்தின் பெயரால் போலிச் சடங்குகள்!!

நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம்? ஒரு கணம் சிந்திப்போமாக!


நாம் பெயரளவில் மட்டுமே முஸ்லிம்கள்!

புனித இஸ்லாத்தைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொள்ளும் நாம், மார்க்கத்தின் பெயரால் சம்பிரதாயங்களையும், சடங்குகளையும் பின் பற்றிக்கொண்டு நமது வசதிக்கேற்ப தொழுகை, நோன்பு போன்ற சில வணக்கங்களை மட்டும் செய்துவிட்டு நாமும் முஸ்லிம்கள் என மார்தட்டிக் கொள்கிறோம்.


உண்மையில் நாம் முஸ்லிம்களாக வாழ்கிறோமா?

அல்லாஹ்வை நமது ஏகநாயனாகவும், அவன் இறுதித்தூதரை நமது வாழ்வின் ஒரே வழிகாட்டியாகவும் ஏற்றுக்கொண்டுள்ள நாம், இஸ்லாத்தின் மூலாதாரங்களான அல்லாஹ்வின் அருள் மறையாம் அல்குர்ஆனையும் அவனது தூதரின் தூயபோதனையாம் அல் ஹதீஸையும் பின் பற்றுகிறோமா ? அவற்றின்படி செயலாற்றுகிறோமா?

இவற்றைப் பின்பற்றாது மனம்போன போக்கில் விரும்பியவாறு வாழ்ந்துவிட்டால் நாம் உண்மையான முஸ்லிம்களாக இருக்க முடியுமா? என நாம் நம் நெஞ்சைத் தொட்டு நம்மையே நாம் கேட்டுப்பார்ப்போம். எத்தனை சதவிகிதம் நாம் பின்பற்றுகிறோம் எனத் தெரிந்துவிடும்.


இதோ இஸ்லாத்தின் பெயரால் நாம் செய்யும் பித்அத்துகள்! சடங்குகள்!!

முதன் முதலில் நமக்குக் குழந்தை பிறந்ததும் மதபோதகர் ஒருவரை அழைத்து பொருள் புரிந்தோ புரியாமலோ அழகாகத் தெரியும் ஒருபெயரை தேர்வு செய்து பாத்திஹா, துஆ ஓதி பெயர் சூட்டி மகிழ்கிறோம்.

பின்னர் அரபி மத்ரஸாக்களில் குர்ஆன் ஓதுவதற்காக அனுப்பிவைக்கிறோம். எப்படி ஓதிவருகிறார்கள்? என்னென்ன மார்க்க அறிவுகளைப் பெற்று வருகிறார்கள்? என்பதை எந்தப் பெற்றோரும் கவனிப்பதே இல்லை. பிற்காலத்தில் கல்லூரியில் காலெடுத்து வைக்கும் நாட்களில் சரியாக ஓதத்தெரியாததால் மறந்துவிட்டது என பரிதவித்து ஓலமிடும் பலரை நாம் இன்று காணமுடிகிறது.


அது மட்டுமா?

பிள்ளைகளுக்கு ஊர்வலம் நடத்தி சுன்னத் வைபவம், புனித நீராட்டு விழா, திருமண வைபவங்கள் போன்றவற்றை சீதனப் பகட்டுகள், மேளதாளங்கள், வாணவேடிக்கைகள், பாட்டுக்கச்சேரிகள் என ஊரே வியக்கும்படி நமது வீட்டு வைபவங்களை குருமார்களின் தலைமையில் ஃபாத்திஹா, துஆ போன்றவற்றை ஓதி கோலாகலமாக அரங்கேற்றி பெருமைப்படுகிறோம்.

நடை மவ்லிது, விடி மவ்லிது


நல்லவை நிகழவும், பயணம் போகவும் நாடியது நடக்கவும் நடை மவ்லிது, விடி மவ்லிது ஓதி ‘பரக்கத்தும் பொருளும்’ குவிய விடிய விடிய சினிமா மெட்டுகளில் கச்சேரிகள் நடத்தி அமர்க்களப்படுத்துகிறோம்.


ராத்திபு, குத்பிய்யது, ஞானப்பாடல்

இவை போதாது என இறைவனின் விசேச அருளைப்பெற ராத்திபு, குத்பிய்யத்து, தரீக்காக்களின் பல்வேறு செய்குகள் அரங்கேற்றிய திக்ருகள், ஹல்காக்கள், ஞானிகள் இயற்றிய ஞானப்பாடல்கள், 4444 தடவைகள் என்ற எண்ணிக்கையில் ஸலவாத்துந் நாரியாவெனும் நரகத்து ஸலவாத்துகளை ஓதி வருகிறோம்,

மாயமந்திரங்கள்

பேய் பிசாசுகளை ஓட்ட தாவீசுகள், முடிச்சுக் கயிறுகள், மாய மந்திரங்களை தட்டைப் பீங்கானில் இஸ்முகள் என்ற பெயரில் எழுதிக் கரைத்துக் குடிப்பது, அரபி எழுத்துகளில் அழகாக வடித்து வீட்டுச்சுவர்களில் மாட்டுவது, நோய் நொடிகள் தீர பெண்களுக்கு தனியாக ஓதிப் பர்ப்பது போன்ற ஆயிரமாயிரம் போலிச் சடங்குகளை இஸ்லாத்தின் பெயரால் அரங்கேற்றி அப்பாவி மக்களை ஏமாற்றிவரும் அவலக்காட்சிகளையும் காணுகிறோம்.

இவையெல்லாம் போலிச்சாமியார்கள், சாயிபாப்பாக்கள், வேடதாரிகள் நடத்தும் கபடநாடகங்கள்! ஏமாற்று வித்தைகள்!! கம்பியெண்ணவைக்கும் ஈனச் செயல்கள்!!


போலிகளிடம் ஏமாறாதீர்!


இவர்கள் வழியில் ஷெய்குகள்.மகான்கள் என்ற போர்வையில் இறையருள் பெற்ற மனிதப்புனிதர்கள் என்ற மாயையை எற்படுத்தி மக்களை ஏமாற்றும் எத்தர்களை இனம் கண்டு கொள்ள வேண்டாமா? இவர்களிடம் மண்டியிட்டு ஏமாறும் அப்பாவி ஆண்களையும், பெண்களையும் என்னென்பது?


இவற்றையெல்லாம் அறிவார்ந்த நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டாமா?
மரணச்சடங்குகளும் கர்மாதிகளும்


மரணச் சடங்குககளோ இந்துக்களை மிஞ்சுமளவுக்குச் சென்று விட்டது. மூன்றாவது நாள் ஃபாத்திஹா, பத்தாவது நாள் ஃபாத்திஹா, நாற்பதாவது நாள்-ஃபாத்திஹா என அரபி மத்ரஸாக்களில் படிக்கும் அப்பாவி மாணவர்களை வாடகைக்கு அமர்த்தி முழுக் குர்ஆனையும் ஓதுவது, இவற்றைக் கடன் பட்டாவது, சொத்துகளை விற்றாவது விருந்து வைபவங்களை கோலாகலமாக நிறைவேற்றி கர்மாதிகளை நடத்தி வருவதையும் பர்க்கிறோம்.


அகிலத்திற்கெல்லாம் வழி காட்டும் வான்மறை இதற்காகவா அருளப்பட்டது ?
முகவரியில்லா மகான்கள்


அடுத்து ஊர் பெயர் வரலாறே இல்லாத கப்ருகளுக்கு தெய்வீகப் பெயர்சூட்டி, அவ்லியாக்கள், ஷெய்குமர்ர்கள், நாதாக்கள் என அங்கீகாரமளித்து ஆண்டுதோறும் உற்சவங்கள், சந்தன உரூஸ்கள், கூடு கொடிகள், யானை ஊர்வலங்கள், கரக ஆட்டங்கள் என ஊரே அமர்க்களப்படும்படி விழாக்கள் எடுப்பதையும் கண்டு வருகிறோம்.


பாட்டுக்கச்சேரியும் நடனமும்

கப்ருகளைச் சுற்றி கராமத்துகளை விளக்கும் பாட்டுக்கச்சேரிகள், கதா காலட்சேபங்கள், மக்களை மயக்கும் நடன நிகழ்ச்சிகள், கப்ரு ஆராதனைகள், நேர்ச்சை தபர்ருக்கள், விஷேச மந்திரங்கள், கந்தூரிக் காட்சிகள் என அனாச்சாரங்களை வகைப்படுத்திக் கொண்டே போகலாம். இவையெல்லாம் மார்க்கத்தின் பெயரால் அர்ச்சனை செய்யப்படுகின்ற கைங்கரியங்கள் என்பது தான் வேதனையிலும் வேதனை!


பக்கவாத்தியங்கள்

இதற்கு போலி மத குருமார்களும், ஷைகுமார்களும், முல்லாக்களும் வயிறு வளர்க்கும் சில சில்லரை உலமாக்களும் பக்கவாத்தியங்களாக விளங்குவது தான் வேடிக்கையாக உள்ளது.


பிறந்த நாள் விழாக்கள்

இந்துக்கள், கிறித்தவர்கள் ஆகியோரின் எல்லாப்பழக்க வழக்கங்களையும் தவறாது பின்பற்றி ‘பிறந்த நாள் விழா, இறந்த நாள் விழா, ஆண்டு விழா’ என பல்வேறு விழாக்களையும் விடாது நடத்திக்கொண்டு நாங்கள் தான் உண்மையான முஸ்லிம்கள் என வீர முழக்கமிடுகிறோம்.

இவை போதாதென்று நபிகள் நாயகம் பிறந்த நாள் விழா, கௌதுல் அஃலம் நினைவு விழா, ரிஃபாயி ஆண்டகை விழா, நாகூர் நாயக விழா, காஜா முயீனுத்தீன் ஜிஸ்தி உரூஸ் விழா, மோத்தி பாவா ஆண்டு விழா, குணங்குடி மஸ்தான் விழா, பொட்டல் புதூர் மைதீன்(யானை) ஆண்டகை விழா, ஆத்தங்கரை செய்யிதலி அம்மா விழா, பீமாப்பள்ளி பீஅம்மா விழா, பீடி மஸ்தான் விழா, தக்கலை பீரப்பா விழா, மெய்நிலை கண்ட ஞானிகள் விழா என மிகவும் பக்தியோடு தேசிய விழாக்களாக கரக ஆட்டங்களுடன் யானை ஊர்வலம் சகிதமாக கொண்டாடப்பட்டு வரும் புதுமையான விழாக்களையும் நாடெங்கிலும் பரவலாகக் காண முடிகிறது.


ஞானமர்ர்க்கத்தின் பெயரால் தீட்சைகள்

நம்மை வழி நடத்தும் குருமார்களோ நமது பலவீனங்களையும், அறியாமையையும் பயன்படுத்திக்கொண்டு சுவர்க்கத்திற்கு வழிகாட்டுகிறோம் எனக் கூறி ஆதாயம் தேடி வழிகெடுத்து வருகின்றனர். பால் கிதாபு என்றும், தாவீசு என்றும், இஸ்மு என்றும், தீட்சை யென்றும், பைஅத் என்றும், முரீது என்றும் கூறி ஞான மார்க்கத்தின் பெயரால் நம்மை அதல பாதாளத்திற்கு அழைத்துச் செல்கின்றனர்.

பித்அத்கள் (புதுமைகள்) பெயரால் சமுதாயத்தில் அரங்கேறிவிட்ட சீர்கேடுகளைப் பார்த்ததீர்களா?


விஞ்ஞானயுகத்தில் கற்காலம்

விஞ்ஞானத்தின் உச்சிக்குச் சென்று வியத்தகு விந்தைகள் புரியும் இந்த அறிவியல் உலகில் வாழ்ந்து கொண்டு கற்கால மனிதர்களைப்போல் இயங்கும் நம் மக்களின் அறியாமையையும் பேதமையையும் என்னென்பது? இஸ்லாம் கூறும் அறிவியல் நுட்பங்களையும், அற்புதமான தத்துவங்களையும் தனிசிறந்த நாகரிகத்தையும் மிக உயர்ந்த கலாச்சாரத்தையும் அலட்சியப்படுத்தும் அவல நிலையை யாரிடம் சொல்வது?

இந்த போலிச் சம்பிரதாயங்களையும், சடங்குககளையும் புனித இஸ்லாம் அனுமதிக்கிறதா? இவற்றிற்கெல்லாம் சாவு மணியடிக்க வேண்டாமா? கண்மூடித்தனமான பழக்கங்களையெல்லாம் மண் மூடச்செய்ய வேண்டாமா? குர்ஆனிலோ ஹதீஸ்களிலோ இவற்றுக்கெல்லாம் ஏதேனும் ஆதாரங்கள் உள்ளனவா? என்றால் இல்லவே இல்லை. பின் எங்கிருந்து இவை இறக்குமதியாயின? யூதர்கள், கிறித்தவர்கள், இந்துக்கள் போன்ற மாற்றாரிடமிருந்து படிப்படியாக இறக்குமதியாகி தொற்றிக் கொண்ட சாத்திரங்கள்! ஒட்டிக்கொண்ட நோய்கள்!! பேயாட்டம் போடும் போலிச்சடங்குகள்!!!


இதோ ஒரு கணம் சிந்திப்பீர்! நாம் இந்துக்களா ? முஸ்லிம்களா ?


1. அங்கே சிலை வணக்கம் : இங்கே கப்ரு வணக்கம்
2. அங்கே தேர் திருவிழா : இங்கே சந்தனக்கூடு
3. அங்கே பால் அபிசேகம் : இங்கே சந்தன அபிசேகம்
4. அங்கே சாம்பல் திருநீறு : இங்கே சந்தனத் திருநீறு
5. அங்கே சிலைக்குப்பட்டுப்புடவை : இங்கே கப்ருக்குப்பட்டுத்துணி
6. அங்கே பூமாலை பத்தி ஆராதனை : இங்கேயும் பூமாலை பத்திகள்
7. அங்கே குத்துவிளக்கு : இங்கேயும் குத்து விளக்கு
8. அங்கே அம்மன் முன் சாஷ்டாங்கம்: இங்கே கப்ரின்முன் சாஷ்டாங்கம்.
9. அங்கே கோயிலைச் சுற்றி வருதல் : இங்கே கப்ரை சுற்றி வலம்வருதல்
10. அங்கே சர்க்கரை கற்கண்டு பிரசாதம்: இங்கே சர்க்கரை பாயாசம் தபர்ருக்
11. அங்கே நேர்ச்சை காணிக்கை : இங்கேயும் நேர்ச்சை காணிக்கை
12. அங்கே சாமியிடம் வேண்டுதல் : இங்கே கப்ரிலே வேண்டுதல்
13. அங்கே பிள்ளைக்காக பூஜை : இங்கே பிள்ளைக்காகப் பிரார்த்தனை
14. அங்கே குழந்தைக்காக தொட்டில் : இங்கேயும் தர்காவில் தொட்டில்
15. அங்கே திருப்பதி மொட்டை : இங்கேயும் தர்காவில் மொட்டை.
16. அங்கே மயிலிறகு மந்திரம் : இங்கேயும் மயிலிறகு ஆசீர்வாதம்
17. அங்கே தீட்சை : இங்கே முரீது, பைஅத்
18. அங்கே மஞ்சள் கயிறு தாலி : இங்கே தங்கம்-கருக மணித்தாலி
19. அங்கே பக்திப்பாடல் : இங்கே மவ்லிது ராத்தீபு பைத்து
20. அங்கே சுப்ரபாதம் : இங்கே ஞானப்பாடல்.
21. அங்கே ஜோதிடம், ஜாதகம் : இங்கே பால்கிதாபு, இஸ்முகிதாபு
22. அங்கே நல்ல நாள், ராவு காலம் : இங்கே நஹ்ஸு நாள், ராவு காலம்.
23. அங்கே மார்கழி மாதம் பீடை : இங்கே ஸஃபா மாதம் பீடை
24. அங்கே கழுத்தில் கையில் தாயத்து : இங்கேயும் கழுத்தில், கையில் தாவீசு
25. அங்கே சாமி ஆடுவார் : இங்கே பே ஆடும்.
26. அங்கே சாமி அருள் வாக்கு : இங்கே அவ்லியா கனவில் அருள்வாக்கு.
27. அங்கே தீமிதி உண்டு : இங்கேயும் முஹர்ரம் மாதத்தில் தீமிதி உண்டு.
28. அங்கே திதி திவசம் : இங்கே ஃபாத்திஹா, கத்தம்.
29. அங்கே சரஸ்வதி, லட்சுமி படங்கள் : இங்கே நாகூர், அஜ்மீர் படங்கள்,
30. அங்கே துவஜா ரோகனம் கொடி : இங்கே நாகூர் அஜ்மீர் கொடியேற்றல்.
31. அங்கே வீட்டு முகப்பில் ஓ மந்திரம் : இங்கே வீட்டில் 786 மந்திரம்.
32. அங்கே விநாயகர் ஊர்வலம் : இங்கே மீலாது, யானை ஊர்வலம்.
33. அங்கே காவடி ஊர்வலம் : இங்கே அல்லாஹ்சாமி ஊர்வலம்.


இவை மட்டுமா? இன்னும் எத்னை எத்தனையோ? சடங்குகள் !


இவ்வாறு ஆயிரமாயிரம் மதச்சடங்குகள் நம்மிடம் புரையோடிப் போய்விட்டன. நவூது பில்லாஹ்! வல்லான் அல்லாஹ் நம் சமுதாய மக்களைக் காப்பானாக! இப்போது சொல்லுங்கள்! நம்மிடம் இஸ்லாம் இருக்கிறதா? நாம் இஸ்லாத்தில் இருக்கிறோமா? நாம் முஸ்லிம்களாக வாழ்கிறோமா? போலிகளாக வாழ்கிறோமா?


முஸ்லிம்கள் எங்கே இருக்கிறார்கள்?

இந்திய விடுதலைக்கு வித்திட்ட அல்லாமா இக்பால் கூறுகிறார்:-
‘முஸ்லிம்கள் முஸ்லிம்கள் என்று கூப்பாடு போடுகிறார்கள்!
செயல்களில் சம்பிதாயச் சடங்குகளில நாம் இந்துக்களாக வாழ்கிறோம்.
ஆடைகளில் கலாச்சாரங்களில் மேலை நாட்டு மோகத்தில் கிறித்தவர்களாக வாழ்கிறோம்! வாணிபத்தில் வியாபார முறைகளில் யூதர்களாக வாழ்கிறோம்! அவ்வாறாயின் முஸ்லிம்கள் எங்கே இருக்கிறார்கள்? ‘முஸ்லிம்கள் எங்கே இருக்கிறார்கள்?’


‘அவர்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டே (அவனுக்கு) இணையும் கற்பிக்கிறார்கள்.’ (அல்-குர்ஆன்12:106) என்ற மறை வசனமும்,

‘யார் எந்த சமுதாயத்தைப் பின்பற்றி வாழ்கிறார்களோ அவர்கள் அந்த சமுதாயத்தைச்சார்ந்தவர்களே!’ (நூல் அபூ தாவூது) என்ற நபி மொழியும் இன்று மிகவும் சிந்திக்க வேண்டிய வைர வரிகள்!

இவற்றையெல்லாம் அசை போட்டு சிந்தித்து சீர்தூக்கி நமது அறிவிற்கேற்ற உயரிய மார்க்கமாம் தூய இஸ்லாத்தை வழுவாது பின்பற்றி குர்ஆன் சுன்னாஹ் வழியில் உண்மை முஸ்லிம்களாக வாழ்வோமாக!


வாருங்கள்.இன்று நாம் சபதம் ஏற்போம் !
அறிவுக்கேற்ற மார்க்கமாம் இஸ்லாத்தை நோக்கி அகில உலகமும் மிக வேகமாக வரும் இந்த கணினியுகத்தில், முஸ்லிம்களாகிய நாம், இனியும் அறிவுக்கே பொருந்தாத மூட நம்பிக்கைகளை நம்பி,

சடங்கு சம்பிரதாயங்களைச் செய்து மோசம் போக மாட்டோம்! போலி மதவாதிகளால் ஏமாற மாட்டோம்!! என சபதம் ஏற்போமாக!

இஸ்லாத்தின் தூய கொள்கைகளை உயிருள்ளவரை உறுதியுடன் பின்பற்றி அறநெறி வழுவாது வாழ்வோம்.
என இன்று வீரசபதம் ஏற்போமாக!

‘இஹ்தினஸ்ஸராத்தல் முஸ்தகீம்’

இறைவா! எங்களுக்கு நேரான வழியைக் காட்டுவாயாக! (அல்குர்ஆன்: 1:06)

رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَة ً وَفِي الآخِرَةِ حَسَنَة ً وَقِنَا عَذَابَ النَّار

‘ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனத்தன் வஃபில் ஆகிரத்தி ஹஸனத்தன் வகினா அதாபந்நார்’
எங்கள் இறைவா! எங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நன்மையை நல்கும் நல் வாழ்வை வழங்குவாயாக! (அல்குர்ஆன்: 2:201)